Published:Updated:

ரூ.10 கோடி வசூல்; பிரச்னையைத் தடுக்க`கப்புக் கறி'; குவியும் பணம்; மொய் விருந்தில் நடப்பதென்ன?

மொய் விருந்து

சில நாள்களுக்கு முன் நெடுவாசலைச் சேர்ந்த பார்த்திபன் ரூ.2.50 கோடி மொய் வாங்கினார். இப்போது எம்.எல்.ஏ அசோக்குமார் ரூ.10 கோடி மொய் வாங்கியிருக்கிறார்.

ரூ.10 கோடி வசூல்; பிரச்னையைத் தடுக்க`கப்புக் கறி'; குவியும் பணம்; மொய் விருந்தில் நடப்பதென்ன?

சில நாள்களுக்கு முன் நெடுவாசலைச் சேர்ந்த பார்த்திபன் ரூ.2.50 கோடி மொய் வாங்கினார். இப்போது எம்.எல்.ஏ அசோக்குமார் ரூ.10 கோடி மொய் வாங்கியிருக்கிறார்.

Published:Updated:
மொய் விருந்து
"என்னாது... பத்து கோடியா...?" என திகைத்துப் போய்விட்டார்கள் கேள்விப்பட்டவர்கள். போதாக்குறைக்கு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை வேறு அறிக்கைவிட, கடந்தவாரம் தமிழகத்தில் பேசுபொருளானது, பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார் 10 கோடி மொய் வாங்கிய விவகாரம்.

தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களின் எல்லையில் உள்ள பேராவூரணி, நெடுவாசல், ஆலங்குடி, பட்டுக்கோட்டை வட்டாரங்களில் ஆடி, ஆவணி மாதங்களில் மொய்விருந்து விழா நடக்கும். கொரோனாவால் இரண்டாண்டுகள் இல்லாமல் போயிருந்த மொய்விருந்துகள் இப்போது வேறு வேறு பெயர்களில் மீண்டும் களைகட்டியுள்ளன. ஆடி, ஆவணி என்றில்லாமல் வருடம் முழுவதும் நடத்தப்படும் மொய்விருந்துகளால் சம்சாரிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதென்ன மொய்விருந்து..?

இப்படிக்கேட்டால், "சின்னக்கவுண்டர் படத்தில் சுகன்யா நடத்துவாங்களே, விஜயகாந்த்கூட விருந்து சாப்பிட்டு இலைக்குக்கீழே பணம் வைத்துவிட்டுச் செல்வாரே... அதுதானே" என்பார்கள் சிலர். அதெல்லாம் அதீத சித்தரிப்பு. மொய்விருந்து என்பது மிகப்பெரும் பொருளாதார பரிவர்த்தனை. ஒருகாலத்தில் உறவுகளுக்குள் நடந்துவந்த இந்த மொய் கலாசாரம் இன்று ஜாதி, மதம் கடந்து பந்தமாக விரிவடைந்திருக்கிறது.

மொய் பணம் எண்ணுதல்
மொய் பணம் எண்ணுதல்

நல்ல நிகழ்வுகள் திட்டமிட்டு நடக்கும். கெட்ட நிகழ்வுகள் திடீரென்று நடந்திடும். அந்தமாதிரி நேரத்தில் துக்கவீட்டுக்காரர் செலவுக்குப் பணமில்லாமல் தவித்துவிடக்கூடாது என்பதற்காக உறவுக்காரர்கள் தங்களால் முடிந்த பண உதவியைச் செய்வார்கள். உதவி வாங்கியவர், கொடுத்தவர் வீட்டில் அப்படி துக்கம் நடந்தால் அவரால் ஆனதைச் செய்வார். அப்படி ஆரம்பித்தது, சுபகாரியங்களில் மொய் போடும் வழக்கமாக மாறியது. அது அப்படியே வளர்ந்து தனியாக மொய்விருந்து என்றே நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை இது நல்லவிதமாத்தான் சென்றது. பிள்ளைகள் படிப்பு, கல்யாணம், தொழில் தொடங்குவதென்று வட்டியில்லாக் கடன் மாதிரி முதலீடாக உதவியது. இன்று தொழில்வடிவம் எடுத்துவிட்டது மொய்விருந்து.

முன்பெல்லாம் ஒருவர் மட்டுமே மொய்விருந்து நடத்துவார். இன்று முப்பது பேர் வரை சேர்ந்து நடத்துகிறார்கள். நாள் குறித்ததும் பத்திரிகை அடிப்பார்கள். 'விருந்துண்டு மொய் பெய்து விழாவை சிறப்பிக்க வேண்டும்' என்று அச்சிடப்பட்ட பத்திரிகையை தங்களுக்கு வரவு செலவு இருக்கும் எல்லா குடும்பங்களுக்கும் வழங்குவார்கள். பெரும்பாலும் வீடுகளுக்குள் வீசிச்செல்வார்கள்.

மொய்விருந்து அழைப்பிதழ்
மொய்விருந்து அழைப்பிதழ்

பெரும்பாலும் தனி நபர்கள் நடத்தும் மொய்விருந்துகளில் சைவ விருந்து. நான்கைந்து பேர் சேர்ந்து நடத்தினால் அசைவ விருந்து நடக்கும். இந்த மொய்விருந்தில் போடப்படும் சைவ, அசைவ உணவுக்கு இணையேயில்லை.

மொய்விருந்து
மொய்விருந்து

மொய் விருந்து நடத்துவதற்கென்று இந்தப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான விழா அரங்கங்கள் உண்டு. அந்த அரங்கங்களைக் கடந்தாலே கறிக்குழம்பு வாசனை உள்ளே இழுக்கும். அரங்கத்தின் முகப்பில் மொய்ச்சட்டிகளையும் நோட்டுகளையும் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பார்கள். வருபவர்கள் மொய்யை எழுதிவிட்டு விருந்து சாப்பிடச் செல்வார்கள். விருந்தில் இடம் பிடிப்பது பெரும்பாடு. கறி பரிமாறுவதில் பிரச்னைகள் ஏற்பட்டதால் இப்போதெல்லாம் கப்புக் கறிதான். ஒரே சீராக எல்லோருக்கும் கப்புகளை கவிழ்த்துச் செல்வார்கள்.

மொய் செய்தவர், எத்தனை ஆண்டுகள் கழித்து விழா நடத்துகிறாரோ அதற்கேற்றவாறு `புதுநடை' என்ற பெயரில் அதிகமாகப் போடவேண்டும் என்று எழுதப்படாத விதி இருக்கிறது.

80களில் தான் இந்த தொழில்முறை மொய் விருந்து விழாக்கள் தொடங்கின. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருவர் மொய்விருந்து நடத்தலாம். அதற்கு முன் நடத்தினால் அவருக்கு போதிய அளவுக்கு மொய் வராது. அவர்மேல இருக்கும் நம்பகத்தன்மையும் போய்விடும். கிட்டத்தட்ட இது கடன்மாதிரிதான். வங்கிகளில் கடன் வாங்க சொத்து வேண்டும். மொய்விருந்தில் பணம் திரட்ட நம்பிக்கையும் நாணயமும் இருந்தால் மட்டும் போதும். மொய்விருந்தால் பல குடும்பங்கள் நன்றாக வந்துள்ளன. நிறைய பேர் வந்த மொய்ப்பணத்தை வைத்து தொழில் தொடங்கி செட்டிலாகியிருக்கிறார்கள். இன்று 20-30 பேர் சேர்ந்து மொய் விருந்து நடத்துவதுதான் நிலையைச் சிக்கலாக்கியிருக்கிறது. 30 பேருடனும் ஒருவருக்கு வரவு செலவு இருந்தால் அவர் பாடு திண்டாட்டம் தான்

மொய் எழுதுதல்
மொய் எழுதுதல்

மொய்விருந்து விழாக்களில் விருந்து முடியும்முன்பாக அரங்கத்துக்குப் போய் மொய்யை எழுதிவிட வேண்டும். சற்று தாமதித்தாலும் 'உடன் பின் வரவு' என்று தலைப்பிட்டு அதற்குக் கீழே எழுதிவிடுவார்கள். அது மிகப்பெரிய கௌரவக் குறைச்சல். ஒரே நேரத்தில் நிறைய பேர் சேர்ந்து விழா நடத்துவதால் பலரால் மொய் செய்யமுடிவதில்லை. ஒருநாள் பார்த்துவிட்டு மறுநாளே அவர்கள் வீட்டுக்கு மொய்ப்பணம் கேட்டு ஆள் அனுப்பிவிடுவார்கள். ஒரிருமுறைக்குள் பணத்தைக் கொடுக்காவிட்டால் அசிங்கப்படுத்துவதும் உண்டு. இதற்கு அஞ்சியே பலர் 'போட்ட மொய் மட்டும் போடவும்' என்று வாங்கிக்கொண்டு இதிலிருந்து வெளியேறிவிட்டார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்புவரை குறைந்தபட்ச மொய் என்பது 50 ரூபாயாக இருந்தது. இப்போது 500 ரூபாய். அதிகப்பட்சம் 1 லட்சம் வரைக்கும் மொய் செய்கிறார்கள். முன்பெல்லாம் 1 லட்சம் மொய் வாங்கினால் பெரிய விஷயம். இப்போது ஒரு கோடியெல்லாம் சர்வசாதாரணம். சில நாள்களுக்கு முன் நெடுவாசலைச் சேர்ந்த பார்த்திபன் 2.50 கோடி மொய் வாங்கினார். இப்போது எம்.எல்.ஏ அசோக்குமார் 10 கோடி மொய் வாங்கியிருக்கிறார்

மொய் விருந்து மூலம் கருப்புப்பணம் வெள்ளையாகிறதா? பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையா? இந்த வீடியோவில் பாருங்கள்! - வீடியோ