Published:Updated:

தேங்காப்பட்டணம்: உயிர்ப்பலி வாங்கும் மீன்பிடித்துறைமுகம்... தாமிரபரணி தடுப்பணை சர்ச்சை!

தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம்
தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் உருவாகியுள்ள மணல் மேடுகள் தொடர்ந்து உயிர்களை காவு வாங்கி வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு மீன்பிடித் துறைமுகங்களில், தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் மட்டுமே தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் பொழிமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை மாதம், 23-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகு விபத்தில் சிக்கியதில் இரண்டு மீனவர்கள் மரணமடைந்தனர். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஏற்பட்ட மற்றொரு விபத்தில் ஒரு மீனவர் இறந்தார். 117 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் ஒரு ஆண்டுக்குள்ளாகவே மணல்மேடு உருவாகி உயிர்ப்பலிக்குக் காரணம் ஆகிவிட்டது.

தாமிரபரணி ஆற்றில் கட்டப்படும் தடுப்பணை
தாமிரபரணி ஆற்றில் கட்டப்படும் தடுப்பணை

இது குறித்து தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில் கூறுகையில், ``தமிழ்நாட்டிலேயே தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் மட்டும்தான் ஆறு கடலில் கலக்கும் பொழிமுகத்தில கட்டப்பட்டிருக்கிறது. மற்ற துறைமுகங்களெல்லாம் கடலில் அமைக்கப்பட்டிருக்கின்றன. தேங்காப்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவாரத்தில் அலை அடிப்பதால் அப்பகுதியில் மணல் மேடு ஏற்பட்டு, கடல் அலை துறைமுகத்துக்கு உள்ளேயே வருகிறது. இதனால் துறைமுகத்தைவிட்டுப் படகு வெளியே போகும் சமயத்திலும், உள்ளே வரும் சமயத்திலும் படகு கவிழ்ந்து மீனவர்கள் மரணிக்கும் நிலை ஏற்படுகிறது. படகு விபத்து அடிக்கடி ஏற்பட்டு காயங்களுடன் மீனவர்கள் தப்பிவருவதும் அடிக்கடி நடக்கிறது. நிதிபற்றாக்குறை என்று சொல்லி துறைமுகத்தைச் சரியாக அமைக்காமமல் விட்டுவிட்டார்கள். துறைமுகக் கடலலை தடுப்புச்சுவர் 530 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதை 200 மீட்டர் அதிகரிப்பதோடு, 90 மீட்டர் அகலத்தில் இருக்கும் முகத்துவாரத்தை 200 மீட்டராக மாற்ற வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``துறைமுகத்துக்குத் தண்ணீர் வரும் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பரக்காணி பகுதியில் ஒரு தடுப்பணை கட்டுகிறார்கள். இதனால் தண்ணீரின் வேகம் தடைப்படுகிறது. தண்ணீர் வேகமாக வந்தால்தான் துறைமுகத்தில இருக்கும் மண்ணை அடித்து வெளியே கொண்டு போகும். எனவே, தடுப்பணையை இன்னும் தள்ளி கணபதியான்கடவு பகுதியில் மாற்றி அமைக்க வேண்டும். கொரோனாவுக்குப் பிறகு, கேரள மாநிலத்தில் தொழில் செய்த மீனவர்கள் படகுகளோடு சொந்த ஊர் வருகிறார்கள். இதனால் மீனவர்களின் படகுகளை துறைமுகத்துக்குள் கட்டுவதற்குப் போதிய இடம் இல்லாததால் ஆற்றில் நிறுத்துகிறார்கள். தடுப்பணையைத் தள்ளி கட்டினால் ஆற்றில் படகுகளை நிறுத்தவும் இடம் கிடைக்கும்" என்றார்.

தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் சர்ச்சில்
தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் சர்ச்சில்

`தடுப்பணையை மாற்ற வேண்டும்’ எனக் கோரிக்கை எழுந்ததால் கொதித்துப்போன தாமிரபரணி கரையோர மக்கள் வேகமாக தடுப்பணைப் பணியை முடிக்க வேண்டும் என போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இது குறித்து வைக்கல்லூர் குடியிருப்போர் ஐக்கிய முன்னணி நல சங்கத்தின் கௌரவத் தலைவர் பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ``கோடைக்காலத்துல தாமிரபரணி ஆத்துல கடல் தண்ணீர் புகுந்துரும். இதனால பரக்காணி, வைக்கல்லூர், மங்காடு, முஞ்சிறை, புதுக்கடை, பைங்குளம், நித்திரவிளை, கொல்லங்கோடு வரைக்கும் நிலத்தடி நீர் உப்பாக மாறிடுச்சு. பல வருடப் போராட்டங்களுக்குப் பிறகு பரக்காணியில இப்போதான் தடுப்பணை அமைக்கப்படுது. தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்துல இருந்து இரண்டரை கிலோமீட்டர் தள்ளித்தான் தடுப்பணை அமைக்கிறாங்க. தாமிரபரணி ஆற்றின் ரெண்டு பக்கமும் முன்பு தென்னை விவசாயமும், தேங்காய் நார் தயாரிக்கும் தொழிலும் நடந்துக்கிட்டிருந்தது.

தேங்காப்பட்டணம் துறைமுகம் அமைக்கப்பட்டதும் சிலர் விளைநிலங்களில் அனுமதி இல்லாம படகு கட்டும் கம்பெனிகளைச் செயல்படுத்தினாங்க. அந்த கம்பெனியில இருந்து வெளியேறும் கழிவுகள் தாமிரபரணி ஆற்றில் மாசு ஏற்படுத்திச்சு. தடுப்பணை கட்டி முடிச்சிட்டாங்கன்னா இங்கே படகு வர முடியாது. படகு கம்பெனிகளுக்குச் சிக்கல் ஏற்படும்கிறதுனால துறைமுகத்துல மணல் சேருதுன்னு தடுப்பணை மேல பழி போடுறாங்க. தாமிரபரணி ஆறுதான் குமரி மாவட்டத்துக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குது. மீனவ கிராமங்களுக்கும் இங்கிருந்துதான் குடிநீர் போகுது. எனவே தாமிரபரணி உப்பாக மாறாமல் இருக்க பரக்காணியில் தடுப்பணை கட்டுறது அவசியம். தடுப்பணைப் பணியை விரைந்து முடிக்கக் கோரி மக்கள் நடத்தும் போராட்டத்துக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்" என்றார்.

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

இது குறித்து பொதுப்பணித்துறையின் மீன்பிடித்துறைமுக நிர்வாகப் பொறியாளர் அலுவலக அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``புனே சி.டபிள்யூ.பி.ஆர்.எஸ் (சென்ட்ரல் வாட்டர் அண்ட் ரிசர்ச் ஸ்டேஷன்) கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில்தான் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்போது விபத்து ஏற்படுவதால், துறைமுகக் கடலலை தடுப்பணையை நீட்டித்து மாற்றியமைக்க 140 கோடி ரூபாய்க்கான திட்ட அறிக்கையை அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். புதிய திட்டத்தைச் செயல்படுத்தும் குழுவில் மீனவர்களின் பிரதிநிதிகளையும் இணைக்கத் திட்டமிட்டுள்ளோம். புதிய வடிவமைப்பால் அதிக படகுகள் நிறுத்தும் வசதியும் ஏற்படும். தாமிரபரணி ஆற்றில் அமையும் தடுப்பணைக்கும், தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் மணல் சேருவதற்கும் சம்பந்தம் இல்லை’’ என்றார்.

மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்குச் சென்று மீன்பிடித்து வரவும், தாமிரபரணி ஆற்றில் உப்புத் தண்ணீர் புகாமல் இருக்கவும் அரசு, நிபுணர்கள் மூலமாக விரிவாக ஆய்வு செய்து இரு தரப்புக்கும் பாதகம் இல்லாத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
அடுத்த கட்டுரைக்கு