Published:Updated:

தமிழ்நாட்டில் மின்சார வாகன விற்பனை அதிகரிப்பு! - பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமா?

மின்சார வாகனம்

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மின்சார வாகனங்களை வாங்கிப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. நடப்பு ஆண்டில் (26.10.22-ம் தேதி வரை) 51,899 மின்சார வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன.

தமிழ்நாட்டில் மின்சார வாகன விற்பனை அதிகரிப்பு! - பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமா?

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மின்சார வாகனங்களை வாங்கிப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. நடப்பு ஆண்டில் (26.10.22-ம் தேதி வரை) 51,899 மின்சார வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன.

Published:Updated:
மின்சார வாகனம்

இந்தியா முழுவதுமிருக்கும் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் தற்போதைய நிலவரப்படி (26.10.22-ம் தேதி வரை) 30,37,51,321 வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 3,04,47,302 வாகனங்கள் பதிவாகியிருக்கின்றன. இந்த எண்ணிக்கையில் பெட்ரோல், டீசல் மூலம் இயங்கக்கூடிய வாகனங்களே மிக அதிகம். இந்த நிலையில், சமீபகாலமாக இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் நிலையம்
பெட்ரோல் நிலையம்

டீசலின் விலையும் அதிகமாக இருக்கிறது. நாள்தோறும் எரிபொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மேலும் பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் சுற்றுசூழலுக்குக் கேடு விளைவிப்பதாகவும் இருக்கின்றன. எனவே, இதற்கு மாற்றாக இருக்கக்கூடிய மின்சார வாகனங்களின் பக்கம் பொதுமக்களின் பார்வை திருப்பியிருக்கிறது. மத்திய, மாநில அரசுகளும் இதை ஊக்குவித்துவருகின்றன.

குறிப்பாக குறைந்த செலவிலான மின்சார வாகனங்களை உருவாக்குவது, தரமான 'சார்ஜிங்' மையங்கள் அமைப்பது, பேட்டரி உள்ளிட்ட உதிரி பாகங்களை உருவாக்குவோருக்கு சிறப்புச் சலுகை வழங்குவது போன்றவை முக்கியமானதாக இருக்கின்றன. இதன் காரணமாக இந்தியா முழுவதும் சமீபகாலமாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியா முழுவதும் நடப்பு ஆண்டில் மட்டும் 7,40,317 மின்சார வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

மின்சார வாகனம்
மின்சார வாகனம்

அந்த வகையில் தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் (26.10.22-ம் தேதி வரை) இதுவரை 51,899 மின்சார வாகனங்கள் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இதுவே கடந்த 2018-ம் ஆண்டில் வெறும் 1,332 மின்சார வாகனங்கள் மட்டுமே தமிழ்நாடு முழுவதுமிருக்கும் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் பதிவுசெய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நம்மிடம் பேசிய போக்குவரத்துத்துறை ஆணையரக உயரதிகாரி ஒருவர், "பெட்ரோல், டீசல் விலை உயர்வும், சுற்றுசூழலுக்கு உகந்த பயணத்தை மக்கள் நாடுவதும் மின்சார வாகனங்களின் விற்பனை உயர்வுக்கு மிக முக்கியக் காரணங்களாகும். இந்தியா முழுவதும் மின்சார வாகனங்களை வாங்கிப் பயன்படுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதன் விளைவாக மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது. அதாவது, தமிழ்நாடு முழுவதும் கடந்த 2018-ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 21,14,575 வாகனங்கள் பதிவாகியிருந்தன. இவற்றில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 1,332.

போக்குவரத்துத்துறை ஆணையர் அலுவலகம் - எழிலகம்
போக்குவரத்துத்துறை ஆணையர் அலுவலகம் - எழிலகம்

அதேபோல் 2019-ம் ஆண்டில் 19,68,529 வாகனங்கள் பதிவான நிலையில், மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 3,444-ஆகவும்; 2020-ம் ஆண்டில் 14,92,303 வாகனங்கள் மொத்தமாக பதிவுசெய்யப்பட்டதில், மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 5,698-ஆகவும், 2021-ம் ஆண்டில் மொத்தமாக 15,14,902 வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டதில், மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 30,034-ஆகவும் இருக்கிறது.

நடப்பு ஆண்டில் இதுவரை 14,00,162 வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 51,920-ஆக இருக்கிறது. இது வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே, இதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன" என்றார்.