Published:Updated:

`இத்தாலியில் 6 கோடி, தமிழகத்தில் 7 கோடி.. புரிஞ்சிக்கோங்க!' -இப்படியும் விழிப்புணர்வு #Corona

 விழிப்புணர்வு பணியில்  முதியவர்
விழிப்புணர்வு பணியில் முதியவர்

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் 3ம்நாள் முடிந்துள்ளது. ஆனாலும், இன்னும் சிலர் விழிப்புணர்வு இல்லாமல், வெளியில் சுற்றுவதால், போலீஸார் அவர்கள் மீது லத்தியைப் பாய்ச்சும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

சில இடங்களில், கொரோனா வைரஸ் குறித்து நூதனமுறையில் விழிப்புணர்வு முன்னெடுக்கப்படுகிறது அவை இதோ!

எல்லோருக்கும் வேலை இருக்கு..

பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் தலைமைக் காவலராகப் பணிபுரிபவர் சிவக்குமார், இவர் வேப்பந்தட்டைப் பகுதியில் பாதுகாப்புக்காகச் சென்றிருந்த இடத்தில், உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

 விழிப்புணர்வு பணியில் போலீஸார்
விழிப்புணர்வு பணியில் போலீஸார்

அவர், “உங்கள் எல்லாருக்கும் வேலை இருக்கும். மாட்டுக்குத் தீனி இல்லை. வயலுக்குத் தண்ணீர் பாய்சணும் என ஏகப்பட்ட வேலைகள் இருக்கத்தான் செய்யும். கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்றத்தான், அரசு உங்களை வீட்டில் இருக்கணும்னு சொல்கிறார்கள். ஆனால் நாம், நம்முடைய கடமையைத்தான் முக்கியமா நினைக்கிறோம். உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே போலீஸ் போட முடியுமா?.

இத்தாலி நாட்டில் வெறும் 6 கோடிபேர் வாழ்கிறார்கள். ஆனால் நம்ம தமிழ்நாட்டில் மட்டும் 7 கோடி பேர் இருக்கிறோம். இத்தாலி நம்மைவிட வளர்ந்த நாடு. கொரோனா வைரஸ் முதன்முதலில் தாக்கப்பட்ட சீனாவே, அதிலிருந்து மீண்டு வருகிறது.

தலைமைக் காவலர் சிவக்குமார்
தலைமைக் காவலர் சிவக்குமார்

ஆனால் இத்தாலியால் இன்னமும் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான், முன்னெச்சரிக்கைக்காக, நம்ம அரசு தனித்திரு, விழித்திரு என்கிறது. ஆனால், நாம் 21 நாள்கள் விடுமுறைவிட்ட சந்தோஷத்தில் திரிகிறோம். தயவுசெய்து ஊரடங்கு முடியும்வரை மனித இயல்போடு நடந்துகொள்ளாமல், குரங்குகளைப் போல, ஒன்றாக இருந்தாலும், தனித்தனியே இருங்க” என அட்வைஸ் செய்கிறார்.

கையெடுத்துக் கும்பிட்ட இன்ஸ்பெக்டர்..!

இதேபோல், திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றித் திரிந்த இளைஞர்கள் மீதான வழக்குகள் மணப்பாறையில்தான் அதிகம் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டிவேல், ``கொரோனா வைரஸின் வீரியத்தை மக்கள் சரிவரப் புரிந்துகொள்ளாமல், வெளியில் சுற்றி வருகிறீர்கள். உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு வலியுறுத்தி வருகிறது.

 விழிப்புணர்வு பணியில் போலீஸார்
விழிப்புணர்வு பணியில் போலீஸார்

கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன், அனைவரும் வீட்டிலேயே இருங்கள்'' என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

தோப்புக்கரணம் போட்ட இளைஞர்கள்!. 

இது இப்படியிருக்க, திருச்சி மாவட்டம், ஊட்டத்தூர் மற்றும் பாடலூர் சோதனைச் சாவடி அருகே இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த இளைஞர்களை மடக்கிப் பிடித்த காவல் உதவி ஆய்வாளர் அசோக்குமார் என்பவர், “நாங்கள் கொரோனா வைரஸ் தாக்கம் குறையும்வரை தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிய மாட்டோம். தயவுசெய்து இந்தத் தடவை மன்னித்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே தோப்புக்கரணம் போட வைக்கிறார்.

முதியவரின் விழிப்புணர்வு!

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த முதல் நாளிலிருந்து திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஷேக் அப்துல்லாஹ், கையில் சிறிய ஒலிபெருக்கியுடன் வீதியில் இறங்கியவர், “இந்த ஊரடங்கு உத்தரவை மத்திய - மாநில அரசுகள் பிறப்பித்துள்ளது ஏன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தாக்கம் குறித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் தொடுதல் மற்றும் இருமல் உள்ளிட்ட சமிக்ஞைகளால் மற்றவர்களுக்கும் ஆபத்து வரக் கூடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பில்லாதது உங்கள் உயிரை நீங்கள் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

  விழிப்புணர்வு பணியில் முதியவர் ஷேக் அப்துல்லாஹ்
விழிப்புணர்வு பணியில் முதியவர் ஷேக் அப்துல்லாஹ்

நீங்கள் ஒருவர் வெளியில் வந்தால் சுமார் 40 பேர் பாதிக்கப்படுவார்கள். மற்ற நாடுகளில் வைரஸ் தாக்கத்தால் பலியானவர்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் நாட்டில் வருமுன் காப்போம் என்கிறோம். அலட்சியமாக இருக்க வேண்டாம். ஒருவருக்கு ஒருவர் இடைவெளி விட்டு நிற்கவும்” என விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அவரைப் பாராட்டிய போலீஸார், உங்கள் உணர்வுக்கு தலை வணங்குகிறோம் என அவரின் நலன் கருதி அனுப்பி வைத்தனர்.

களத்தில் இறங்கிய கிராமத்து இளைஞர்கள்!

`இத்தாலியில் 6 கோடி, தமிழகத்தில் 7 கோடி.. புரிஞ்சிக்கோங்க!' -இப்படியும் விழிப்புணர்வு #Corona

பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் "கொரோனா வைரஸ்" தடுப்புப் பணியில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்களான அலெக்ஸ் பாண்டியன், வினோத்குமார், மணிகண்டன் மற்றும் சுபாஷ் ஆகியோர் மருத்துவமனை ஊழியர்களுடன் இணைந்து 'கொரோனா வைரஸ்' பற்றிய விழிப்புணர்வு செய்திகளை மக்களிடத்தில் எடுத்துக் கூறியதுடன், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வைத்தும், ஏழை எளிய மக்களுக்குப் புரியும் வகையில் செயல்பட்டனர். இந்த இளைஞர்களைப் போல் பலரும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஆர்வமாக முன்வர வேண்டும் எனப் பாராட்டினார்கள்.

அடுத்த கட்டுரைக்கு