Published:Updated:

`இவ்வளவு தீர்க்கப்படாத பிரச்னைகள் இருக்கையில் கரூர் மாநகராட்சியா?'- கேள்வி கேட்கும் சமூக ஆர்வலர்கள்!

கிராமப் பகுதியையைவிட மோசமாக இருக்கு. இதுல மாநகராட்சியானால், இன்னும் கிராமங்கள் கரூரோடு இணைக்கப்படும். அடிப்படை வசதிகளை, சிக்கலான பிரச்னைகளைக் களைந்துவிட்டு, கரூரை மாநகராட்சியாக்கட்டும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``கரூர், நகராட்சி அளவுக்கே இன்னும் தகுதிபெறவில்லை. இதில், மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டிருப்பது வேதனை. இங்குள்ள அடிப்படைப் பிரச்னைகளைச் சரிசெய்வதற்கு உத்தரவாதம் தந்துவிட்டு, பிறகு மாநகராட்சியாகத் தரம் உயர்த்துங்கள்" என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். குறிப்பாக, குடிநீர்ப் பிரச்னையைச் சொல்கிறார்கள். கரூர் நகருக்குள் ஓடும் அமராவதி ஆறு, சாயப்பட்டறை ஆலைகளின் கழிவுகளால் விஷமாகிப்போனதைக் குறிப்பிடுகிறார்கள்.

அமராவதி ஆற்றில் சாயக்கழிவு (ஃபைல் படம்)
அமராவதி ஆற்றில் சாயக்கழிவு (ஃபைல் படம்)
நா.ராஜமுருகன்
கரூர் அரசுப்பள்ளியைக் கண்டித்த ஆட்சியர்; `கடும் சொற்கள் தவிர்க்கப்படும்’ - விடுமுறை விவகாரப் பின்னணி

இது குறித்து, நம்மிடம் பேசிய அ.தி.மு.கவைச் சேர்ந்த, முன்னாள் எம்.எல்.ஏ-வான வழக்கறிஞர் பி.காமராஜ்,

``கரூரில், ஜவுளித்தொழிலுக்கு முக்கியக் காரணியாக விளங்கும் சாய, சலவை ஆலைகள் அதிக அளவில் செயல்பட்டன. கடந்த 1980 முதல் 1997-ம் ஆண்டு வரை 455 ஆலைகள் இயங்கின. இந்த ஆலைகளிலிருந்து வெளியேறிய சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுகள் மற்றும் சலவை ஆலைகளிலிருந்து வெளியேறிய கழிவுநீர், அமராவதி ஆற்றிலும், அதன் பிரதான வாய்க்கால்களான பள்ளபாளையம் ராஜவாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் கலந்தன. இதனால், கரூர் நகருக்குள் நிலத்தடி நீர் விஷமாகிப்போனது. பல இடங்களில் உப்பின் அளவு 10,000 டி.டி.எஸ் அளவுக்கும் அதிகமாக இருக்கிறது. 500 டி.டி.எஸ் என்பதே அதிகம். அமராவதி பாசன விவசாயிகள், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீதிமன்றம், `சுத்திகரிப்பு இயந்திரம் (ஆர்.ஓ பிளான்ட்) இருந்தால் மட்டுமே சாய, சலவை ஆலைகள் இயங்க அனுமதிக்க வேண்டும்’ என்றும், `சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்காத ஆலைகளை உடனே மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் சுற்றுச்சூழல் வாரிய அலுவலகத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.

காமராஜ் (முன்னாள் எம்.எல்.ஏ)
காமராஜ் (முன்னாள் எம்.எல்.ஏ)
நா.ராஜமுருகன்

ஆனால், கோர்ட் உத்தரவுப்படி, சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்காத ஆலைகள் மூடப்பட்ட நிலையில், தற்போது ஐம்பதுக்கும் மேற்பட்ட சாய, சலவை ஆலைகள் மட்டும் இயங்கிவருகின்றன. அவற்றிலிருந்து, அமராவதி ஆற்றில் சாயக்கழிவுகளைத் திறந்துவிடுகின்றனர். இதற்கிடையில், நீதிமன்ற உத்தரவுக்கு முன்பிருந்தே, சாயப்பட்டறை ஆலைகளில் தேங்கிய திட சாயக்கழிவுகளை மூட்டை மூட்டையாகக் கட்டி, அவற்றை பஞ்சமாதேவி, பெரிய ஆண்டாங்கோயில், கருப்பம்பாளையம், சுக்காலியூர், செல்லாண்டிபாளையம், திருமாநிலையூர், வெங்கமேடு உள்ளிட்ட ஏழு இடங்களில் மலைபோலக் குவித்துவைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் கழிவுகள் இன்னும் அகற்றப்படாமல் இருப்பதால், மழைக்காலங்களில் அந்த மூட்டைகளிலிருந்து வழிந்தோடும் சாயக்கழிவுகளால் மீண்டும் நிலங்கள் மாசுபட்டுவருகின்றன. அங்கெல்லாம் நிலத்தடி நீர் விஷமாகிக்கொண்டிருக்கிறது. நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் இந்தக் கழிவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றும் பணியில் சாய ஆலை உரிமையாளர்கள் ஈடுபட்டனர். ஆனால், குறைந்த அளவு அகற்றிவிட்டு, பிறகு விட்டுவிட்டனர். இப்படி, சாயப்பட்டறைக் கழிவால் விஷமாகிப்போன நிலத்தடி நீரைச் சரிபண்ணிவிட்டு, பிறகு மாநகராட்சியாக்குங்கள். கரூர் நகருக்கு இப்போது காவிரியிலிருந்துதான் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டுவரப்படுகிறது. ஆனால், காந்தி கிராமம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏழு நாள்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் கொடுக்கிறாங்க.

சாயப்பட்டறைக் கழிவு
சாயப்பட்டறைக் கழிவு
நா.ராஜமுருகன்

இந்தநிலையில், கரூஉர் மாநகராட்சியானால், நிலைமை இன்னும் மோசமாகும். அதேபோல், ஏற்கெனவே நகராட்சியாக இருக்கும் கரூரில் இணைந்திருக்கும் சணப்பிரட்டி மாதிரியான பகுதிகளுக்கு போய்ப் பாருங்க. அது, கிராமப் பகுதியையைவிட மோசமாக இருக்கு. இதுல, மாநகராட்சியானால், இன்னும் பல கிராமங்கள் கரூரோடு இணைக்கப்படும். எனவே, அடிப்படை வசதிகளை, சிக்கலான பிரச்னைகளைக் களைந்துவிட்டு, கரூரை மாநகராட்சியாக்கட்டும்" என்றார்.

அடுத்து பேசிய, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான இராஜேஷ் கண்ணன்,

``கரூர், நகராட்சி அளவுக்கே இன்னும் தரம் உயரவில்லை என்பதே யதார்த்தம். நான்கு முக்கிய வீதிகளைத் தவிர்த்து, அந்தப் பக்கம் போனால், இன்னும் பல பகுதிகள் கிராமங்கள் போலத்தான் இருக்கின்றன. நகராட்சி அளவுக்கான அடிப்படைக் கட்டமைப்பே இன்னும் அமைக்கப்படவில்லை. கரூர் நகராட்சியில் வசிப்பவர்களில் அநேகம் பேர் நடுத்தர வர்க்கத்தினர்தான். மாநகராட்சியானால், வாடகை, வரிகள் உயரும். ஆனால், அவர்களின் வருமானம் உயராது. அதேபோல், மாநகராட்சி, தொழில் பூங்கா, வேளாண் கல்லூரி, விமான நிலையம் என்று கரூருக்கு வரிசையாகத் திட்டங்கள் செயல்படுத்தவிருப்பதாகச் சொல்றாங்க. இதெல்லாம், இங்குள்ள ஆளுங்கட்சி புள்ளிகள் ஆங்காங்கே வாங்கிப்போட்டிருக்கும் நிலங்களின் மதிப்பை உயர்த்தப் பயன்படுமே தவிர, உண்மையாக இந்தத் திட்டங்கள் கரூருக்கு வருமாங்கிறது சந்தேகம்தான். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் இன்னும் அறிவிப்பு அளவிலேயேதான் இருக்கு.

இராஜேஷ் கண்ணன்
இராஜேஷ் கண்ணன்
நா.ராஜமுருகன்

இப்போதைய அறிவிப்புகளும் கிணற்றில் போடப்பட்ட கல்லாகும் நிலைமை எற்பட வாய்ப்பிருக்கு. கரூர் நகராட்சியாக இருக்கும் இப்போது, ஒரு வேலையாக நகராட்சிக்கு சாமானியர்கள் போனால், நாள் கணக்கில் அலையவிடுகிறாங்க. வீடு கட்டுவது, நிலம் சம்பந்தமான விஷயங்களுக்காக நகராட்சிக்குப் போனால், வாரக்கணக்கில் நடையாக நடக்கும் சூழல். காரணம் கேட்டால், 'ஆள் பற்றாக்குறை' என்று ஒற்றைவரியில் அதிகாரிக்ள் பதில் சொல்றாங்க. அப்படியிருக்கையில், மாநகராட்சி ஆனால், இங்குள்ள மக்கள் இன்னும் என்னென்ன பாடுபட வேண்டியிருக்குமோ... இந்தப் பிரச்னைகளைக் களைய உத்தரவாதம் கொடுத்துவிட்டு, தாராளமாக கரூரை மாநகராட்சியாக்குங்க" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு