Published:Updated:

திருச்சி: `கடனை கட்டு, இல்லன்னா..!’ - தனியார் நிதி நிறுவன அதிகாரியால் டிரைவருக்கு நடந்த துயரம்

ஆட்டோ டிரைவர்
ஆட்டோ டிரைவர்

அத்துமீறும் தனியார் நிதி நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்.

``கடனை கட்ட முடியாத நீ, தூக்கு போட்டு சாகலாம்ல'' என்று நிதி நிறுவனத்தினர் ஆட்டோ டிரைவர் மகேந்திரனை சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள். பலத்த காயம் அடைந்த டிரைவர் லால்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு திருமணமாகி மனைவி, இரு குழந்தைகள் உள்ளன. ஆட்டோ ஓட்டுநரான மகேந்திரன் குடும்ப சூழ்நிலைக்காக புள்ளம்பாடியில் உள்ள எல் அண் டி என்ற தனியார் நிதி நிறுவனத்தில் சுய உதவிக்குழு மூலம் ரூ. 28 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கிய பிறகு இரண்டு தவணை செலுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வருமானமின்றி தவித்து வருகின்றார்.

இந்நிலையில் தவணைத்தொகை செலுத்த சொல்லி நிதிநிறுவன தொடர்ந்து தொல்லை கொடுத்ததோடு கடந்த வியாழன் நிதி நிறுவன அதிகாரிகள், மது அருந்துவிட்டு கடுமையாக திட்டி, சரமாரியாக அடித்திருக்கிறார்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மகேந்திரனிடம் பேசினோம். ``நான் ஆட்டோ ஓட்டுகிறேன். ஆட்டோ ஓடினால் தான் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வயிறு நிறையும். இந்த நிலையில் குழுவுல பணம் வாங்கியிருந்து தொடர்ந்து ரெண்டு டீவ் பணம் கட்டிவிட்டேன். கொரோனா லாக்டவுன் காரணமாக ஆட்டோ ஓடாததால் என்னால் பணத்தை கட்டமுடியவில்லை. குழு அதிகாரி ஒருவர் கடந்த 2 மாதமாக அதிகமாக தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருந்தார்.

ஆட்டோ டிரைவர் மகேந்திரன்
ஆட்டோ டிரைவர் மகேந்திரன்

இந்நிலையில் கடந்த வியாழன்கிழமை இரவு எனக்கு போன் அடிச்சாரு. உன்னால தாண்டா பணம் கட்டுறவுங்களும் கட்டமாட்டேங்குறாங்க. என்று அசிங்க அசிங்கமாக திட்டினார். பதிலுக்கு நானும் பேச ‘கடனை கொடுக்க முடியாத நீ, கயிற வாங்கி தூக்கு போட்டு சாகலாம்ல’ என்று அசிங்கமாக காதில் கேட்க முடியாத வார்த்தைகளில் திட்டினார். என்னால் பொறுக்கமுடியாமல் நீ எங்க இருக்க என்று கேட்டு அவர் வீட்டுக்கு போனேன். அங்கு போனபோது என்ன அடிக்கத்தொடங்கினார். கழுத்தில் காயம்பட்டு மருத்துவமனையில் இருக்கிறேன்" என்று முடித்துக்கொண்டார்.

சமூக ஆர்வலர் அய்யாரப்பனிடம் பேசினோம், ``தவணைத் தொகைகளை கட்டச்சொல்லி நிதிநிறுவனங்கள் மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த வாரம் கூட திருச்சி மாவட்டம், குருவம்பட்டியைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம் என்பவர் திருச்சி தில்லைநகரிலுள்ள சோழமண்டலம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் விவசாயத் தேவைக்காகத் தனது டிராக்டர் ஆவணங்களை அடமானமாக வைத்து, கடன் வாங்கியிருந்தார்.

அய்யாரப்பன்
அய்யாரப்பன்

கொரோனா காலகட்டத்தில் தினமும் நேரிலும் போனிலும் அவர்களின் டார்ச்சர் தொடர்ந்துள்ளது. இந்நிலையில், ஃபைனான்ஸ் கம்பெனியிலிருந்து, ‘நீ வாங்கின லோனை முடிக்கணும்னா, நீ செத்துட்டேனு உன்னோட டெத் சர்டிஃபிக்கேட்டை கொடு. லோனை க்ளோஸ் பண்ணிக்கிடலாம்’ என்று அவரோட செல்லுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினாங்க. அந்த சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. ஊரடங்கு காலம் முடியும் வரையிலும் எந்த ஒரு நிதி நிறுவனமும் தவணைத்தொகை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவு பிறப்பித்தும், தனியார் நிதி நிறுவனங்களின் அடாவடித்தனம் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது. அத்துமீறும் தனியார் நிதி நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். இல்லையேல் தொடரும்" என்று முடித்துக்கொண்டார்.

எல்&டி அதிகாரிகள் தரப்பில் பேசினோம், ``எங்களது உயர் அதிகாரிகள் வசூல் செய்ய சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்யமுடியும்" என்று போனை துண்டித்தனர். நிறுவன அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் தரும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்கு பிறகு பதிய தயாராக இருக்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு