Published:Updated:

கொடநாடு : 'வாளையார்' மனோஜின் ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்திய நீதிமன்றம்; காவல்துறை ஆட்சேபனை!

வாளையார் மனோஜ்
வாளையார் மனோஜ்

ஜாமீன் கிடைத்தும், ஷ்யூரிட்டி அளிக்க ஆள் இல்லாததால் கடந்த இரண்டு மாதங்களாகச் சிறையிலிருக்கும் `வாளையார்' மனோஜின் ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்தி உத்தரவிட்டார் நீலகிரி மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் முதன்மைக் குற்றவாளிகளில் ஒருவராகக் கருதப்படும் `வாளையார்' மனோஜ் பெயரை இரண்டாவது குற்றவாளியாகச் சேர்த்திருக்கிறது காவல்துறை. 2019-ம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்த 'வாளையார்' மனோஜ், சயானுடன் சேர்ந்தே டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து ``எடப்பாடி பழனிசாமி சொன்னதன் பேரில்தான் இந்தச் சம்பவத்தைச் செய்தோம்’’ என முன்னாள் முதலமைச்சர்மீது கொலைக் குற்றததைச் சுமத்தினர். உடனடியாக இருவரது ஜாமீனையும் ரத்து செய்து கோவை சிறையில் அடைத்தனர். மேலும்‌ இருவர் மீதும் குண்டர் சட்டம் பதியப்பட்டது.

சயான், வாளையார் மனோஜ்
சயான், வாளையார் மனோஜ்

பலத்த போலீஸ் பாதுகாப்புடனேயே கோவையிலிருந்து இருவரும் வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. திமுக தரப்பு வழக்கறிஞர்கள் சயானுக்கு ஷ்யூரிட்டி கையெழுத்திட்டு வெளியில் எடுத்து கவனித்துவருகின்றனர்.

ஆனால், ஜாமீன் கிடைத்தும் ஷ்யூரிட்டி அளிக்க ஆள் இல்லாததால் கடந்த இரண்டு மாதங்களாக மனோஜ் சிறையிலேயே இருந்தார். தனது ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்த வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இரண்டாவது நாளாக இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனோஜ் தரப்பு வழக்கறிஞர் மற்றும் காவல்துறையின் வாதத்துக்குப் பிறகு ஜாமீன் மீதான நிபந்தனையைத் தளர்த்தி உத்தரவிட்டார் நீலகிரி மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா.

Vikatan
வழக்கறிஞர் முனிரத்தினம்
வழக்கறிஞர் முனிரத்தினம்

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பகிர்ந்த மனோஜ் தரப்பு வழக்கறிஞர் முனிரத்தினம், ``ரூபாய் 50,000 பிணைத் தொகை கொடுக்க வேண்டும். சொத்து மதிப்பைக் கொடுத்து ஷ்யூரிட்டி கையெழுத்திடும் இருவரும் நீலகிரி அல்லது கோவையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிபந்தனைகளை ஏற்று மனோஜை வெளியில் எடுக்க ஆள் இல்லாததால், இந்த நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் என மனுத்தாக்கல் செய்தோம். விசாரணைக்குப் பிறகு தளர்வுகளை அளித்து உத்தரவிட்டார் நீதிபதி. அதன்படி,கேரளாவைச் சேர்ந்த ரத்த உறவுகளும் ஷ்யூரிட்டி அளிக்கலாம். விரைவில் மனோஜ் ஜாமீனில் வெளிவர வாய்ப்புள்ளது. மனோஜின் ஜாமீன் நிபந்தனை தளர்வுக்கு ஆட்சேபனை இல்லை என நேற்று வாய்மொழியாக நீதிமன்றத்தில் தெரிவித்த காவல்துறை தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு