Published:Updated:

மதுரை சித்திரைத் திருவிழாவில் இத்தனை குளறுபடிகளா?! - தொடர் குற்றச்சாட்டுகளும் அமைச்சரின் பதிலும்!

மதுரை சித்திரைத் திருவிழா

மண்டகப்படியில் நிறுத்தாததற்கு நேரமின்மைதான் காரணம் என்பதை மறுத்துள்ள அழகர் கோயில் நிர்வாகம், மண்டகப்படியில் நின்று செல்லாதது விபத்து ஏற்படக் காரணம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

மதுரை சித்திரைத் திருவிழாவில் இத்தனை குளறுபடிகளா?! - தொடர் குற்றச்சாட்டுகளும் அமைச்சரின் பதிலும்!

மண்டகப்படியில் நிறுத்தாததற்கு நேரமின்மைதான் காரணம் என்பதை மறுத்துள்ள அழகர் கோயில் நிர்வாகம், மண்டகப்படியில் நின்று செல்லாதது விபத்து ஏற்படக் காரணம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

Published:Updated:
மதுரை சித்திரைத் திருவிழா

``இறந்தவர், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு கொடுத்தால் மட்டும் போதுமா... கள்ளழகர் திருவிழாவில் நடந்த மோசமான சம்பவத்துக்கும், இன்னும் பல குற்றச்சாட்டுகளுக்கும் யார் காரணம் என்பதை கமிஷன் அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கையை மதுரையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள்.

கள்ளழகர்
கள்ளழகர்

மதுரையில் சமீபத்தில் நடந்து முடிந்த சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலில் இருவர் மரணமடைந்து, 12 பேர் காயமடைந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு முழுக் காரணம் மாவட்ட நிர்வாகமும், அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியமே என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் பங்களிப்பில்லாமல் நடந்தது சித்திரைத் திருவிழா. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதால் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டார்கள். இவ்வளவு மக்கள் வருவார்கள், அதற்கேற்ப ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று பல்வேறு அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்திடம் முன்பே கோரிக்கைவைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள்.

கள்ளழகர்
கள்ளழகர்

அழகர் கோயிலிலிருந்து கள்ளழகர் தாமதமாகக் கிளம்பியது... பல மண்டகப்படிகளில் நிற்காமல் சென்றது... வழக்கம்போல் மக்களை ஆற்றில் இறங்கி அழகரை வழிபடத் தடை போட்டது... பொதுமக்கள் வரும் பாதையை அடைத்தது... லட்சக்கணக்கான மக்களை ஒரே பக்கத்தில் அடைத்தது... என்று பல புகார்கள்.

அது மட்டுமல்லாமல் மக்களுக்குப் பாதுகாப்புத் தருவதைவிட்டு விழாவுக்கு வந்த வி.ஐ.பி-க்களையும், அவர்களின் குடும்பத்தினரைப் பாதுகாப்பதில் காவல்துறை அதிக கவனம் செலுத்தியதும் விபத்து ஏற்பட முக்கியக் காரணம் என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன், "மீனாட்சி திருக்கல்யாணம் முதல் அழகர் ஆற்றில் இறங்கும் விழா வரை அனைத்தும் பொதுமக்களைப் புறக்கணித்து அரசு அதிகாரிகள், விஐபி-க்கள், அவர்களின் குடும்பத்தினர் நிம்மதியாகக் கலந்துகொள்ளும் வகையிலேயே நடந்தது.

சோலைக்கண்ணன்
சோலைக்கண்ணன்

இரண்டு வருடங்களுக்குப் பிறகு மக்கள் கலந்துகொள்வதால் கூட்டம் அதிகமாக வரும் என்பது அனைவருக்கும் தெரியும். தெரிந்தும் விழாவைக் கண்டுகளிக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் தவறிவிட்டது. பக்தர்களை வழக்கம்போல் ஆற்றுக்குள் இறங்கி வழிபட அனுமதித்திருந்தால் நெரிசல் ஏற்பட்டிருக்காது. இந்த விபத்தும் நடந்திருக்காது. ஆனால், லட்சக்கணக்கான மக்கள் பிரச்னை இல்லாமல் வழிபட ஏற்பாடு செய்திருக்கவேண்டிய அதிகாரிகள், வந்திருந்த விஐபி-க்களுக்கு முக்கியத்துவம் அளித்ததால் மக்களை அவர்களால் பாதுகாக்க முடியவில்லை.

இந்த விழாவை நடத்த கடந்த ஒரு மாதமாக மாவட்ட அதிகாரிகள், காவல்துறையினர் ஆலோசனை நடத்தி என்ன பிரயோஜனம்... இதேபோல் மீனாட்சியம்மன் கோயில் திருக்கல்யாண நிகழ்ச்சியிலும் விபத்து ஏற்படவிருந்தது. அந்த அளவுக்கு மோசமான ஏற்பாடுகள். மக்களுக்கு அடிப்படை வசதிகளோ, முதலுதவி சிகிச்சை ஏற்பாடுகளோ எதுவும் செய்யவில்லை. அதே நிலைதான் கள்ளழகர் திருவிழாவிலும். முதலில் எந்தவோர் ஆன்மிக விழாவிலும் வி.ஐ.பி தரிசனம், கட்டண தரிசனத்தை நீக்க வேண்டும்" என்றார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்ச்சியில் இதுவரை அசம்பாவிதம் நடந்ததில்லை. இது மோசமான சம்பவம். மக்கள் வந்து செல்ல வழக்கத்தில் இருந்த பாதைகளை அடைத்துவிட்டனர். ஆற்றில் தண்ணீர் வரத்தையும் குறைத்திருக்கலாம். அதை மாவட்ட நிர்வாகம் செய்யவில்லை. உயரதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வதில் காவல்துறையினர் ஆர்வம் காட்டியதால் இந்த நெரிசல் ஏற்பட்டது. இறந்தவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" என்றார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

பாஜக தலைவர் டாக்டர் சரவணன், ``மீனாட்சியம்மன் கோயில் திருவிழாவில் மரபுகள் மீறப்பட்டன. அதேபோல் கள்ளழகர் திருவிழாவிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. பணம் செலுத்திய மண்டகப்படிகளுக்கு கள்ளழகர் செல்லவில்லை. அழகரைக் காண வழியிலுள்ள மண்டபப்படிகளில் மக்கள் காத்திருக்க அழகரை நேரடியாக கோரிப்பாளையம் வழியாக வைகை ஆற்றுக்குள் கொண்டு சென்றதால் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் பின்தொடர்ந்து மொத்தமாகச் சென்றதால் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.

வழக்கறிஞர் முத்துக்குமார், "சித்திரைத் திருவிழாவை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகமும், அதைத் தொடர்ந்து கள்ளழகர் கோயில் நிர்வாகமும் நடத்துகிறது. 10 நாள்கள் நடக்கும் மீனாட்சியம்மன் கோயில் விழாவிலும் பொதுமக்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் பட்டாபிஷேகம், திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் விஐபி-களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

டாக்டர் சரவணன்
டாக்டர் சரவணன்

ரூ.200, ரூ. 500 என்று சிறப்பு டிக்கெட்டுகள் போட்டு சாமானிய மக்களை சாமி தரிசனம் செய்ய விடாமல் செய்தனர். அதுபோல் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியிலும் பொதுமக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் விஐபி-களுக்கு முன்னுரிமை கொடுத்தனர். வைகை ஆற்றில் வேலைகள் நடைபெறுவதால் மக்கள் வருவதற்கும் நிற்பதற்கும் நெருக்கடி ஏற்பட்டது. அதேநேரம் வி.ஐ.பி-க்கள் காரில் வந்து இறங்கி எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் வழிபட்டுச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்தனர். இந்தக் குளறுபடிகளுக்கும், விபத்து ஏற்பட்டதற்கும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும், கோயில் நிர்வாக அதிகாரிகளும்தான் காரணம்.

இப்போதுகூட இறந்த இருவருக்கு தலா 5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 1, 2 லட்சம் நிவாரண நிதி கொடுத்துள்ளனர். அதிக மக்கள் கூடும் இது போன்ற பெரிய நிகழ்ச்சிகளுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் இன்ஷூரன்ஸ் செய்திருப்பார்கள். அதன் மூலம் க்ளெய்ம் பெற்று அதிகமான நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாம்" என்றார்.

முத்துக்குமார்
முத்துக்குமார்

வழக்கறிஞர் பி.ஸ்டாலின், "இந்தச் சம்பவத்தை அப்படியே கடந்து சென்றுவிட முடியாது. இதற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இவர்களின் தவறான திட்டமிடலால், பாதுகாப்புக் குளறுபடியால் பெரிய அளவில் விபத்து நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?" என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருக்க, அழகர் கோயில் நிர்வாகம் மீது பல புகார்கள் எழுந்துள்ளன. தங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லையென்றால் சாமியைத் தூக்க மாட்டோம் என்று கடந்த 14-ம் தேதி சீர்பாதம் தாங்கிகள் துணை ஆணையர் அனிதாவுக்கு எதிராக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோயிலிலிருந்து கள்ளழகர் புறப்பட ஒன்றரை மணி நேரம் தாமதமானது. சீர்பாதம் தாங்கிகளின் பிரச்னையை முன்பே தீர்த்திருக்கலாம். ஆனால் அலட்சியத்தால் அன்று சாமி புறப்பட தாமதமானது. இப்படி நடந்த ஒவ்வொரு சம்பவமும் பக்தர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியது. மண்டகப்படிக்காக பணம் பெற்றுக்கொண்டு அங்கு நிற்காமல் சென்றதும் சர்ச்சையாகியிருக்கிறது.

வழக்கறிஞர் பி.ஸ்டாலின்
வழக்கறிஞர் பி.ஸ்டாலின்

நம்மிடம் பேசிய பக்தர்கள், "மண்டகப்படியில் கள்ளழகர் நிற்காமல் சென்றதால்தான் காத்திருந்த மக்கள் அதிர்ச்சியாகி சாமிக்குப் பின்னால் ஓட கூட்டம் கட்டுங்கடங்காமல் நெரிசலானது. பலர் மயங்கி விழுந்தனர். அலறல் சத்தமும் கேட்டது. இந்தப் பதற்றம் ஏற்படக் காரணம் அழகர் கோயில் நிர்வாகம். அதேபோல் வி.ஐ.பி பாஸ் வைத்திருந்தவர்களை நோகாமல் அனுப்பிவைத்த காவல்துறையினர் கோரிப்பாளையம் சந்திப்பில் பல இடங்களில் தடுப்புகளை வைத்ததால் நெருக்கியடித்த மக்களால் வெளியேற முடியவில்லை" என்றனர்.

மண்டகப்படியில் நிறுத்தாததற்கு நேரமின்மைதான் காரணம் என்று மறுத்துள்ள அழகர் கோயில் நிர்வாகம், மண்டகப்படியில் நின்று செல்லாதது விபத்து ஏற்படக் காரணம் இல்லை என்றும், கள்ளழகர் திரும்பிச் செல்லும்போது அனைத்து மண்டகப்படிக்கும் சென்றார் என்றும் தெரிவித்துள்ளனர்.

சேகர் பாபு
சேகர் பாபு

தற்போது இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்திவருகின்றன.

இது குறித்து சட்டசபையில் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, "10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 15 லட்சம் பேர் கலந்துகொண்டார்கள். 3,000 போலீஸ் பாதுகாப்புக்கு இருந்தார்கள். ஆனாலும் நெரிசலில் இருவர் பலியாகிவிட்டனர். இந்தச் சம்பவம் வருத்தமளிக்கிறது. இது எங்களுக்குப் படிப்பினை. இனி வரும் காலங்களில் விபத்து நடக்காமலிருக்கத் திட்டமிடுவோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism