திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர் ஸ்ரீரங்கம் கோயில் உட்பட தமிழகத்திலுள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற்றுவரும் முறைகேடுகள் குறித்து வழக்கு தொடுத்துவருபவர். அப்படி ஸ்ரீரங்கம் கோயில் தொடர்பான வழக்கு ஒன்றுக்காக, கடந்த 25-ம் தேதி காலை திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு ரங்கராஜன் நரசிம்மன் வந்தார். அப்போது அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவருக்கும், ரங்கராஜன் நரசிம்மனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் அந்த வழக்கறிஞர் ரங்கராஜன் நரசிம்மனைத் தாக்க முற்பட, ரங்கராஜன் நரசிம்மன் நீதிமன்றத்துக்குள் ஓடிச் சென்று, `நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே தாக்குதல் நடத்துகிறார்கள். பாதுகாப்பு வேண்டும்!’ என நீதிபதிகளிடம் கேட்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையே தனக்கு என்ன நடந்ததென ரங்கராஜன் நரசிம்மன் விளக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``ஸ்ரீரங்கம் கோயிலின் முன்னாள் இணை ஆணையரும், செயல் அலுவலருமான ஜெயராமன், 2020-ம் ஆண்டு என்மீது 10 லட்ச ரூபாய் கேட்டு திருச்சி நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கினுடைய அடுத்த விசாரணை 14.06.2022 அன்று திருச்சி கோர்ட்டில் வரவிருக்கிறது. அதேநாள் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சம்பந்தமான வழக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இரண்டு வழக்குகளும் இரண்டு வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் விசாரணைக்கு வருவதால், திருச்சியிலே இந்த வழக்கை ஒரு நாள் முன்னே பின்னே வைக்க முடியுமா என்ற வேண்டுகோளை வைக்க (25.04.2022) அன்று திருச்சி நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமாண்புமிகு நீதிபதியிடம் இது குறித்துச் சொன்னேன். நீதிபதியும் அதற்காக ஒரு அப்ளிகேஷன் போடச் சொன்னார். நன்றி தெரிவித்துவிட்டு நீதிமன்ற வாசலுக்கு வந்தேன். அப்போது தாடி வைத்துக்கொண்டு அட்வகேட் உடையுடன் ஒருவர் வந்து, ``நீங்க எப்படி எங்க வக்கீல் ஸ்ரீநிவாசன் அவர்களை அவன் இவன் என ஏக வசனத்தில் சொல்லி வீடியோ போடலாம்’ எனக் கேட்டதோடு, ஆந்திரமடைந்து தாக்க முற்பட்டார். `எப்படி வீடியோ எடுக்கலாம்’ என என்னுடைய போனையும் தட்டிவிட்டார். வழக்கறிஞர் உடையில் இருந்த மற்றொரு நபர் என் கழுத்திலே அடித்தார். உடனே தப்பித்து நீதிமன்றத்துக்கு உள்ளே ஓடிவிட்டேன். உள்ளே சென்று நீதிபதியிடம் ‘இரண்டு பேர் என்னை அடிக்கிறார்கள். இந்த கோர்ட் என்னைக் காக்க வேண்டும்’ என்றேன். தலைமை நீதிபதியிடம் புகார் கொடுக்கச் சொன்னார்கள்.
நீதிமன்றத்திலிருந்த பெண் வழக்கறிஞர் ஒருவர், ``அவர் வழக்கறிஞர்களைத் தகாத வார்த்தைகளில் பேசுகிறார். எப்படி அவர் வெளியில் போறாருன்னு பார்க்குறேன். இவர் மேல எஃப்.ஐ.ஆர் போட்டு ஜெயில்ல தள்ளணும்” என்றார். மேலும், ``அவனை இங்கே ஒண்ணும் பண்ண வேணாம். வெளியே போவான். அங்கே போய் மொத்துங்க” எனச் சொன்னார். நான் தவறு செய்தவனாகவே இருந்தாலும், என்மீது கைவைக்க ஒரு வழக்கறிஞருக்கு எப்படித் துணிவு வரும்... சட்டத்தை எப்படி அவர் தன் கையில் எடுக்கலாம். என்னைத் தாக்கியவர்களின் வழக்கறிஞர்கள் லைசென்ஸை நிரந்தரமாக ரத்துசெய்ய வேண்டும். நீதிமன்ற வளாகத்தில் கால்வைக்கவோ, கறுப்பு கோட்டை போடவோ தகுதியற்றவர்கள் அவர்கள்’ எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து ரங்கராஜன் நரசிம்மனிடம் பேசினோம். “நீங்க கேக்குற எல்லா கேள்விகளுக்கும் என்னோட ஃபேஸ்புக்ல வீடியோ போட்டு பதில் சொல்லியிருக்கேன். இது சம்பந்தமாக நிறைய பேர் கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. எல்லாத்துக்கும் அந்த வீடியோல விளக்கம் இருக்கு” என முடித்துக்கொண்டார்.
இதற்கிடையே வழக்கறிஞர் நவமணிவேல் என்பவர், ``கடந்த 11.04.2022 அன்று நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையைத் தொடர்ந்து அன்று இரவு ரங்கராஜன் நரசிம்மன், எனது மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநிவாசன் மற்றும் வழக்கறிஞர் சமூகத்தை தரக்குறைவாக ஒருமையில் பேசி மிகவும் மோசமான சைகை செய்து கேலி செய்தும் ஒரு வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் பதிவுசெய்தார். இந்நிலையில் 25.04.2022 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றத்துக்கு வந்த ரங்கராஜன் நரசிம்மன் என்னை மிரட்டி அவமரியாதை செய்து, என்னைப் பணி செய்யவிடாமல் தடுத்து, என்னுடைய வழக்கறிஞர் சமூகத்தையும் ஒருமையில் பேசியிருக்கிறார். எனவே அவர்மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என திருச்சி மாவட்ட அமர்வு நீதிமன்ற காவல் நிலைய ஆய்வாளருக்கும், திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கத்துக்கும் புகார் அனுப்பியிருக்கிறார்.