Published:Updated:

துளசி அய்யா வாண்டையார்: உதவ முன்வந்த ஒபாமா... வியந்த அப்துல் கலாம் - சோகத்தை ஏற்படுத்திய இழப்பு

துளசி அய்யா வாண்டையார்
துளசி அய்யா வாண்டையார் ( ம.அரவிந்த் )

காந்தி கொள்கையில் கெட்டியாக இருந்ததால், கடைசிவரை கதர் ஆடை மட்டுமே உடுத்திவந்தார். காந்தி வெள்ளிக் கிழமையில் சுட்டுக் கொல்லப்பட்டதால், அன்றைய தினம் முழுவதும் மெளன விரதம் இருப்பதைக் கடைசிவரை கடைப்பிடித்தவர் துளசி அய்யா வாண்டையார்.

தஞ்சாவூரின் பாரம்பர்யமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தனது கல்லூரி மூலம் கல்வி பயிலவைத்து ஏழை மாணவர்களின் வாழ்கையில் ஒளி ஏற்றியவருமான துளசி அய்யா வாண்டையார், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்திருப்பது டெல்டா மாவட்டங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துளசி அய்யா வாண்டையார்
துளசி அய்யா வாண்டையார்

தஞ்சாவூர் அருகேயுள்ள பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி அய்யா வாண்டையார். அவருக்கு வயது 93. பெரும் நிலக்கிழார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பாரம்பர்யமிக்க குடும்பமாக இவரது குடும்பம் திகழ்ந்துவருகிறது. இவரின் மனைவி பத்மாவதி அம்மாள். மகன் கிருஷ்ணசாமி வாண்டையார், காங்கிரஸ் கட்சியில் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். மகள் புவனேஸ்வரியை மதுரை அருகேயுள்ள காஞ்சரம்பேட்டை பகுதியில், ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த மலையாண்டி அசோக் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

தன் குடும்பத்தினரால் தொடங்கப்பட்ட பூண்டி புஷ்பம் தன்னாட்சி பெற்ற கல்லூரியின் செயலாளராக இருந்து கடைசிவரை ஒரு பைசாகூட நன்கொடை வாங்காமல் தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் கல்வி பயில்வதற்கு வித்திட்டவர். அவரது கல்லூரியில் பயின்ற மாணவர்கள் இன்றைக்கு இந்தியா முழுவதிலும் பல அரசுப் பதவிகளில் முக்கியப் பொறுப்பு வகித்துவருகின்றனர். இதனால் தஞ்சைப் பகுதியில் துளசி அய்யா வாண்டையாரை `கல்வி காவலர்’ என்றே அழைக்கின்றனர்.

துளசி அய்யா வாண்டையார்
துளசி அய்யா வாண்டையார்

காந்திய கொள்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டு கடைசிவரை கடைப்பிடித்தவர். உணவுக் கட்டுப்பாடு, யோகா, தினசரி மூச்சுப்பயிற்சி என எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும், கடைசிவரை மருத்துவமனைப் பக்கமே எட்டிப் பார்க்காமல் ஆரோக்கியமாக வாழ்ந்த துளசி அய்யா வாண்டையார் சென்னை வளசரவாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சென்னையிலிருந்து சொந்த ஊரான தஞ்சை பூண்டிக்கு எடுத்துவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படவிருக்கிறது. தஞ்சாவூர் பகுதியில் அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவரை நன்கு அறிந்த வட்டாரத்தில் பேசினோம், ``துளசி அய்யா வாண்டையார் தன் இளமைக் கல்வியை ஏற்காடு மான்ஸ்போர்ட் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை சென்னை லயோலாவிலும் படித்தார். பின்னர் தன் குடும்பத்தினரால் தொடங்கப்பட்ட தன்னாட்சிக் கல்லூரியான பூண்டி புஷ்பம் கல்லூரியின் செயலாளராகவும், தாளாளர் பொறுப்பிலும் இருந்து கல்லூரியை நடத்திவந்தார். இப்போது வரை மாணவர்களிடையே ஒத்த பைசாகூட நன்கொடை வாங்காமல் பல்லாயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் கல்வி பயில்வதற்கு உதவியாகவும், உறுதுணையாகவும் இருந்தவர்.

துளசி அய்யா வாண்டையார்
துளசி அய்யா வாண்டையார்

ஏழை மாணவர்கள் 200 பேர் பயன்பெறும் வகையில் தனது சொந்தச் செலவில் கல்லூரில் இலவச ஹாஸ்டல் ஒன்றை நடத்திவந்தார். அதனால் கல்லூரியே அவரது அடையாளமானது. `கல்வி காவலர்’ என்ற பெயரும் அவருக்கு வந்தது. காந்தியின் கொள்கையைக் கடைசிவரை கடைப்பிடித்தவர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பல்வேறு பதவிகளை வகித்து பணியாற்றியதுடன், 1991 முதல் 1996 வரை காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். காமராசர், வைகோ, கி.வீரமணி உள்ளிட்ட பல தலைவர்களிடம் நல்ல நட்பில் இருந்தவர். காமராசரின் கொள்கைகளைப் பின்பற்றியவர். நடிகர் சிவாஜிகணேசனுக்கு ஆலோசனைகளை வழங்கியவர்.

எம்.பி-யாக இருந்தபோது ஒரு நாள்கூட விடுப்பு எடுக்காமல் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டவர். நாடாளுமன்ற வளாகத்திலுள்ள நூலகத்தில் அதிக நேரம் இருந்த எம்.பி-க்களின் பட்டியலில் இவர் பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். வாழ்க்கைக்குத் தேவையான குறிப்புகள்கொண்ட `இன்ப வாழ்வு’ என்ற புத்தகத்தை எழுதி, ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் அச்சிட்டு, மக்களிடத்தில் இலவசமாகக் கொடுத்துவந்தார்.

துளசி அய்யா வாண்டையார்
துளசி அய்யா வாண்டையார்

தனக்கு யாரேனும் பரிசு கொடுத்தால் அதைவிடக் கூடுதலான பரிசைக் கொடுத்து அன்பால் திணறடிப்பார். நேரம் தவறாமைக்கு உதாரணமாக இருப்பார். இவரது தலைமையின் கீழ் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடந்திருக்கின்றன. ஒரு திருமணத்துக்க்குகூட நேரம் தவறிச் சென்றதே இல்லை. கட்டாயம் ஏதோ ஒரு வெள்ளிப் பொருளை பரிசாக வழங்குவார். சம்ஸ்கிருதத்தில் புலமை வாய்ந்தவர். ஓவியர் மணியம் வரைந்த பொன்னியின் செல்வன் ஓவியக் கதையில் வந்திய தேவன் கதாப்பாத்திரத்தின் மாடலாக துளசி அய்யா வாண்டையார் இருந்தார் என்பது பலருக்குத் தெரியாத தகவல்.

கல்லூரி
கல்லூரி

பால்மர் ரைட்டிங் முறையில் எழுதுவதில் வல்லமை பெற்றவர். காந்தி கொள்கையில் கெட்டியாக இருந்ததால், கடைசிவரை கதர் ஆடை மட்டுமே உடுத்திவந்தார். காந்தி வெள்ளிக்கிழமையில் சுட்டுக் கொல்லப்பட்டதால், அன்றைய தினம் முழுவதும் மெளன விரதம் இருப்பதை கடைசிவரை கடைப்பிடித்துவந்தார். அந்த அளவுக்கு காந்தியின் மீது ஈர்ப்புகொண்டவர்.

இரண்டாவது முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர், அதன் பிறகு தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொண்டார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எழுதிய நூல்களைப் படித்துவிட்டு மெயில் மூலம் தனது கருத்தை அனுப்பிவைத்தார். அதைப் படித்து விட்டு ஒபாமா துளசி அய்யா வாண்டையாருக்கு ரிப்ளை அனுப்பினார். அப்போது முதல் மெயில் மூலம் இருவரும் நட்பு பாராட்டிவந்தனர். அவரைப் பற்றியறிந்த ஒபாமா, `உங்களுக்கோ அல்லது உங்கள் கல்லூரிக்கோ என்ன உதவி வேண்டும்... கேளுங்கள் செய்து தருகிறேன்’ எனக் கேட்க, `எனக்குத் தேவையானவை கடவுள் புண்ணியத்தால் கிடைத்துவிட்டன. அந்த உதவியை ஏழை மாணவர்களுக்கு செய்யுங்கள்’ என்று மெயில் அனுப்பி ஒபாமாவை மெய்சிலிர்க்கவைத்தார். தனது கல்லூரி விழாவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை அழைத்து வந்தபோது கல்லூரியின் நிர்வாகத்தைப் பார்த்து அப்துல் கலாம் வியந்து பாராட்டினார்.

துளசி அய்யா வாண்டையார்
துளசி அய்யா வாண்டையார்

பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். அமெரிக்கன் பயோ கிராபிக் என்ற இன்ஸ்டிட்யூட், உலகின் தலைசிறந்த 500 மனிதர்களைத் தேர்ந்தெடுத்தது. அதில் துளசி அய்யா வாண்டையாரும் இடம்பெற்றார் என்பது சிறப்புக்குரியது. பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்ததை பயணக் கட்டுரையாக எழுதுவதை வாடிக்கையாகக்கொண்டவர். அவருடைய இழப்பு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்துக்கு பேரிழப்பு. மாணவர்களுக்கும் மக்களுக்கும் தனது கல்லூரியின் மூலம் மட்டுமல்ல, உதாரணமாக வாழ்ந்ததன் மூலம் பாடமாகவும் மாறி மறைந்திருக்கிறார்” என்று சோகத்துடன் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு