Published:Updated:

வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தமிழகக் கரையை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

தெற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் என்றும், அது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகக் கரையை நெருங்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழை முதல் மிகக் கனமழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

சென்னை கனமழை
சென்னை கனமழை

மேலும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன்கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டிருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

தென் வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். அதேபோல அரபிக்கடல் பகுதிகளிலும் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 70 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். இதனால் அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலிலுள்ள மீனவர்கள் இன்றைக்குள் (9.11.2021) கரைக்குத் திரும்பி வர வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருக்கிறது.

மழைநீர் தேங்கியுள்ள பகுதி
மழைநீர் தேங்கியுள்ள பகுதி

நாளை (10.11.2021) கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, சென்னையில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தெப்பமாகத் தேங்கி நிற்கிறது. தேங்கியுள்ள மழைநீரை ராட்சத மோட்டார்களின் உதவியோடு வெளியேற்றும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் செய்துவருகின்றனர். மேலும், தாழ்வான பகுதிகளிலுள்ள மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

Tamil News Today: `வரும் 10,11 தேதிகளில்  அதி கனமழைக்கு வாய்ப்பு!' - சென்னை வானிலை ஆய்வு மையம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு