Published:Updated:

`நன்றி சொல்ல புதுத் தண்ணீரில் பொங்கல்; மஞ்சுவிரட்டு!' - இது தேவபட்டு திருவிழா

தேவபட்டு திருவிழா
தேவபட்டு திருவிழா

புதுத் தண்ணீரில் பொங்கல் வைத்து இறைவனுக்கு நன்றி சொல்லி மஞ்சுவிரட்டு நடத்திய தேவபட்டு கிராம நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்தது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரங்களான செட்டிநாடு என்று அழைக்கப்படும் இடங்களில் பாரம்பர்யமாக பல்வேறு விஷயங்கள் முன்னெடுக்கப்படுகிறது. உணவு, உடை, வீடுகள் என்று எல்லாவற்றிலும் தனித்துவமான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்கின்றனர். இதில் செவ்வாய்ப் பொங்கல் நிகழ்ச்சியும் சிறப்பான ஒன்று.

தேவபட்டு திருவிழா
தேவபட்டு திருவிழா

செட்டிநாடு பகுதியில் பல கிராமங்களில் செவ்வாய்ப் பொங்கல் அருகிப் போனாலும் நாட்டரசன் கோட்டை உள்ளிட்ட சில கிராமங்கள் செவ்வாய்ப் பொங்கல் நிகழ்ச்சியை திருவிழாபோல் கொண்டாடுகின்றனர். இந்தச் செவ்வாய்ப் பொங்கல் நிகழ்ச்சி மாப்பிள்ளை, பொண்ணு பார்க்கும் நிகழ்வாகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த நிலையில், கல்லல் ஒன்றியத்தை அடுத்த தேவபட்டு கிராமத்திலும் செவ்வாய்ப் பொங்கல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு விழாவுடன் சேர்ந்து கொண்டாடப்படுகிறது. இது குறித்து விழா ஒருங்கிணைப்பாளர் கதிரவன் நம்மிடம்,``விவசாயம் செழிப்பாக இருக்க வேண்டும் என ஒவ்வோர் ஆண்டும் அறுவடைக்குப் பின் தைப் பொங்கல் முடிந்த ஒரு செவ்வாயில் காப்பு கட்டுவோம்.

கிராம தேவதைகளான ஸ்ரீ அந்தர நாச்சியம்மன் மற்றும் ஸ்ரீ சங்கிலி கருப்பருக்கும் இந்தக் காப்பு கட்டப்படும். காப்பு கட்டிய மறு செவ்வாய் அன்று திருவிழாபோல் நடைபெறும். அதற்கு முதல் நாள் கருப்பருக்கு மாலை எடுத்து சாமி கும்பிடுவோம். விழா அன்று 9 மண்பானையில் மணிமுத்தாறு என்று சொல்லக் கூடிய ஆற்றில் ஊற்று தோண்டி புதுத் தண்ணீர் எடுப்போம்.

தேவபட்டு திருவிழா
தேவபட்டு திருவிழா

இந்த நீரை வைத்து மஞ்சுவிரட்டு நடைபெறும் இடத்தில் பொங்கல் வைப்போம். அதற்குப் பின் மேள தாளங்களுடன் ஊர்வலம் சென்று திருவிழா எடுக்கப்பட்டு சாமிகாளைகளை மஞ்சுவிரட்டில் அவிழ்த்துவிடுவோம். பூஜைகள் அனைத்தும் முடிந்த உடன் அரசு அனுமதியுடன் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்தி விழாவை நிறைவு செய்வோம். இவ்வாறு ஆண்டுதோறும் விழா எடுப்பதால் நல்ல மழை பொழிந்து விவசாயம் செழித்து கால்நடைகளும் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வளமாக இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு