Published:Updated:

`இளைஞர்களின் ஹேர் ஸ்டைல் விவகாரம்'- திண்டுக்கல் போலீஸாருக்கு எதிரான கண்டனமும்; எஸ்.பி.விளக்கமும்!

சிகை அலங்காரத்துக்கும் சட்டம்-ஒழுங்குக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சிகைஅலங்காரம் செய்து கொள்வது தனிமனித சுதந்திரம். இதில் போலீஸார் தலையிடக் கூடாது என்கின்றனர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் கொலை சம்பவங்கள் நடந்து வந்த நிலையில், செப்டம்பர் 22-ம் தேதி அன்று தலை துண்டித்து 2 கொலைகள் நடந்தன. இதனைத்தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாழாகி விட்டதாகவும், இரும்புக்கரம் கொண்டு குற்றச் சம்பவங்களை போலீஸார் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தார். எதிர்க்கட்சிகள் பலவும் இதுகுறித்துப் பேசின. இதையடுத்து தமிழகம் முழுவதும் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்காக ரவுடிகளைக் கைது செய்யும் படலம் தொடங்கியது. மேலும் போலீஸார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய கொலை நகரமாக மாறியுள்ள திண்டுக்கல்லில் 44 ரவுடிகள் உள்பட 339 பேரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அதேபோல மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் தொடர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

போலீஸார் எச்சரிக்கை
போலீஸார் எச்சரிக்கை

திண்டுக்கல் வடக்கு காவல் ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீஸார் ஒய்எம்ஆர் பட்டி சந்திப்பில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முடி வளர்த்து கலரிங் செய்திருந்த இளைஞர்கள் பைக்குகளில் வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்களின் முடியைப் பிடித்து இழுத்து, `இதுபோன்று முடிவளர்க்கக் கூடாது. காதுகளில் கடுக்கன், வளையம் அணியக்கூடாது' என எச்சரித்தார். மேலும் அவர்கள் காதுகளில் அணிந்திருந்த வளையங்களை கழட்டச் செய்தனர். மீண்டும் இவ்வாறு ஹேர் ஸ்டைலுடன் சுற்றித்திரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து அனுப்பினார். இதனைத் தொடர்ந்து, சலூன் கடை உரிமையாளர்களிடம் இளைஞர்களுக்கு ஒழுங்கற்ற முறையில் முடிவெட்டி, கலரிங் செய்யக்கூடாது என எழுதி வாங்க உள்ளதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து அவ்வாறு முடிதிருத்தம் செய்யப்படுவது தொடர்ந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

போலீஸார்
போலீஸார்

சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்

திண்டுக்கல் போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சிகை அலங்காரம் செய்து கொள்வது தனிமனித சுதந்திரம். சிகை அலங்காரத்துக்கும் சட்டம்-ஒழுங்குக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இதில் போலீஸார் தலையிடக்கூடாது. இது ஒரு வகையான ஒடுக்குமுறை என்றெல்லாம் கண்டனங்கள் பதிவிடப்பட்டன. அதேவேளையில் போலீஸாரை விமர்சித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்களும் வலம்வந்தன. இதனிடையே சலூன் கடை உரிமையாளர்களும் போலீஸாரின் எச்சரிக்கைக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கத்தி, அரிவாளுடன் போஸ் கொடுத்த போட்டோவை ஷேர் செய்த இளைஞர்; கைது செய்த போலீஸார்!
ஹென்றி திபேன்
ஹென்றி திபேன்

முடித்திருத்தம் செய்து கொள்வது அவரவர் உரிமை

இதுகுறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான ஹென்றி திபேனிடம் பேசினோம்.

இளைஞர்கள் கடந்த 2 ஆண்டுகளாக கல்வி நிறுவனங்களுக்கு செல்லாமல் இருந்துள்ளனர். அவர்கள் சினிமாக்களை அதிகம் பார்த்திருப்பார்கள். சினிமாக்களில் வரும் நடிகர்களைப் போல தான் இளைஞர்களும் முடிவெட்டிக் கொள்கிறார்கள். எனவே இதற்கு மூலக்காரணம் சினிமாதான். முடிவெட்டிக் கொள்வது அவரவர் விருப்பம். பாக்ஸ் கட்டிங் வெட்டியவர்களை எல்லாம் ரவுடிகள் எனக் கூறக்கூடாது. அவர்களை நடுரோட்டில் வைத்து முடியைப் பிடித்து இழுத்து அவமதிக்கக்கூடாது. முடிவெட்டுவதற்கும் ஒழுக்கத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இ்லலை. காவல் ஆய்வாளர் உலகநாதன் நல்லெண்ண அடிப்படையில் இவ்வாறு நடந்திருக்கிறார் எனக் கூறுவதும் தவறு. முடிந்தால் அவர்களை சினிமாவில் இதுபோன்ற சிகை அலங்காரத்துடன் நடிகர்கள் நடிப்பதைத் தடுக்கச் சொல்லுங்கள். போலீஸார் மாண்புடன் நடந்துகொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தால் அவர்களுக்கு இதுபோன்ற முடிதிருத்தம் செய்யத் தோன்றாது. காவல் ஆய்வாளர் உலகநாதன் மீது தென்மண்டல ஐஜி அன்பு, டிஐஜி விஜயலட்சுமி, திண்டுக்கல் எஸ்பி சீனிவாசன் ஆகியோர் நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது என்றவர், போலீஸாருக்கு எவ்வளவோ பணிகள் உள்ளன. அதைவிடுத்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது தேவையற்றது என்றார்.

திண்டுக்கல் எஸ்பி
திண்டுக்கல் எஸ்பி

திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி சீனிவாசனிடம் விசாரித்தோம். அதற்கு அவர், ``காவல் ஆய்வாளர் உலகநாதன் நல்ல நோக்கத்தில் தான் இளைஞர்களுக்கு அறிவுரை தான் கூறினார். யாரையும் துன்புறுத்தவில்லை. அதேபோல சலூன் கடைக்காரர்களுக்கு போலீஸார் தரப்பில் இருந்து முடிதிருத்தம் செய்வது தொடர்பாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு