Published:Updated:

சொத்துக்களை விற்று அணை கட்டினாரா பென்னி குக்? முதல்வர் ஸ்டாலின் சொல்வது சரியா?

முதல்வர் ஸ்டாலின்
News
முதல்வர் ஸ்டாலின்

இன்றைய தினம் அவர் பிறந்த நாளை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் விதமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பெரியாறு அணைக் கட்டிய பிரிட்டிஷ் ராயல் இன்ஜினீயர் பென்னி குக்கின் 181-ஆவது பிறந்த நாள் இன்று. பூனாவில் பிறந்து வளர்ந்த பென்னி குக் பிரிட்டீஷ் இந்திய அரசாங்கத்தின் ராணுவ இன்ஜினீயர். தமிழகத்தின் தென் மாவட்டமான தேனியில் முல்லை பெரியாறு அணைக்காக வழிவகை செய்த பென்னி குயிக்கை இன்றளவும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இன்றைய தினம் அவர் பிறந்த நாளை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் விதமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை
ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை

பென்னி குக்கின் சொந்த ஊரான லண்டனில் உள்ள கேம்பர்லி நகரில் அவரது திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்பதே இந்த புதிய அறிவிப்பு. தமிழக மக்கள் அனைவரும் மனதார வரவேற்கத்தக்க இருக்கும் இந்த அறிவிப்பில் முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, `அணைக் கட்டுவதற்கு போதுமான நிதி இல்லாமல் ஆங்கில அரசு தவித்தபோது தன் சொத்தை விற்று அணை கட்டிய பென்னி குக்; அவருடைய தியாகத்தைப் போற்றும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது' எனக் குறிபிடப்பட்டுள்ளது. தன் சொத்தை விற்று அணைக் கட்டினார் பென்னி குக் என்பது ஒரு இனிமையான கற்பனைச்செய்தி இன்று எழுத்தாளர் அ.வெண்ணிலா அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். முல்லை பெரியாறு அணை குறித்து ஆனந்த விகடன் இதழில் `நீரதிகாரம்' என்ற தொடர் எழுதி வரும் எழுத்தாளர் அ.வெண்ணிலாவிடம் பேசினோம். அவர் கூறியதாவது,

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS


"மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான கவனத்திற்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பெரியாறு அணை கட்டுவது தென் தமிழகத்தின் நிறைவேறாத நூற்றாண்டு கனவாய் இருந்த வேளையில், காலம் அனுப்பி வைத்த ரட்சகனாய் வந்து அணையைக் கட்டி முடித்த நல்லூழியன். அடர்ந்த காட்டில் நோய்களும் விலங்குகளும் அச்சுறுத்தும் சூழலில் ஒன்பது ஆண்டுகள் போராடி அணை கட்டியவர். அவருக்கு அவரின் சொந்த ஊரான கேம்பர்லியில் சிலை வைக்க இருப்பதாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் செய்துள்ள அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியளிக்க கூடியது. காலம் கடந்தும் மக்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கும் பென்னி, தென் தமிழகத்தில் விளையும் ஒவ்வொரு தானியத்தின் உயிராகவும் இருப்பவர்.

கவிஞர் அ.வெண்ணிலா
கவிஞர் அ.வெண்ணிலா

மாண்புமிகு முதல்வரின் செய்திக் குறிப்பில் ' ஆங்கில அரசு தொடர்ந்து நிதி உதவி செய்து அணை கட்ட முடியாத சூழலில், பென்னி குக் தன் சொத்துக்களை விற்று அணை கட்டினார்' என்றுள்ளது. பென்னி குக் பற்றி கடந்த 25 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட அழகிய கற்பனை இது. சொத்துக்களை விற்று அணை கட்டினார் என்பதைவிட அவரின் தியாகம் இதில் அதிகம். கட்டப்பட்ட அணை ஐந்து முறை வெள்ளத்தில் அடித்துச் சென்ற போதும் தளராத அவர் உறுதி, உடன் பணி செய்தவர்கள் விபத்திலும் நோயிலும் இறந்த தருணங்களைத் தாங்கி நின்ற மனத்துணிவு, பணியாளர்கள் பாதியில் விட்டு ஓடிப்போகும் போதெல்லாம் புதியவர்களை அழைத்து வந்த விடாப்பிடித்தனம் என பென்னியின் வியந்து போற்ற வேண்டிய அருங்குணங்கள் அநேகம்.

பிரிட்டீஷ் இந்தியா நிதி கொடுக்க முடியவில்லை என்றால் திட்டம் தொடருமா? பிரிட்டீஷ் இந்திய கவர்னரின் உத்தரவை மீறி பென்னி அணை கட்டியிருக்க முடியுமா? அணை கட்ட அரசாங்கம் செய்த செலவுக்கு பைசா விகிதம் அணை கட்டிய உதவிப் பொறியாளர் A.T.Mackenzie எழுதிய 'History of the periyar project' நூலில் வரவு செலவு கொடுத்துள்ளார்.சில கற்பனைகள் இதமானவை. இனியவை. கலைக்க கூடாதவை. ஆனால் அவை எளிய மக்களின் வாய் வார்த்தைகளில் புழங்கும்வரை ரசிக்கலாம்.

முதல்வரின் வார்த்தைகள் அரசாங்க சாசனம். அதுவே எதிர்கால உண்மை. மாண்புமிகு முதல்வர் அவர்கள் எந்த வரலாற்று ஆவணத்திலும் இல்லாத ஒரு செய்தியைக் குறிப்பிட்டுள்ளதைக் கவனத்தில் கொண்டு சரிசெய்ய வேண்டுகிறேன்.ஏற்கெனவே பல ஊடகங்களில் பலர் தனக்குத் தோன்றியதையெல்லாம் எழுதி எழுதி முதல்வரே நம்பும் அளவிற்கு உண்மையாக்கப்பட்டுள்ள கற்பனை இது. பென்னியின் உண்மையான தியாகங்களுக்கு அணையின் உயரமான 176 அடி உயரத்திற்கே சிலை வைக்கலாம்" என்றார்.