Published:Updated:

`கொரோனாவுக்கு முன்பு... கொரோனாவுக்குப் பின்பு!' - தொழிலாளர்கள் பார்வையில் `மே தினம்' எப்படி?!

உழைப்பாளர் தினம்

கொரோனா பேரிடருக்குப் பிறகு அடித்தட்டு தொழிலாளர்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன?

`கொரோனாவுக்கு முன்பு... கொரோனாவுக்குப் பின்பு!' - தொழிலாளர்கள் பார்வையில் `மே தினம்' எப்படி?!

கொரோனா பேரிடருக்குப் பிறகு அடித்தட்டு தொழிலாளர்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன?

Published:Updated:
உழைப்பாளர் தினம்

தொழிலாளர்கள் தினம்:

உலகின் பல்வேறு நாடுகளிலும் மே 1-ம் தேதி தொழிலாளர்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று தொழிலாளர்கள் அனைவரும் எட்டு மணி நேரம் மட்டும் வேலை செய்யும் உரிமைக்குப் பின்னால், எண்ணற்ற போராட்டங்களும், பலரின் உயிர்த் தியாகமும் இருக்கிறது. உழைப்பாளர்களின் உரிமைக்காக உருவானதுதான் இந்த மே தினம். நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு 1889-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி நடைபெற்ற உலக தொழிலாளர்கள் நாடாளுமன்றத்தில் மே 1-ம் தேதி உலக உழைப்பாளர் தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது.

மே தினம்
மே தினம்

இந்தியாவில் கடந்த 1923-ம் ஆண்டு முதல்தான் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுவும் சென்னையில் சிங்காரவேலர் தலைமையில்தான் மே தின கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டது என்பது வரலாறு. உழைக்கும் மக்களுக்காக இந்த ஒரு நாள்... விடுமுறை தினமாக்கப்பட்டது. தொழிலாளர்களின் நிலைமை அனைத்துமே கொரோனா பேரிடரால் தலை கீழானது. எண்ணற்றோர் வேலை இழந்து, வருவாய் இழந்து பரிதவித்தநிலை ஏற்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனா பேரிடருக்கு முன்னும், பின்னும் தொழிலாளர்களின் நிலை என்ன... அவர்கள் தொழிலாளர்கள் தினத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது குறித்து பல்வேறு தொழில் செய்யும் தொழிலாளர்கள் சிலரிடம் பேசினோம். சென்னையில் வாகன ஓட்டுநராகப் பணிபுரியும் ரவியிடம் பேசினோம். ``கொரோனா என்ற ஒன்று வருவதற்கு முன்பு எனது வாழ்க்கை வேறு. இப்போது நிலை தலைகீழாகியுள்ளது. அதிலும், தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் டீசல் விலை உயர்வு நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது என்பதுதான் உண்மை" என்றார்.

மே தினம்
மே தினம்

தொடர்ந்து பேசியவர், ``கொரோனாவுக்கு முன்பாக நான் வேலை பார்த்த இடத்தில் தொழிலாளர் தினத்தன்று விடுமுறை வழங்கப்படும். அப்படியே வேலை இருந்தாலும் அன்று வேலைபார்ப்பவர்களுக்கு இரண்டு நாள் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வேலைக்குச் செல்லலாம் என்ற நிலைதான். முன்பெல்லாம் வீட்டு வாடகை, மளிகைப் பொருள்கள் செலவு, குழந்தைகளுக்கான செலவு என எல்லாம் போன பிறகுகூட ஒரு மூவாயிரம் ரூபாய் கையில் நிற்கும். ஆனால், இப்போது மாதத்தின் கடைசி வாரம் யாரிடமாவது கடன் வாங்கி குடும்பத்தை நடத்தவேண்டிய சூழலில் இருக்கிறோம். விடுமுறை இல்லாது உழைத்தால் மட்டுமே குடும்பத்தை நடத்தமுடியும் என்ற நிலையில்தான் வாழ்கிறோம்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தூய்மைத் தொழிலாளியாகப் பணியாற்றும் மணிகண்டன் என்பவரிடம் பேசினோம். ``நான் கடந்த 12 வருடங்களாகத் தூய்மைத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறேன். எனக்கு இதுவரை உழைப்பாளர்கள் தினத்தன்று விடுமுறை கிடைத்ததே கிடையாது. எங்களின் பணி அப்படியானது. இன்று நாங்கள் விடுமுறை எடுத்துக்கொண்டால் நகரத்தை யார் சுத்தம் செய்வது? உங்களின் வீடுகளில் உள்ள குப்பைகளை யார் அகற்றுவது? தொழிலாளர்கள் தினம் விடுமுறை கிடைக்கும் என்பதையெல்லாம் நினைத்துக் கூட பார்த்தது கிடையாது.

துப்புரவு பணியாளர்கள்
துப்புரவு பணியாளர்கள்

இத்தனை வருட பணியில் அந்த கொரோனா காலகட்டம் போல ஒரு மோசமான பணி நாள்களை நான் பார்த்ததே கிடையாது. சாதாரண தினத்திலேயே பொதுமக்கள் பலரும் எங்களை மிகவும் மோசமாகத் தான் நடத்துவார்கள். அதிலும் அந்த கொரோனா காலகட்டத்தில், நாங்கள் என்னவோ கொரோனா கிருமியைப் போலச் சிலர் நடத்திய விதமெல்லாம் சொல்லிப் புரியவைக்க முடியாது. அந்த நிலைமை தற்போது மாறியிருப்பது சற்று நிம்மதியைத் தருகிறது. நகரத்துக்காகத் தான் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம். உழைப்பாளர் தினத்தன்று எங்களுக்கு விடுமுறை கிடைக்கவில்லை என்றாலும் சரி, இந்த மக்கள் எங்களைக் கொஞ்சம் மரியாதையுடன் சகமனிதர்களாக நடத்தினாலே போதுமானது" என்று கூறினார்.

அடுத்ததாக, ஆட்டோ ஓட்டுநர் குமரனிடம் பேசினோம். ``தொழிலாளர்கள் தினத்தன்று விடுமுறையை அனுபவிப்பதெல்லாம் அரசு ஊழியர்களும், தனியார் நிறுவன ஊழியர்களும்தான். அதிலும், போக்குவரத்துத் துறை, காவல்துறை, சுகாதாரத்துறை போன்ற அரசு ஊழியர்களுக்கு எங்கு விடுமுறை கிடைக்கிறது சொல்லுங்கள் பார்க்கலாம். முன்பு போல இப்போது நிலைமை கிடையாது. கொரோனாவுக்கு பின்பு இங்கு நிலைமையே மாறிவிட்டது. எட்டு மணிநேரம் மட்டும் ஆட்டோ ஓட்டினால் என் கையில் எதுவும் நிற்காது. அதிலும் இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வை நினைத்தால் வயிறு எரிகிறது. இப்போதெல்லாம், உழைப்பாளர் தினமென்பது உயர் பதவியில் இருப்பவர்களுக்கும், உழைக்காதவர்களுக்கும் மட்டுமே" என்றார் ஆதங்கமாக.

மே தினம்
மே தினம்

தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் மின் பொறியாளர் விக்னேஷிடம் பேசினோம். ``எங்களுக்கு கொரோனாவுக்கு முன்பு மே தின கொண்டாட்டம் என்பது ஒரு நாள் விடுமுறை மட்டும்தான். கொரோனா பரவலுக்குப் பிறகு அன்று முதல் இன்று வரை ஒர்க் பிரம் ஹோம் தான். இப்போதெல்லாம் என்று வேலை பார்க்கிறோம் ...என்று விடுமுறை என்பதே தெரியவில்லை. இதில் தொழிலாளர்கள் தினம் குறித்து என்ன சொல்ல. அதுமட்டுமின்றி இந்த முறை தொழிலாளர்கள் தினம் ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டது. கிடைக்கும் அந்த ஒருநாள் விடுமுறையில் விடுமுறை தினத்திலேயே அமைந்துவிட்டது" என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

தொழிலாளர்கள் தினம்
தொழிலாளர்கள் தினம்

உண்மையில் கொரோனா பேரிடர் இந்த அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் சொல்லமுடியாத அளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொழிலாளர்கள் தின கொண்டாட்டமும், விடுமுறையும் உழைக்கும் மக்களின் நினைவில் கூட இல்லை என்பதே உண்மை களநிலவரம். அன்றைக்கு உழைத்தால்தான் வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலையில்தான் இன்றைய அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தினர் காலச்சக்கரத்தில் சுழன்றோடிக் கொண்டிருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism