Published:Updated:

ஊரடங்கு உத்தரவு... ஆதரவற்றோர், வீடற்றோருக்கான அரசின் ஏற்பாடு என்ன? #Corona

உணவு பெற வரிசையில் ஆதரவற்றோர்
உணவு பெற வரிசையில் ஆதரவற்றோர்

கொரோனாவில் தமிழகத்தில் ஏப்ரல் 14-ம்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆதரவற்றோர், வீடற்றோர்களுக்குத் தங்குமிடம், உணவு ஏற்பாடுகள் குறித்து பல மாவட்டங்களின் நிலை குறித்த ரீவெண்ட் இது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதரவற்றவர்களுக்கு எனத் தனியாக முகாம்கள் ஏதும் அமைக்கப்படவில்லை. அதே நேரத்தில் ஆதரவற்றவர்கள் மற்றும் வீடற்றவர்கள் என மொத்தம் 600 நபர்களுக்குத் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தினமும் 3 வேளைகளும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 10 குழுக்கள் இயங்கி வருகின்றன. மேலும், மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

முகாம்களில் உணவருந்தும் ஆதரவற்றோர்
முகாம்களில் உணவருந்தும் ஆதரவற்றோர்

திருநெல்வேலியில் மாநகராட்சி சார்பாக குறுக்குத்துறை, கொண்டாநகரம், ஐகிரவுண்ட் ஆகிய 3 பகுதிகளில் ஆதரவற்றோருக்கான தங்குமிடங்கள் இயங்கி வருகின்றன. ஆதரவற்ற நிலையில் இருக்கும் பலர் இம்மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், அனைவரையும் மொத்தமாகத் தங்க வைக்கக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்ததால், தற்போது பாளையங்கோட்டை உழவர் சந்தையில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு, பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றைத் திருநெல்வேலி மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளில் ஆதரவற்றோருக்கான அரவணைப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது 120 ஆதரவற்றோர் இம்மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 வேளைகளும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உணவின்றித் தவிக்கும் ஆதரவற்ற மக்கள் கண்டறியப்பட்டால் அவர்களை இம்மையங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

உணவு அருந்தும் ஆதரவற்றோர்
உணவு அருந்தும் ஆதரவற்றோர்

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அய்யனார் கோயில் அருகே அமைந்துள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய புதிய கட்டடத்திலும் தஞ்சை மிஷின் சின்ன ஆஸ்பத்திரி அருகிலும் ஆதரவற்றோருக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூரில் காகிதப்பட்டறைப் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆதரவற்றோரைத் தங்கவைத்துப் பராமரித்து வருகிறார்கள். இதுவரை 21 பேர் கண்டறியப்பட்டு இங்கு தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கான உணவுகளை ரெட்கிராஸ் அமைப்பினர் மற்றும் சில தன்னார்வலர்கள் வழங்கி வருகிறார்கள்.

மதுரை மாவட்டத்தில், காந்தி மியூசியம் அருகில் பூங்கா முருகன் கோயில் வளாகம், கீரைத்துரையில் உள்ள முதியோர் இல்லம், ஹார்விப்பட்டி சமுதாயக் கூடம், விளாங்குடி அருகில் உள்ள சொக்கநாதபுரம் சமுதாயக்கூடம் மற்றும் கே.புதூர் சமுதாயக் கூடம் என 5 இடங்களில் ஆதரவற்றோர் மற்றும் வீடற்றவர்களுக்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் தங்கியிருக்கும் 1000 நபர்களுக்கு, மாநகராட்சி சார்பில் தினமும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 1000 நபர்கள் சாலை ஓரங்களில் வசித்து வருகிறார்கள். அவர்களில் 700 பேர் நாகர்கோவில் நகரத்தில் வசிக்கின்றனர்.

ஈரோடு முகாம்
ஈரோடு முகாம்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ஆதரவற்றோருக்காக மத்திய அரசு அமைத்திருக்கும் 'அபயகேந்திரம் மையம்' இயங்கி வருகிறது. தற்போது, சாலை ஓரம் வசித்துவருபவர்களை இந்த மையத்தில் தங்க வைப்பதற்காக அதிகாரிகள் அழைத்தபோது, அவர்கள் வர மறுத்து விட்டனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. சமூக ஆர்வலர்கள் பலரும் உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது, அபயகேந்திரத்தில் 30 பேர் வசித்து வருகிறார்கள்.

திருச்சி மாநகரில் வீடற்றோருக்காக தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது, திருச்சி மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் என 36 இடங்களில் சமுதாய உணவகம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, அம்மா உணவகங்களில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

நெல்லையில் உள்ள உறைவிட மையம்
நெல்லையில் உள்ள உறைவிட மையம்

கரூர் மாவட்டத்தில், தான்தோன்றி மலைப் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆதரவற்றவர்களுக்குத் தங்குமிடம் அமைக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி பள்ளியிலுள்ள ஆதரவற்றோருக்கான முகாமில் 50-க்கும் மேற்பட்டோரும், பரமக்குடி தனியார் பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்டோரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நகராட்சி மற்றும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உணவு வழங்கப்படுகிறது. அத்துடன் ராமேஸ்வரத்திலுள்ள 60 ஆதரவற்றவர்கள் பேருந்து நிலையத்திலுள்ள நகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு அம்மா உணவகத்தின் மூலம் நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினர் உணவு வழங்கி வருகின்றனர். இவை தவிர பல்வேறு மாநிலங்களில் இருந்து யாத்திரையாக ராமேஸ்வரத்திற்கு வந்து, சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலையிலுள்ள 173 பேர், இங்குள்ள பல்வேறு தனியார் தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் நகராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் தனியார் உதவியுடன் உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் வ.உ.சி பூங்கா மற்றும் சோலார் பகுதியிலுள்ள மாநகராட்சி தங்கும் விடுதிகளிலும் ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை வளாகத்திலும் ஆதரவற்றோர் மற்றும் வீடற்றோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் முகாம்
வேலூர் முகாம்

இவர்களுக்கு மாநகராட்சி சார்பில், தன்னார்வலர்களின் உதவியுடன் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் காலேஜ் ரோட்டிலுள்ள சந்திரகாவி நடுநிலைப்பள்ளி மற்றும் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு இடங்களில் மொத்தம் 155 பேர் தங்க வைக்கப்பட்டு சமூக நலத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். திருப்பூர் ரோட்டரி சங்கத்தினர் இவர்களுக்கான உணவினை அளித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு