Published:Updated:

தஞ்சாவூர் : மாற்றப்பட்ட கலெக்டர் கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ் - பிரிவைத் தாங்க முடியாத மக்கள் உருக்கம்!

கலெக்டர் கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ்
கலெக்டர் கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ் ( ம.அரவிந்த் )

விவசாயிகள், விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை போன் மூலம் தெரிவித்தாலே போதும், அதை நிறைவேற்றித் தந்துவிடுவார் கலெக்டர் கோவிந்தராவ்.

தமிழகத்தில் 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டு, புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் கலெக்டராக இருந்த கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டு வீட்டு வசதி வாரிய துறையின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனது செயலால் குறைந்த காலத்திலேயே அனைவரது மனதில் இடம்பிடித்துவிட்டதால் கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ் மாற்றம் குறித்து தஞ்சை மக்கள் உருக்கமாகப் பேசிவருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலெக்டர் கோவிந்தராவ்
கலெக்டர் கோவிந்தராவ்

கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். அவரது குடும்பதினர் பெரும் அச்சம் சூழ்ந்து கலங்கி நின்றனர். தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்த ராவின் செல் நம்பர் அவர்களுக்குக் கிடைக்கிறது. தயக்கத்துடனே பாதிக்கப்பட்டவரின் உறவினர் ஒருவர் போன் செய்ய, `சொல்லுங்க நான் கலெக்டர் பேசுறேன்’ என எதிர்முனையில் பேச, கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர் குறித்து அந்த நபர் கூறியிருக்கிறார்.

பொறுமையாகக் கேட்டவர், `கவலைப்படாதீங்க. உடன் இருப்பவரின் செல் நம்பரை எனக்கு அனுப்புங்க’ எனச் சொல்லிட்டு தொடர்பைத் துண்டித்திருக்கிறார். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மருத்துவ அதிகாரியிடமிருந்து பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு போன் வந்துள்ளது. ``கலெக்டர் பேசச் சொன்னாங்க, பயப்படாதீங்க” என ஆறுதல் சொல்லிட்டு உரிய சிகிச்சையைத் தொடர்ந்தனர். இப்போது அந்த நபர் நலமுடன் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். அளவில்லா மகிழ்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மீண்டும் கலெக்டருக்கு போன் செய்து நன்றி தெரிவித்தனர்.

கொரோனா தடுப்புப் பணியில்...
கொரோனா தடுப்புப் பணியில்...

இப்படி யாராக இருந்தாலும் சரி, என்ன வேலையில் இருந்தாலும் சரி அவர்கள் சொல்வதை நிதானமாகக் கேட்டு அவர்களுக்கான தேவையை செய்து கொடுத்துவிடுவார். விவசாயிகள், விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை போன் மூலம் தெரிவித்தாலே போதும், அதை நிறைவேற்றித் தந்துவிடுவார் என அனைத்துத் தரப்பினரும் தஞ்சாவூர் கலெக்டராக இருந்த கோவிந்தராவைப் பற்றி உருக்கமாகப் பேசிவருகின்றனர்.

திடீரென கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ் வேறு பொறுப்புக்கு நியமிக்கப்பட்டதை ஏற்க முடியாதவர்கள், அவர் குறித்து சமூக வலைதளங்களில் உருக்கமாகப் பதிவிட்டுவருகின்றனர். விவசாயச் சங்கத்தை சேர்ந்தவர்கள், `இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்துக்கு கோரிக்கையாகக் கொண்டு சென்றும் வருகின்றனர்.

கொரோனா நிவாரண நிதி பெற்ற கலெக்டர் கோவிந்தராவ்
கொரோனா நிவாரண நிதி பெற்ற கலெக்டர் கோவிந்தராவ்

இது குறித்து சிலரிடம் பேசினோம். "தஞ்சாவூர் கலெக்டராக கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ் கடந்த 2019-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றதுமே உள்ளாட்சித் தேர்தல் வந்தது. அதை முறையாகக் கையாண்டார். அதைத் தொடர்ந்து தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்குப் பணியில் கவனம் செலுத்தினார். எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் பெரிய கோயில் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் இருந்தது. துல்லியமான தனது ஏற்பாட்டால், சிறு அசம்பாவிதம்கூட ஏற்படாமல் நடத்தினார்.

2020-ம் ஆண்டு, நிரவி புயல், 2021-ம் ஆண்டு ஜனவரியில் பெய்த வரலாறு காணாத பெருமழையில் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். அவர்களின் துயரில் பங்கெடுத்து உரிய நிவாரணத்தையும் பெற்றுக்கொடுத்தார். குறிப்பாக ஜனவரியில் பெய்த மழையில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் நனைந்து பெரும் பொருளாதார இழப்பை உண்டாக்கும் நிலை ஏற்பட்டது.

உதவித்தொகை வழங்கும் கலெக்டர் கோவிந்தராவ்
உதவித்தொகை வழங்கும் கலெக்டர் கோவிந்தராவ்

அப்போது தஞ்சாவூர் மாவட்டத்துக்கு முதன்முறையாக நெல் உலர்த்தும் நவீன இயந்திரத்தை வரவழைத்து, நெல்லை உலர்த்தி கொள்முதல் நிலையங்களுக்குக் கொடுக்கவைத்து இழப்பிலிருந்து காத்தார்.

கொரோனா முதல் அலையின்போது கொரோனா வார்டுக்கே சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தைரியம் கொடுத்து நம்பிக்கையூட்டினார். இரண்டாவது அலை தமிழகத்திலேயே தஞ்சாவூரில்தான் முதலில் தொடங்கியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாம்கள் அமைத்து, டெஸ்ட் எடுத்து பரவலைக் கட்டுப்படுத்தினார். வல்லம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. அதைச் சுற்றி தகர ஷீட்டில் அடைக்கப்பட்டது. முதல் அலை முடிந்ததுமே அந்த ஒப்பந்ததாரர் அதைப் பிரிக்கச் செல்ல, அது கோவிந்தராவின் கனவத்துக்குச் சென்றது.

உடனே, `இப்போது பிரிக்க வேண்டாம்’ என அதைத் தடுத்து சமயோசிதமாகச் சிந்தித்துச் செயல்பட்டதால், இரண்டாவது அலை தொடங்கியபோது உடனே சிகிச்சையைத் தொடங்க அது பெரும் உதவியாக இருந்தது. சிகிச்சை மையத்தில் கலை மற்றும் இசை நிகழ்ச்சி நடத்தச் செய்து பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்தைப் போக்கினார். வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பவர்களை அடிக்கடி சந்தித்து என்ன தேவை எனக் கேட்டு, அதைச் செய்து கொடுத்து, தைரியமாக இருக்கச் சொல்லிட்டு வருவதையும் தொடர்ந்தார். கலெக்டர் அலுவலக அறையைவிட அரசு மருத்துவமனையிலேயே அவரை அதிகம் பார்க்க முடியும்.

கொரோனா பணியில்...
கொரோனா பணியில்...

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சில தினங்களிலேயே 300 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்பாடு செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார். பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதும் தஞ்சாவூரில் இன்னும் கொரோனா குறையவில்லை. தடுப்புப் பணியில் சுணக்கம் காட்டியிருந்தால் நிலை அபாயகட்டத்தை எட்டியிருக்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமில்லாமல் அனைவருக்கும் பொதுவாகச் செயல்பட்டார்.

மாவட்டத்தில் வளர்ச்சிக்குப் பல்வேறு வகையில் சிறப்பாகப் பணியாற்றினார். `நெற்களஞ்சியம்’ எனப் பெயரெடுத்த தஞ்சையில் விவசாயிகளின் கோரிக்கைகளைக் காது கொடுத்துக் கேட்டு, அவற்றைத் தீர்ப்பதில் அக்கறை காட்டினார். அவருடைய சிறப்புமிக்க செயல்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். தஞ்சையின் வளர்ச்சிக்குப் பல்வேறு திட்டங்கள் வைத்திருப்பதாகக் கூறிவந்தார். இன்னும் சில ஆண்டுகள் தஞ்சாவூரிலேயே கலெக்டராகப் பணிபுரிவார் என எண்ணியிருந்தோம். ஆனால் திடீரென அவர் மாற்றப்பட்டுவிட்டார். பொதுமக்கள் மட்டுமன்றி, அரசு அலுவலர்களும் அவரைப் பாராட்ட தவறியதில்லை. கலெக்டர் கோவிந்தராவின் பணி மாற்றத்தை மனம் ஏற்க மறுத்தாலும், தஞ்சாவூருக்கு மட்டும் கிடைத்த அவரின் அன்பு, ஆதரவு, தலைசிறந்த சேவை தமிழகம் முழுமையும் கிடைக்கப்போகிறது என எங்களைத் தேற்றிக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு