Published:Updated:

தொல்லியல் சின்னங்களைப் பாதுகாப்பது எப்படி? - இலந்தக்கரையில் நேரடி விளக்கம்

இலந்தக்கரை பகுதிக்கு மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் வருகையால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

இலந்தக்கரையில் மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர்கள்
இலந்தக்கரையில் மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர்கள்

சிவகங்கை மாவட்டம், கீழடியில், கடந்த 5 ஆண்டுகளாகத் தொல்லியல்துறை ஆய்வு நடத்தியதில் 2,600 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கிடைத்தன.

முதுமக்கள் தாழி ஆய்வு
முதுமக்கள் தாழி ஆய்வு

இதனால், கீழடியை உலகத்தமிழர்கள் பெருமையாகக் கொண்டாடுகின்றனர். கீழடியை போல பாசிகளும், சுடுமண் பொம்மைகளும், வணிகம் செய்ததற்கான சான்றுகளும் இலந்தகரையில் கிடைத்துள்ளன. இதனால், இலந்தக்கரையில் அகழாய்வுப் பணிநடைபெற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கீழடி கண்காட்சியகம்! - இது மக்களின் வெற்றி!

இந்நிலையில், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையும் அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறையும் இணைந்து கொண்டாடிவரும் உலக பாரம்பரிய வார விழாவின் ஒரு பகுதியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அகழாய்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

படி எடுக்கும் முறை
படி எடுக்கும் முறை

அதன் ஒருபகுதியாக இன்று காளையார்கோவில் புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தொல்லியல் சார்ந்த இடங்களை எவ்வாறு ஆவணப்படுத்துவது, கல்வெட்டைப் படி எடுத்து பண்டைய எழுத்துகளைப் படிப்பது பற்றியும் மாணவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும், தொல்லியல் நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பது பற்றியும் மாணவர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொல்லியல்துறை கண்காணிப்பாளர் கே.மூர்த்தீஸ்வரியின் வழிகாட்டல் படிமுனைவர் ஏ.ஆர்.சரவணகுமார், ஜி.பரந்தாமன், தொல்லியல்ஆய்வாளர் எம்.பிரசன்னா மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் பி.டி.நாகராஜன் ஆகியோர் மாணவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கினர்.

முதுமக்கள் தாழிகளை விளக்குதல்.
முதுமக்கள் தாழிகளை விளக்குதல்.

நிகழ்வில் மாணவர்கள் இலந்தகரையில் உள்ள பல்வேறு தொல்லியல் வாழ்விடங்களையும், ஈமச்சின்னங்களையும் நேரில் சென்று பார்த்து அறிந்து கொண்டனர். காளையார்கோயில் சுற்றியுள்ள பல்வேறு தொல்லியல்சார்ந்த இடங்களை தொல்லியல் ஆர்வலர் ஜெமினிரமேஷ் விளக்கினார். அப்போது தொல்லியல் சார்ந்த தகவல் பற்றி காளிராஜா மற்றும் ராஜசேகர் மாணவர்களிடம் கேள்வி எழுப்பினார்.

` சுடுமண் பானை, எழுத்தாணி, தங்க அணிகலன்!' - மதுரையில் திறக்கப்பட்டது கீழடி கண்காட்சி

சரியாக பதில் சொன்ன மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. காளையார்கோயில் பகுதியில் மத்திய தொல்லியல் துறை முதல்முறையாக ஆய்வு செய்ததை தொல்லியல் ஆர்வலர்கள் மிக முக்கிய நிகழ்வாகக் கருதுகின்றனர். இலந்தக்கரையிலும் கீழடியை போல் அகழாய்வு செய்தால் தமிழரின் சான்றுகள் பூதாகரமான கிடைக்கலாம் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

புத்தகம் பரிசு பெறுதல்
புத்தகம் பரிசு பெறுதல்

`காளையார்கோயில் பகுதியில் உள்ள கல்வெட்டுகள் எவ்வளவு ஆண்டுகள் பழமையானது என்பதை ஆய்விற்குப் பின்னரே சொல்ல முடியும். எனவே, மத்திய, மாநில அரசுகள் காளையார்கோயில் பகுதியில் அகழாய்வுப் பணிகள் நடத்தவேண்டும்'' என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.