Published:Updated:

தொழில் மேலாண்துறையில் வெற்றிகண்ட ஆட்டோ அண்ணாதுரை | இவர்கள் | பகுதி - 21

ஆட்டோ அண்ணாதுரை | இவர்கள்

"ஐயா இன்று நான் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறேன். ஒருவேளை இருபது வருடங்கள் கழித்து நீங்கள் கூறுவதுபோல் நான் ரிசர்வ் வங்கியின் ஆளுநரானால் அப்போது அத்துறையில் எனது கற்றலும் தகுதியும் நிச்சயம் உயர்ந்திருக்கும்.” - அண்ணாதுரை.

தொழில் மேலாண்துறையில் வெற்றிகண்ட ஆட்டோ அண்ணாதுரை | இவர்கள் | பகுதி - 21

"ஐயா இன்று நான் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறேன். ஒருவேளை இருபது வருடங்கள் கழித்து நீங்கள் கூறுவதுபோல் நான் ரிசர்வ் வங்கியின் ஆளுநரானால் அப்போது அத்துறையில் எனது கற்றலும் தகுதியும் நிச்சயம் உயர்ந்திருக்கும்.” - அண்ணாதுரை.

Published:Updated:
ஆட்டோ அண்ணாதுரை | இவர்கள்
இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! - ஆசிரியர்.
"உங்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தை ஏற்பதற்கு ஒருபோதும் தயங்காதீர்கள். நீங்கள் அந்த அங்கீகாரத்துக்குத் தகுதியானவர் என்பதால்தான், அது உங்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை உணருங்கள்."

தொழிலதிபர்களும், வணிக விற்பன்னர்களும், வணிக மேலாண்மை பயிலும் மாணவர்களும் கூடியிருக்கும் மாபெரும் கருத்தரங்கு கூட்டத்தில் உரையாற்றுகிறார் திரு.அண்ணாதுரை. அவரிடம் கேட்கப்படும் வணிக மேலாண்மைக் கேள்விகளுக்கு, அநாயாசமான துணிச்சலோடு பதிலளிக்கிறார். இலக்கணங்கள் பின்பற்றாத ஆங்கிலத்தில் தயக்கமின்றி உரையாடுகிறார். தன்னிலை விளக்கமளிக்கும்போது சரளமாகத் தமிழில் பேசுகிறார். அவரின் உரையை மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளர்கள் அவரருகே நின்றிருக்கிறார்கள். அண்ணாதுரை உரையாற்றி முடித்ததும், அரங்கமே எழுந்து நின்று கரவொலி எழுப்புகிறது. அப்போதும் தேவைக்கு அதிகமாகப் பணிந்துவிடாமல் சிறு புன்முறுவலுடன் நன்றி தெரிவித்துவிட்டு, "என்னிடம் உங்களுக்குக் கேள்வி ஏதேனுமிருக்கிறதா, தயங்காமல் கேளுங்கள்" என்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அண்ணாதுரை
அண்ணாதுரை

'ஆட்டோ அண்ணாதுரை' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு.அண்ணாதுரை சென்னை மட்டுமல்லாமல் உலகமெங்கும் புகழ்பெற்றிருக்கும் ஒருவர்.

'செய்யும் தொழிலே தெய்வம்' எனும் தாரக மந்திரமே தனது வெற்றிக்குக் காரணம் என்கிறார் அண்ணாதுரை.

ஆட்டோ ஓட்டுவதை விரும்பித் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும், அதுதான் தனது தொழில் என்று முடிவான பிறகு அத்தொழிலின் மீது அளவற்ற பற்றும் மதிப்பும் கொண்டு பணியாற்றத் தொடங்கினார்.

தன்னுடைய ஆட்டோவில் இலவச வை-ஃபை, நாளிதழ்கள், வார இதழ்கள், டி.வி., எனப் பயணிகளைக் கவர பல வசதிகளை வைத்திருக்கிறார். பணம் செலுத்த முடியாதவர்களுக்கு ஸ்வைப்பிங் மெஷின். அன்னையர் தினம், குழந்தைகள் தினம் ஆகிய தினங்களின்போது தள்ளுபடி கட்டணத்தில் சவாரி என ஆச்சர்யங்களைச் சுமந்துகொண்டு ஐந்தாண்டுகளுக்கும் மேல் பயணிக்கிறது அண்ணாதுரையின் ஆட்டோ. ஒருமுறை அண்ணாதுரை ஆட்டோவில் பயணம் செய்தவர்கள், நிச்சயம் அடுத்த முறை அவரது ஆட்டோவுக்காகக் காத்திருந்து பயணம் செய்ய வேண்டும் என நினைக்கும் அளவுக்கு, ஒரே சவாரியில் வாடிக்கையாளர்களின் மனங்களைக் கவர்ந்துவிடுவதே அண்ணாதுரையின் சிறப்பு.

அண்ணாதுரை
அண்ணாதுரை

வழக்கமாக 'கர்ப்பிணிகளுக்கு இலவசம்' என்று எழுதப்பட்டிருக்கும் ஆட்டோக்களைப் பார்த்திருப்போம். ஆனால் அண்ணாதுரையின் ஆட்டோவில் 'ஆசிரியர்களுக்கு இலவசம்' என்று எழுதப்பட்டிருக்கிறது. அது குறித்து அவரிடம் வினவியபோது, "உலகின் மாமேதைகள் என்றறியப்படுவோர் அனைவரும் ஏதோ ஒரு நல்லாசிரியரின் வழிகாட்டுதலால் முன்னேறியவர்களாகவே இருப்பர். அப்படிப்பட்ட ஆசிரியர்களை கெளரவிக்கும்விதமாக எனது ஆட்டோவில் பயணிக்கும் ஆசிரியர்களிடம் நான் கட்டணம் வசூலிப்பதில்லை" என்று நன்றியுணர்வோடு கூறுகிறார்.

அண்ணாதுரை, பேசும்போது இடையிடையே 'அதிதி தேவோ பவ' என்று அடிக்கடி கூறுகிறார். அதாவது வாடிக்கையாளர்/விருந்தினர் தெய்வம் போன்றவர்கள். அவர்களை மதிப்புடனும், அவர்கள் மனம் குளிரும்படியும் நடந்துகொண்டால் வாடிக்கையாளர்கள் நம் சேவையைப் பெறவேண்டி காத்திருப்பர் என்பதை ஆணித்தரமாக நம்புவதாக அண்ணாதுரை கூறுகிறார். அயல்நாட்டிலிருந்து இந்தியா வருபவர்கள் முன்கூட்டியே அண்ணாதுரையைத் தொடர்புகொண்டு, அவரின் ஆட்டோவில் பயணிக்க வேண்டி முன்பதிவு செய்த அனுபவங்களும் உண்டு என்பதைச் சிரித்துக்கொண்டே கூறும் அண்ணாதுரை, `தொழில் மேலாண்மையின் முக்கிய அம்சமான 'referral and repeat' முறை குறித்த தெளிவிருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளரை தக்கவைத்துக்கொள்வது எளிதான செயல்' என்கிறார். இதனால், வாடிக்கையாளரைக் கவர்வது எப்படியென இந்திய அளவில் பல மேடைகளில் பேச அண்ணாதுரைக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து,

அண்ணாதுரை உலகின் முன்னணி நிறுவனங்களான, மைக்ரோசாஃப்ட், கூகுள், ஹெச்பி என 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் கருத்தரங்கங்களில் பங்கேற்று, தனது யோசனைகளை முன்வைத்துள்ளார்.

அந்த வரிசையில், அண்ணாதுரை குறித்து, தனியார் ஊடகம் வெளியிட்ட வீடியோவை பார்த்த மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, அவரை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். அண்ணாதுரை குறித்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, `அண்ணாதுரையிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எம்.பி.ஏ மாணவர்கள் இவருடன் ஒரு நாள் செலவிட்டால் போதும், வாடிக்கையாளர்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்பதை எளிதில் கற்றுக்கொள்ளலாம். இவர் வெறும் ஆட்டோ ஓட்டுநர் மட்டுமல்ல, ஒரு வகையில் தொழில்முனைவோருக்குச் சிறந்த வழிகாட்டி’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பட்டங்கள் பல பெற்ற வல்லுநர்களும், ஆய்வுகள் பல நடத்திய விஞ்ஞானிகளும்கூட மேடையேறிப் பேசுகையில் தடுமாறுவதையும், அச்சத்தில் உதடுகள் உலர்ந்துபோவதையும் பலமுறை கண்டிருப்போம். அண்ணாதுரை அதற்கு நேர்மாறாக ஒரு தேர்ந்த மேடைப் பேச்சாளர்போல் ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்கநரின் தோரணையோடு தன்னம்பிக்கையுடன் தனது கருத்துகளை முன்வைத்த திறன் கண்டு ஆச்சர்யத்தில் மூழ்கிப்போனேன்.

`இவ்வளவு விஷயங்களை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறீர்களே... அப்படியென்றால், கட்டணமும் அதற்கேற்ப அதிகமாக வசூலிப்பீர்களோ?’ என்ற கேள்விக்கு, "நான் இலவசமாகச் செய்வதாக நினைத்து எதையும் செய்வதில்லை. நான் முதலீடு செய்கிறேன். அதற்கான பலன் கிடைத்ததும், அதைக் கொண்டு என் தொழிலின் தரத்தை உயர்த்த முற்படுகிறேன்" என்று மற்றுமொரு மேலாண்மை விதியை மேற்காள் காட்டுகிறார்.

அதிநவீன சொகுசுப் பயண வாகனமாக தனது ஆட்டோவை வடிவமைத்திருக்கும் அண்ணாதுரையிடம் சமூக அக்கறையும் மேலோங்கியிருப்பதை அவரது பேச்சிலிருந்து உணர முடிந்தது. வர்தா புயல் காலத்தில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பல ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் வீடு திரும்ப உதவிபுரிந்ததை மகிழ்வோடு நினைவுகூர்கிறார் அண்ணாதுரை. தென்னை மரங்கள் சாய்ந்து, தனது ஆட்டோ கண்ணாடி மற்றும் மேற்கூரை சேதமடைந்ததையும் பொருட்படுத்தாமல் பல பொதுமக்களை அவர்கள் வீடுவரை சென்று பாதுகாப்பாகச் சேர்த்துள்ளார். அதுமட்டுமின்றி அப்பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உணவு, மருந்து, பிற அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிப்பதிலும் உதவி புரிந்திருக்கிறார் அண்ணாதுரை.

மற்ற நேரங்களைவிடவும் பேரிடர் காலத்தின்போதுதான் தான் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்பதை நினைத்து பெருமையடைந்ததாகக் கூறுகிறார் அண்ணாதுரை.

வாடிக்கையாளருடனான தனது உறவை மேம்படுத்தும்விதத்தில் தனது ஆட்டோக்களில் பயணிப்பவர்களுக்கு சிற்சில பொது அறிவு வினாவிடை போட்டிகள் நடத்துவதோடு மட்டுமல்லாமல், அதில் வெற்றிபெறுபவர்களைக் குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும்விதத்தில் ஒரு சின்னத் தொகையைப் பரிசாகவும் தருகிறார் அண்ணாதுரை. பொதுவாக ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக நிலவும் அவப்பெயரைப் போக்கிக்கொள்ளும் சிறு முயற்சியென அதைச் சுட்டுகிறார்.

அண்ணாதுரை
அண்ணாதுரை

சென்னையின் ஆட்டோக்களில் ஒரு மாத காலத்துக்கு இலவச வைஃபை வசதி செய்து தருமாறு ஒரு தனியார் நிறுவனத்தை அணுகிய அனுபவத்தை மிக சுவாரசியமாகப் பகிர்கிறார் திரு.அண்ணாதுரை. ``எப்போதுமே நிறுவனங்களிடம் செலவுகளை முன்னிறுத்திப் பேசுவதைக் காட்டிலும், அவர்களுக்குக் கிடைக்கப்போகும் வரவைப் பற்றிப் பேசினால் அவர்களிடம் சலுகைகள் பெறுவது சுலபமாக இருக்கும்" என்கிறார். இவ்வளவு தெளிவும் அறிவும் சாத்தியப்பட்டதற்கு ஒரே காரணம், தனது அனுபவங்களும், வாடிக்கையாளர்களுமே என்று எளிமையாக பதிலளிக்கிறார் திரு.அண்ணாதுரை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் பங்கேற்று உரையாற்றிய கருத்தரங்கு ஒன்றில் இறுதியாக ஒரு வங்கி அதிகாரி அவரை நோக்கி ஒரு கேள்வி எழுப்பினார். அவரது கேள்வியில் மறைந்திருந்த diplomacy அதாவது, சாதுர்யத்தை அண்ணாதுரை கையாண்டவிதம் பிரமிப்பாக இருந்தது. "இன்றிலிருந்து சரியாக இருபது வருடங்கள் கழித்து நீங்கள் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டால் அப்போது நீங்கள் எத்தகைய திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள் அல்லது எத்தகைய வரிகள் விதிப்பீர்கள் அல்லது விலக்குவீர்கள்" என்பதுதான் அந்தக் கேள்வி.

கூட்டத்திலிருந்த யாரும் அப்படியொரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை. அரங்கம் அமைதியாகி அண்ணாதுரையின் பதிலுக்காகக் காத்திருந்தது. சற்றும் மனம் தளராத அண்ணாதுரை "ஐயா இன்று நான் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறேன். ஒருவேளை இருபது வருடங்கள் கழித்து நீங்கள் கூறுவதுபோல் நான் ரிசர்வ் வங்கியின் ஆளுநரானால் அப்போது அந்தத் துறையில் எனது கற்றலும் தகுதியும் நிச்சயம் உயர்ந்திருக்கும். அதன்படி எனது தொழிலில் அப்போதும் சிறந்து விளங்குவேன்" என்று கேள்வி வந்த திசை பார்த்து கைகளை உயர்த்திக் காட்டினார் அண்ணாதுரை. `இந்த பதில் போதுமா?’ என்பது போன்ற உடல்மொழி அது.

இவர்கள்
இவர்கள்

'ஆட்டோ அண்ணா' என்கிற வெப்சைட்டும், இரண்டு செயலிகளும் நிறுவி அதன் மூலம் வாடிக்கையாளர்கள் தன்னைத் தொடர்புகொள்ள வசதிகள் செய்திருக்கிறார் அண்ணாதுரை. ஏழுமுறை TedEx தளத்தில் உரையாற்றிய பெருமையும் இவருக்குண்டு.

வெற்றியாளர்கள் என்று அறியப்படும் எவரும் அசாதாரணச் செயல்கள் செய்பவர்கள் அல்ல, மாறாக சாதாரண செயல்களையே அவர்கள் அசாதாரண ஈடுபாட்டோடும் அர்ப்பணிப்போடும் செய்பவர்கள். அத்தகையோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பே வந்து சேரும்.

ஆட்டோ அண்ணாதுரை அவ்வழி வந்த ஒருவர்.

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism