Published:Updated:

`அந்தப் பை முழுவதும் 2000, 500 ரூபாய் கட்டுகள்!' - ஏடிஎம் கொள்ளையனை நள்ளிரவில் பிடித்த ஆட்டோ டிரைவர்

Auto driver Murugaiyan
Auto driver Murugaiyan

திருச்சியில் தனியார் வங்கி ஏ.டி.எம்-மில் பணம் நிரப்பியபோது, நூதன முறையில் கொள்ளையடித்தவரை, பெரம்பலூர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் நிரப்புவதற்கான உரிமம் பல்வேறு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், திருச்சியில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்புவதற்கான உரிமம் மும்பையைச் சேர்ந்த `நோக்கி கேஷ்' எனும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 20-ம் தேதி நோக்கி கேஷ் நிறுவனத்தின் ஊழியர்கள் சரவணன், அருண் ஆகியோர், துறையூர் பகுதியிலுள்ள டாடா இண்டிகா, சிண்டிகேட் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணிக்காகச் சென்றனர். அதைத் தொடர்ந்து திருச்சி தெப்பக்குளம் காளியம்மன் கோயில் தெருவில் உள்ள, சிட்டி யூனியன் பேங்க் எனும் தனியார் வங்கி ஏடிஎம்மில் 34,50,000 ரூபாய் பணத்தை நிரப்பிக் கொண்டிருந்தனர்.

Seized money
Seized money

அப்போது, திடீரென அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், சரவணன் மற்றும் அருண் ஆகியோரின் கவனத்தைத் திசைதிருப்பியதுடன், ஏடிஎம்மில் நிரப்பப்பட இருந்த 16 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துவிட்டுச் சென்றுவிட்டார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருச்சி கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

கடந்த மூன்று நாள்களாக வங்கிக் கொள்ளை சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர். ஆனால், குற்றவாளிகள் குறித்து சரியான தகவல் கிடைக்காததால், வங்கியில் பணம் நிரப்பிய ஊழியர்கள் மீது சந்தேகப் பார்வையைத் திருப்பினர். இதனால் தனியார் நிறுவன ஊழியர்களும் பயத்தில் தவித்தனர்.

இதற்கிடையில், தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக நேற்று மதியம் வெளியான தகவலையடுத்து, கோவை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸார் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தினர். குறிப்பாக, திருச்சி ஜங்ஷன் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன. இந்தநேரத்தில், பெரம்பலூர் பேருந்து நிலையத்துக்கு வந்த ஒரு நபர், வாடகைக்கு ஆட்டோ எடுத்ததுடன், தங்குவதற்கான இடம் தேடி அலைந்துள்ளார்.

`என்னால் தனியாகப் போய் ரூம் போட முடியாது நீங்களும் என்னோடு வாருங்கள்' என்றார்
முருகையன்

அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த ஆட்டோ டிரைவர் முருகையன் என்பவர், அந்த நபர் குறித்து விசாரித்ததுடன், அவர் கைப்பையில் வைத்திருந்த லட்சக்கணக்கான பணத்தையும் பார்த்திருக்கிறார். உடனே, தனக்குத் தெரிந்த இடம் இருப்பதாகவும் அங்கு தங்கலாம் என அந்த நபரை அழைத்துச் சென்று போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

Stephen
Stephen

போலீஸார் விசாரணையில், திருச்சி ஏ.டி.எம்மில் நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த பணத்தைக் கொள்ளையடித்த நபர் அவர்தான் என்றும், வங்கிக் கொள்ளை சம்பவத்துக்குப் பிறகு, போலீஸாரின் நெருக்கடிகளுக்கு பயந்து பெரம்பலூர் வந்ததாகவும் தெரியவந்தது. இதையடுத்து, அவரது கைப்பையில் வைத்திருந்த 13 லட்ச ரூபாய் பணத்தைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். போதையில் பணப்பை குறித்து விவரத்தை உளறியதாலேயே கொள்ளையன் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

வங்கிப் பணத்தை மீட்டுக் கொடுத்த ஆட்டோ டிரைவர் முருகையனிடம் பேசினோம். "நான் இரவு நேரச் சவாரியைத்தான் அதிகம் ஓட்டுவேன். இந்தநிலையில் ரோவர் ஆர்ச் பகுதியில் வண்டியைப் போட்டுத் தூங்கிக்கொண்டிருந்தபோது செம போதையில் ஒருவர் பெரிய பையோடு என்னைத் தட்டி எழுப்பி, `ஏதாவது ஒரு ஹோட்டலில் ரூம் போட வேண்டும், அவசரம்' என்று சொன்னார். நானும் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் அவரைக் கொண்டு போய்விட்டேன். அப்போது அவர், `என்னால் தனியாகப் போய் ரூம் போட முடியாது நீங்களும் என்னோடு வாருங்கள்' என்றார். நானும் ரிஷப்ஷனில் இருந்தவரிடம், `ஒரு ரூம் போட்டுக் கொடுங்கள்' என்றேன். அவர்கள், ஐ.டி கார்டு கேட்டார்கள், வந்த நபரோ `என்னிடம் ஐ.டி இல்லை, உங்களது ஐ.டி-யைக் கொடுங்கள்' என்றார். `நான் எப்படி சார் கொடுக்க முடியும், உங்களிடம் வேறு ஏதும் ஐடி இல்லையா' என்றேன். அங்கு அறை கிடைக்காததால், வேறு 4, 5 ஹோட்டல்களைப் பார்த்தோம்.

ஆட்டோ டிரைவர் முருகையன்
ஆட்டோ டிரைவர் முருகையன்

ஒருவழியாக, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்றபோது ஐ.டி பிரச்னை வரும் என்று தெரிந்தது. அவர் போதையில் இருந்ததால், அவர் வைத்திருந்த பையின் ஜிப்பைத் திறந்து பார்த்தபோது கட்டுக்கட்டாக 2000 நோட்டுகளும் 500 ரூபாய் நோட்டுகளும் இருந்தன. அதுமட்டுமல்லாமல் அவர் ஆட்டோவில் வரும்போது, யாரோ ஒருவரிடம், `2 நாளைக்கு என்னைத் தொடர்பு கொள்ளாதே... செல்போனை அணைத்து வைத்துவிடுவேன்' என்றார். இது எல்லாமே எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு தான் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன். போலீஸ் விசாரணையில்தான் சம்பந்தப்பட்ட நபர், ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர் எனத் தெரியவந்தது" என இயல்பாகப் பேசி முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு