Published:Updated:

டெல்லி செங்கோட்டை போன்று கோவையில் பிரமாண்ட `தேசபக்தி கோட்டை’... என்ன ஸ்பெஷல்?

தேசபக்தி கோட்டை

அனுமதிக் கட்டணமின்றி தினமும் காலை 10 முதல் மாலை 7 மணி வரை தேசபக்தி கோட்டையைக் காணலாம்.

டெல்லி செங்கோட்டை போன்று கோவையில் பிரமாண்ட `தேசபக்தி கோட்டை’... என்ன ஸ்பெஷல்?

அனுமதிக் கட்டணமின்றி தினமும் காலை 10 முதல் மாலை 7 மணி வரை தேசபக்தி கோட்டையைக் காணலாம்.

Published:Updated:
தேசபக்தி கோட்டை

நாடு முழுவதும் 76-வது சுதந்திரத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தைப் போற்றும்விதமாக, கோவையில் பிரமாண்டமான தேசபக்தி கோட்டை உருவாக்கப்பட்டிருக்கிறது. வழக்கறிஞர் நந்தகுமாரின் ஜெய் ஹிந்த் பவுண்டேஷன் மற்றும் கோவை லயன்ஸ் இன்டர்நேஷனலின் கூட்டு முயற்சியால் தேசபக்தி கோட்டை உருவாக்கப்பட்டிருக்கிறது. கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட அரங்கத்தைத் திறந்துவைத்தார்.

கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் சாவடி என்னும் இடத்தில் சுமார் 2.3 ஏக்கரில் மூன்று கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கோட்டை, டெல்லியிலுள்ள செங்கோட்டைபோலக் காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக ராஜஸ்தானிலிருந்து கற்கள் எடுத்துவரப்பட்டு, ராஜஸ்தான் பொறியாளர்கள் மூலம் தேசபக்தி கோட்டை வடிவமைக்கப்பட்டிருக்கிற. ஆறு ஆண்டுகள் பெருமுயற்சியால் இந்தக் கோட்டை உருவாகியிருக்கிறது. இந்திய விடுதலைக்காகப் போராடி தன் உயிரை நீத்த விடுதலை வீரர்களைப் போற்றும்விதமாகப் புகைப்படத் தொகுப்பு (Photo gallery) அமைக்கப்பட்டிருக்கிறது.

``சுயநலம் பாராமல் நாட்டின் விடுதலையே முக்கியம் எனப் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் போராடி விடுதலையைப் பெற்றுத் தந்தார்கள். இன்றைய சூழலில் இந்திய விடுதலைத் தியாகிகளை நினைவூட்டுவது காலத்தின் அவசியம். அந்த வகையில் தேசபக்தி கோட்டையில் 130 சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன். மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ், ஜான்சிராணி, சரோஜினி நாயுடு எனப் பல சுதந்திரப் போராட்ட தியாகிகளின் படங்களும் அவர்களைப் பற்றிய தகவல்களும் வைக்கப்பட்டுள்ளன.

அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருணா ஆசஃப் அலி, மேடம் பிகாஜி, பீமா பாய் ஹோல்கர், வாசுதேவ் பல்வந்த் பட்கே, பிகாஜி ருஸ்தோம் காமா, அச்சுஜுத் பட்வர்தன் மற்றும் பிராந்தியத் தலைவர்கள் குறித்த படங்களும் தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றனன. இப்புகைப்படத் தொகுப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. வேலுநாச்சியார், தீரன் சின்னமலை, வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் முதல் சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார், கொடிகாத்த குமரன், ராஜாஜி, காமராஜர், கக்கன், பாரதிதாசன் ஆகியோர் படங்களும் தகவல்களும் வைக்கப்பட்டுள்ளன.

சிப்பாய் கலகம் முதல் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் வரை சுதந்திரப் போராட்ட வீரர்கள் செய்த தியாகம் குறித்த வரலாறுகள் மற்றும் வருங்காலத் தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் கடந்தகால நினைவுகள் குறித்த தகவல்களை இந்தப் புகைப்படத் தொகுப்பில் காண முடிகிறது’’ எனக் கல்லூரி மாணவர்கள் கூறினார்கள்.

வழக்கறிஞர் நந்தகுமார் கூறுகையில், ``நமது சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களை நினைவுகொள்வதற்கும், புதிய தலைமுறையினருக்கு இவ்வீரர்கள் குறித்து அறியச் செய்வதற்கும் இந்தப் புகைப்பட அரங்கம் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் மாணவர்கள் பயன்பெறும்விதமாக நூலகம் ஒன்று அமைப்பதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அனுமதிக் கட்டணமின்றி தினமும் காலை 10 முதல் மாலை 7 மணி வரை தேசபக்தி கோட்டையைக் காணலாம்” என்று கூறினார்.