Published:Updated:

தமிழக அரசியலின் முக்கிய முடிவுகளுக்கு முகம்தந்த இடம்! - சென்னையின் வரலாற்று அடையாளம் `சீரணி அரங்கம்’

சீரணி அரங்கம்

``தமிழ்நாட்டு அரசியலில் முக்கியமான முடிவுகளுக்கு முகம்தந்த இடம். அதைத்தாண்டி இந்திய அரசியல் வரலாற்றில் பல திருப்பங்களுக்கும், விருப்பங்களுக்கும் விதை தூவிய இடமும் சீரணி அரங்கம்.”- நாஞ்சில் சம்பத்

தமிழக அரசியலின் முக்கிய முடிவுகளுக்கு முகம்தந்த இடம்! - சென்னையின் வரலாற்று அடையாளம் `சீரணி அரங்கம்’

``தமிழ்நாட்டு அரசியலில் முக்கியமான முடிவுகளுக்கு முகம்தந்த இடம். அதைத்தாண்டி இந்திய அரசியல் வரலாற்றில் பல திருப்பங்களுக்கும், விருப்பங்களுக்கும் விதை தூவிய இடமும் சீரணி அரங்கம்.”- நாஞ்சில் சம்பத்

Published:Updated:
சீரணி அரங்கம்

தமிழ்நாட்டில் ‘மெரினா - போராட்டம் - அரசியல் நிகழ்வுகள்’ இம்மூன்றும் பிரிக்கமுடியாத ஒன்று. அதில் பல அரசியல் நிகழ்வுகளுக்குப் போராட்டக் களமாக மெரினாவின் `சீரணி அரங்கம்’ இருந்தது ஒரு காலம். சீரணி அரங்கம் அண்ணா ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. அண்ணா உருவாக்கிய `சீரணி படை’ என்கிற அமைப்புதான் சீரணி அரங்கம் என்கிற கட்டடத்தைக் கட்டியது. இங்கேதான் அரசியல் பொதுக் கூட்டங்கள், விழாக்கள், மத நிகழ்ச்சிகள் என்று தொடர்ந்து நடந்து வந்தன. 30 ஆண்டுக்கால அரசியல் அதிரடிகளுக்கு அந்த மேடைதான் மௌன சாட்சியாக இருந்துவந்தது.

சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில், இதே கடற்கரையில் காந்தி, பாரதி, சுப்ரமணிய சிவா போன்ற தேசியத் தலைவர்கள் முழங்கிய இடத்துக்கு `திலகர் கட்டம்’ என்று பெயர் வைத்து அழைத்தார்கள். இதன் அருகேதான் சீரணி அரங்கத்தை அந்நாளில் அமைத்திருந்தனர். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்ற சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசியல் தலைவர்கள் இந்த சீரணி அரங்கில் பேசியிருக்கிறார்கள்.

மிசாவுக்குப் பின்பு, `நேருவின் மகளே வருக, மறப்போம் மன்னிப்போம்’ என இந்திராவை தி.மு.க தலைவர் விளித்த சரித்திர நிகழ்வு இங்குதான் நடந்தது. மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தது குறித்துப் பேசி, `இனி அப்படி நடக்காது’ என ஜெயலலிதா பேசியதும், அதன் பின்னர் தமிழ்நாட்டில் அவர் ஆட்சி மலர்ந்த நிகழ்வு நடந்ததும் சீரணி அரங்கில்தான். தி.மு.க செங்குத்தாகப் பிளந்து ம.தி.மு.க உதயமானபோது, விடிய விடிய அண்ணாசாலை வழியாக வந்த பேரணி அதிகாலையில் மெரினா சீரணி அரங்கில் நுழையும்வரை நாஞ்சில் சம்பத் 7 மணி நேரத்துக்கும் பேசிய நிகழ்வும் இங்கு நடந்தது.

கலைஞர் கருணாநிதி- அண்ணா
கலைஞர் கருணாநிதி- அண்ணா

இப்படியாக தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் அழியா சுவடாக நிலைத்திருக்கும் சீரணி அரங்கம் குறித்து நாஞ்சில் சம்பத், ``தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு ஒரு மிகப்பெரிய வரலாற்று அடையாளம் சீரணி அரங்கம். அந்த சீரணி அரங்கத்தில் விடுதலைப் போராட்டக் காலத்தில் அண்ணல் காந்தி பேசியிருக்கிறார். அறிஞர் பெருந்தகை அண்ணா பேசியிருக்கிறார். `கட்டுபாடு இல்லாத கட்சி தி.மு.க’ என்று காங்கிரஸ், தி.மு.க-வின்-மீது குற்றச்சாட்டு வைத்த காலகட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் சங்கமித்திருந்த சீரணி அரங்கில் அண்ணா பேசும்போது `எழுந்து நில்லுங்கள்’ என்றார். அந்தக் கூட்டம் அப்படியே எழுந்து நின்றது. ‘அமருங்கள்...’ என்றார். அந்தக் கூட்டம் அப்படியே அமர்ந்தது. ‘இந்த கூட்டத்தைத்தான் கட்டுப்பாடு இல்லாத கூட்டம் என்று காங்கிரஸ் சொல்கிறது’ என்று காங்கிரஸுக்கு பதில் சொல்வதற்கு இந்த நிகழ்ச்சியை அண்ணா அன்றைக்குப் பயன்படுத்திக் கொண்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த சீரணி அரங்கத்தில் எனக்கு நினைவு தெரிந்த பிறகு மண்டல் கமிஷன் பரிந்துறையை நிறைவேற்றினார் விஷ்வனாந் பிராதாப் சிங் என்கிற இந்தியாவின் பிரதம அமைச்சர். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு செய்த வி.பி.சிங் அரசை குறிப்பிட்ட சமூகத்தினரும், பா.ஜ.க-வினரும் கொட்டி கவிழ்த்தார்கள். அதன் பின்பு வி.பி.சிங் நாடு முழுவதும் நீதி கேட்டு வந்தார். அவர் முதன்முதலாக வந்த இடம் சென்னை. அன்று கூடிய கூட்டம் அதற்கு முன்னும், பின்னும் கூடியதில்லை. அதுமட்டுமல்ல வி.பி.சிங் அன்றைக்குப் பேசிய பேச்சும், இளமை காலத்திலிருந்து என் போன்றவர்களுக்கு ஏற்பட்ட தாக்கமும், பா.ஜ.க போன்ற வகுப்புவாத கட்சியின்மீது கோபத்தையும், வெறுப்பையும் அந்த கூட்டத்திலிருந்து கிடைக்கப் பெற்றோம்.

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

அந்த சீரணி அரங்கில்தான் ஏப்ரல் திங்கள் 16, 1994-ல் ‘எழுச்சி நாள்’ பேரணி என்று அண்ணன் வைகோ தி.மு.க.வி-லிருந்து நிராகரிக்கப்பட்ட காலக்கட்டத்தில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். மறுமலர்ச்சி தி.மு.க உதயமாகத நிலையில், கருப்பு சிவப்பு கொடியை கையில் ஏந்தினால் வன்முறை நிகழ வாய்ப்பிருக்கிறது என்று கருதப்பட்ட ஒரு வேளையில், கையில் கருப்பு சிவப்பு கொடிகளுடன் வைகோவை நம்பி அன்றைக்கு அணி வகுத்தது சீரணி அரங்கத்தில்தான். அந்த மகத்தான பேரணிக்கு முகம் தந்தவர் படுகொலைசெய்யப்பட்ட ராயபுரம் ஏழுமலை. அந்த நிகழ்ச்சி நடத்திய அடுத்த நாளில் கொலைசெய்யப்பட்டார். இந்திய வரலாற்றில் ஒரு தலைவர் பேசுகிறார் என்றால் மாலை ஐந்து அல்லது ஏழு மணிக்கு பேசுவார். ஆனால், ஐந்து மணிக்கு பேரணி, பொதுக்கூட்டம் என்று அறிவித்து வைகோ ஒலிபெருக்கி முன்னால் வந்து நின்ற நேரம் காலை ஐந்து மணி. அதற்கு முன்பு 7 மணி நேரம் தொடர்ந்து நான் பேசினேன். சீரணி அரங்கில் அன்று நான் பேசியது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி.

அதன் பிறகு வைகோ அவர்கள் தலைமையில் நான் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த வேளையில், அண்ணாவின் கனவு திட்டமான ‘சேதுசமுத்திர திட்டம்’ நிறைவேற்ற வேண்டுமென்று வைகோ தீவிரமாக முயற்சி எடுத்தார். பா.ஜ.க ஆட்சியில் அடல் பிஹாரி வாஜ்பாய் இருந்த அந்த நாளில், அதற்கான இசைவை அவர் தெரிவித்தார். அதன்பின்பு சென்னை கடற்கரையில் மாநாடு போல் ஒரு கூட்டத்தை கூட்டி, அந்தக் கூட்டத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய், லால் கிஷான் அத்வானி, வாழப்பாடி ராமமூர்த்தி என தேசிய ஜனநாயக தலைவர்கள் எல்லாம் கலந்துகொண்டனர். அப்போது சேதுசமுத்திர திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அடல் பிஹாரி வாஜ்பாய் அறிவித்தது ஒரு பொதுக்கூட்டத்தில்தான். அரசு திட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிவிப்பார்களே தவிர... ஒரு பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம் சேதுசமுத்திரத்திட்டம். அன்றைக்கு வைகோவும், தலைவர் கலைஞரும் எதிரும், புதிருமாக இருந்த காலகட்டத்தில் கலைஞரைப் பெருமையாக வைகோ பார்த்தார். அதை மறக்கமுடியாது.

இந்திரா காந்தி, கருணாநிதி
இந்திரா காந்தி, கருணாநிதி

மெரினா கடற்கரையில் 1986-ஆம் ஆண்டு ‘கடற்கரை கவிஞர்கள் மன்றம்’ என்ற ஒரு மன்றம், கவிதை போட்டி நடத்தியது. அந்த கவிதை போட்டியில் சென்னைக்கு பஞ்சம் பிழைக்க வந்த நானும் கலந்து கொண்டேன். ‘இந்திராவின் மரணம்’ எனும் போட்டியின் தலைப்பில் முதல் பரிசு பெற்றேன். அதிமுக-வோடு வைகோ உறவு வைத்து கொண்டதற்கு பிறகு, வைகோவும், ஜெயலலிதாவும் அதே சீரணி அரங்கில் ஒரு மேடையில் பேசிய காட்சியும் என் நினைவுக்கு வருகின்றன.

இவ்வாறாக தமிழ்நாட்டு அரசியலில் முக்கியமான முடிவுகளுக்கு முகம் தந்த இடம் சீரணி அரங்கம். அதைத்தாண்டி இந்திய அரசியல் வரலாற்றில் பல திருப்பங்களுக்கும், விருப்பங்களுக்கும் விதை தூவிய இடமும் சீரணி அரங்கம்தான்.

எமர்ஜென்சியை கொண்டு வந்த அன்னை இந்திராவை, கலைஞர் அவர்கள் தேர்தலில் காங்கிரஸுடன் உறவு வைத்துக்கொண்டு, ‘நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக...’ என்று கடந்த காலங்களை கசக்கி எறிந்துவிட்டு, கலைஞர் இந்திராவோடு கை குலுக்கிய வேளையில், அந்த சீரணி அரங்கில் கலைஞர் முன்னிலையில், ‘தெரிந்தோ தெரியாமலோ நெருக்கடி நிலை காலத்தில் ஏதாவது தவறுகள் நடந்திருக்குமானால், அந்த தவறுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

திலகர் திடல்
திலகர் திடல்

அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று எமர்ஜென்சி கொண்டு வந்த இந்திராவை மன்னிப்பு கேட்க வைத்ததும் அந்த சீரணி அரங்கம்தான். இப்படி என் வாழ்நாளில் பல நடந்திருக்கிறது. அதில் ஒரு பங்கேற்பாளனாக கலந்துகொண்டது எல்லாம் என் நினைவுக்கு வருகின்றன.

பல அதிசயங்களைம், ஆச்சர்யங்களையும் உள்வாங்கிக் கொண்ட சீரணி அரங்கத்தில் இன்றைக்கு பொதுக்கூட்டம் கூட்ட முடியவில்லை. பொதுமக்கள் சங்கமிக்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டின் முதலைமைச்சர் முயற்சிசெய்து வரலாற்று பெருமைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, அந்த சீரணி அரங்கத்தை நவீன வடிவில் கட்டவேண்டும். அதில் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் நடத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கி தருவது காலத்தின் தேவை மட்டுமல்ல... அது ஜனநாயகத்தை அழகாக்கும் என்பதை நம்புகிறேன்” என்று தன்னுடைய கடந்த கால நினைவுகளோடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கையும் வைக்கிறார் நாஞ்சில் சம்பத்.