Published:Updated:

`தூங்குறதுக்கு 10 நிமிஷம் முன்னாடி எங்களைப் பத்தி யோசிங்க!' - கண்ணீரில் ஆனைமலைப் பழங்குடி மக்கள்

காடர் பழங்குடி
காடர் பழங்குடி

கனமழை, வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட ஆனைமலைக் குன்று பழங்குடி மக்கள், தங்களுக்குப் பாதுகாப்பான மாற்று இடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலைப் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான பழங்குடி கிராமங்கள் உள்ளன. கடந்த ஆண்டு அங்கு பெய்த கனமழை, காட்டாற்று வெள்ளம் போன்றவை அந்த மக்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டுவிட்டன. நாகரூத்து என்ற பழங்குடி கிராமத்தில் மலசர் இனப் பழங்குடி மக்கள் அதிகம் வசித்துவருகின்றனர்.

பாதிப்பு
பாதிப்பு

இதற்கிடையே, கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் பாறைகள் உருண்டு வந்து, அங்குள்ள 22 வீடுகளை அடித்துச் சென்றன. இதில், குஞ்சப்பன் என்பவரின் இரண்டு வயது மகள் சுந்தரி அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். சில நாள்களுக்குப் பிறகே சுந்தரியின் உடல் கிடைத்தது.

"கரன்ட்டே இல்லாம எப்படி சார் படிக்க முடியும்?" - கண்ணீரில் ஆனைமலை பழங்குடி மக்கள்

அதேபோல, வால்பாறை கல்லார் பழங்குடி கிராமும் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில், 23-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றன. இதையடுத்து, அவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். மலசர் இன மக்கள், சரிவான பகுதிகளில் குடிசை அமைத்து வசித்துவருகின்றனர்.

பழங்குடியினர்
பழங்குடியினர்

நடப்பாண்டும் கனமழை பெய்துவருவதால், எப்போது வேண்டுமானாலும் பெருத்த சேதம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் பழங்குடி மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். `மாற்று இடம் வேண்டும்’ என்ற அந்த மக்களின் கோரிக்கை, தற்போதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இது குறித்து காடர் பழங்குடியினப் பெண்கள், ``10 நாள்ல தீர்வு கிடைக்கும்னு சொன்னாங்க. இப்போ ஒரு வருஷம் ஆகிடுச்சு. இதுக்கப்புறம் நீங்க நடவடிக்கை எடுப்பீங்களானு தெரியலை. ஒருவேளை நிலச்சரிவானதுக்கு அப்புறம் பத்திரிகை, டி.வி-க்காரங்க, அதிகாரிங்க இங்கே வந்து என்ன பிரயோஜனம்... நீங்க கொடுக்குற நிவாரணத்தை யார் வாங்குவாங்க? எத்தனை லட்சம் கொடுத்தாலும் ஒரு உயிரை வாங்க முடியாது.

பழங்குடியினப் பெண்கள்
பழங்குடியினப் பெண்கள்

முகாம்ல தங்கவெச்சிருக்காங்க. எல்லாரையும் ஒரே இடத்துல அடைச்சுவெச்சிருக்காங்க. ஒரு பொண்ணு தன்னோட வேதனைகளை எப்படி வெளிப்படுத்துவா... கொஞ்சம் கருணை காட்டுங்க. நாங்க செத்ததுக்கு அப்புறம் வருத்தப்பட வேண்டிய சூழ்நிலையே இருக்காது.

தூங்குறதுக்கு 10 நிமிஷத்துக்கு முன்னாடி எங்களைப் பத்தி யோசிச்சுப் பாருங்க... நீங்க எங்களுக்கு உதவி செஞ்சே ஆகணும்னு நாங்க சொல்ல மாட்டோம். மனசாட்சி இருந்தா, எங்களுக்கு மாற்று இடம் கொடுங்க” என்று கண்ணீருடன் கோரிக்கைவைக்கின்றனர்.

மனு
மனு

இந்நிலையில், `ஆனைமலைக் குன்றுகளில் வாழும் பழங்குடி மக்களுக்குப் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்; அவர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் மாற்று இடம் வழங்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு