Published:Updated:

இந்திய மீனவர்கள் மட்டுமின்றி இலங்கை மீனவர்களுக்காகவும் பாடுபட்ட அருளானந்தம் மறைவு!

அருளானந்தம்

சிறையிலுள்ள அப்பாவி மீனவர்களின் விடுதலைக்காக சட்டப்போராட்டம் நடத்தியவர்

இந்திய மீனவர்கள் மட்டுமின்றி இலங்கை மீனவர்களுக்காகவும் பாடுபட்ட அருளானந்தம் மறைவு!

சிறையிலுள்ள அப்பாவி மீனவர்களின் விடுதலைக்காக சட்டப்போராட்டம் நடத்தியவர்

Published:Updated:
அருளானந்தம்

மீனவர் நலனுக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்த மீனவப் போராளி பாம்பன் யு.அருளானந்தத்தின் திடீர் மறைவு மீனவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

அருளானந்தம்
அருளானந்தம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த யு.அருளானந்தம், கடந்த 50 ஆண்டுகாலமாக மீனவர் உரிமைக்காகவும், நலத்துக்காகவும் போராடி வந்தவர். இந்திய இலங்கை கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச ஊடகங்களுக்கும் தெளிவாக வெளிப்படுத்தியவர்.

இந்திய மீனவர்களுக்கு மட்டுமல்ல, இந்திய எல்லைக்குள் கைது செய்யப்படும் இலங்கை மீனவர் நலனுக்காகவும் பாடுப்பட்டவர். தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைபின் ஒருங்கிணைப்பாளராகவும், நிரபராதி மீனவர் சங்கத் தலைவராகவும், தீவு மீனவ சங்கத் தலைவராகவும் பணியாற்றியவர், மீனவர் வரலாற்று ஆய்வாளராகவும், கவிஞராகவும் செயல்பட்டவர்.

 பாம்பன்
பாம்பன்
உ.பாண்டி

மீனவர் பிரச்சனைகளுக்காக மட்டுமல்லாமல் பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்காகப் பாடுபடும் ஜனநாயக அமைப்புகளோடு இணைந்து போராடியவர்.

அவருடைய திடீர் இழப்பால் ராமேஸ்வரம் வட்டார மீனவர்கள் மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமுள்ள மீனவர்களும், இலங்கை மீனவர்களும் கவலையடைந்திருக்கிறார்கள்.

பாம்பன்
பாம்பன்

இலங்கை- தமிழக மீனவர்களுக்கிடையே பல்லாண்டுகளாக உள்ள பிரச்னைகள் பற்றிய அனைத்து ஆதாரங்களையும் ஆவணப்படுத்தி வைத்திருந்ததால், ஆட்சியாளர்களும், அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் அதுபற்றிய விவரம் வேண்டுமென்றால் இவரைத்தான் அணுகுவார்கள். இந்த நிலையில் அவருடைய மறைவுக்கு பலரும் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தன் இரங்கல் செய்தியில், "என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய நண்பர், இராமேஸ்வரம் மீனவர்களின் பாதுகாவலர் அருளானந்தம் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். 80-களின் தொடக்கத்தில், இலங்கைக் கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதை எதிர்த்துக் களம் புகுந்தார். தீவு மீனவர் சங்கத்தைத் தொடங்கினார். தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக மீனவர்களின் பாதுகாப்பான நல்வாழ்வு ஒன்றையே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு உழைத்தார்.

வைகோ
வைகோ

தற்போது தேசிய பாரம்பரிய மீனவர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நிறுத்திய போதெல்லாம் அங்கே சென்று அவர்களுக்காக வழக்குரைஞர்களை நியமித்து விடுவித்தவர், அதேபோல, ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இலங்கை மீனவர்களுக்கும் வழக்குரைஞர்களை ஏற்பாடு செய்து அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப உதவியாக இருந்தார்.

மீனவர் பிரச்னைகள் குறித்து அவ்வப்போது அலைபேசியில் தொடர்பு கொண்டு களநிலவரங்களை என் கவனத்திற்குக் கொண்டு வந்தார். நானும் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தபோது அதை எதிர்த்துக் கடுமையாகப் போராடினார். தமிழக முதல்வரைத் தொடர்புகொண்டு அரசுத்தரப்பில் வழக்குரைஞர்களை ஏற்பாடு செய்து அழைத்துச் சென்று வாதாடி, விடுதலை பெற பெரும் பங்கு வகித்தார். ராமேஸ்வரத்தில் மதிமுக நடத்திய மீனவர் பாதுகாப்பு அறப்போராட்டங்களில் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினார். அவரது மறைவு, மீனவ சமுதாயத்திற்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினர், மீனவ சமுதாயத்தினரின் வேதனையில் பங்கேற்கின்றேன்." என்று தெரிவித்துள்ளார்.

தற்போது பாம்பனில் வைக்கப்பட்டுள்ள அவர் உடலுக்கு மீனவ மக்களும் பல்வேறு அமைப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.