Published:Updated:

பிரசவத்தின்போது குழந்தையின் கால் முறிவு! - கொதிக்கும் பெற்றோர்; மருத்துவர் விளக்கம்!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழந்தையின் தந்தை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழந்தையின் தந்தை ( தே.சிலம்பரசன் )

திண்டிவனம் அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்த குழந்தைக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், மருத்துவமனை முன்பு கட்சி நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார் குழந்தையின் தந்தை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 22-ம் தேதி (வியாழன்) கந்தாடு கிராமத்தைச் சேர்ந்த சபரீஸ்வரி, பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்று நள்ளிரவு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. சபரீஸ்வரியின் கணவர் சிவா என்பவரிடம் மருத்துவர் குழந்தையைக் கொடுத்தபோது, இடது கால் உடைந்து கட்டு போடப்பட்டிருந்தது. இது குறித்து மருத்துவரிடம் சிவா கேள்வி எழுப்பியபோது, ``இது சாதாரணமான விஷயம்தான், ஓரிரு வாரங்களில் சரியாகிவிடும்" என மருத்துவர் கூறியதாகச் சொல்லப்படுகிறது. குழந்தைக்கு முறையான சிகிச்சை வழங்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட மருத்துவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமை மருத்துவ அலுவலரிடம் இன்று (28.07.2021) புகார் கொடுக்க வந்த சிவா, வி.சி.க கட்சியினருடன் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

காலில் கட்டுடன் குழந்தை
காலில் கட்டுடன் குழந்தை

இது குறித்து சிவாவிடம் பேசினோம். ``என் மனைவியின் பெயர் சபரீஸ்வரி. நாங்கள் கந்தாடு எனும் பகுதியைச் சேர்ந்தவர்கள். எங்களுடைய முதல் குழந்தை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவமாகத்தான் பிறந்தது. இரண்டாவது பிரசவத்துக்காக கடந்த வியாழக்கிழமை (22.07.2021) அன்று இந்த (திண்டிவனம் அரசு மருத்துவமனை) மருத்துவமனையில் சுமார் 11:30 மணியளவில் சேர்த்தேன். அன்று நள்ளிரவில் மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர் சிந்து என்பவர் சுகப்பிரசவத்துக்குக் காத்திருக்க முடியாது என்று கூறிவிட்டு, எனது மாமியார் லட்சுமி என்பவரிடம் கட்டாயமாக ஒப்புதல் பெற்று அறுவை சிகிச்சை செய்துவிட்டார். என் குழந்தைக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போட்டபடி என்னிடம் கொடுத்தார்கள். நான் பதறிப்போய் அந்த மருத்துவரிடம் கேட்டேன். 'அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்த்த பிறகும் ஏன் இப்படி நடந்தது?' என்று விசாரித்தேன்.

அதற்கு மருத்துவர் சிந்து, "தவறுதலாக இப்படி நடந்துவிட்டது. இதெல்லாம் சகஜம்தான்" என்று மிகச் சாதாரணமாக என்னிடம் பதில் கூறினார். அதுமட்டுமன்றி, என்னுடைய தம்பி சீனிவாசன் என்பவர்தான் எலும்பு முறிவு மருத்துவராக இருக்கிறார். அவர்தான் ஒரு வாரத்தில் கால் சரியாகிவிடும் என்று கூறினார் . எனவே, கவனக்குறைவாகச் செயல்பட்டு என் பச்சிளம் குழந்தையின் காலில் எலும்புமுறிவு ஏற்படுத்திய அந்த மருத்துவர்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவர் எனக்குப் பெண் குழந்தை பிறந்ததால் 700 ரூபாய் கேட்டு வாங்கினார். சரியாக குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கவில்லை. கட்டுப்போடும் பேண்டைக்கூட நான்தான் வாங்கி வந்து கொடுத்தேன். இன்று டிஸ்சார்ஜ் பண்ணுவதாகக் கூறினார்கள். எலும்பு முறிவு ஏற்பட்ட பச்சிளம் குழந்தையை நான் எப்படி வீட்டில் பார்த்துக்கொள்ள முடியும்! அதனால், இன்றுதான் முதன்முறையாகப் புகார் கொடுக்க வந்தோம்" என்றார்.

மருத்துவருடன் வாக்குவாதம்
மருத்துவருடன் வாக்குவாதம்

இது தொடர்பாக மருத்துவர் சிந்துவிடம் பேசினோம். ``சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று நாங்களும்தான் ஆசைப்பட்டோம். ஆனால், குழந்தை தலை திரும்பியிருந்ததால் மாட்டிக்கொண்டது. மீண்டும் திரும்பும் என எதிர்பார்த்தோம். ஆனால் திரும்பவில்லை. அம்மா, குழந்தையைக் காப்பதற்கு அறுவை சிகிச்சையைத் தவிர மாற்று வழியில்லை. அறுவை சிகிச்சையின்போது குழந்தை திரும்பியிருந்ததால் குழந்தையின் காலை பிடித்து இருக்கும் சூழல் வந்தது. ஆக்சிஜன் முதல் எல்லாமே நஞ்சுக்கொடி வழியாகத்தான் குழந்தைக்குப் போகும். நஞ்சுக்கொடி அப்போது பிரிந்துவிட்டது. அதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறக்கும் சூழல் இருந்ததால், குழந்தையைக் காப்பாற்றுவதற்காகத்தான் வேகமாக வெளியில் எடுத்தேன். அப்போதுதான் இந்த மாதிரி தவறுதல் ஆகிவிட்டது. ஆனால் சற்று காலதாமதம் செய்திருந்தால், குழந்தைக்கு ஆக்சிஜன் அளவு குறைந்து, குழந்தையின் ரத்த ஓட்டம் குறைந்து, மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மன வளர்ச்சி பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். எனவே இரண்டு உயிரையும் காப்பாற்றும் முயற்சியைத்தான் செய்தேன்.

முதல் பிரசவம் சிசேரியன்; அடுத்தது சுகப்பிரசவம் ஆகுமா? - விளக்கும் மருத்துவர்!

இரவு நேரங்களில் இங்கே எக்ஸ் ரே கிடையாது. ஆனால் அன்று இரவு எக்ஸ் ரே எடுத்து, மூன்று வாரங்களுக்குள் கால் சரியாகிவிடும் என அவர்களுக்கு எடுத்துக் கூறினோம். ஒவ்வொரு சிகிச்சையின்போதும் மருத்துவர்கள் உயிரைக் கொடுத்துதான் போராடுகிறார்கள். எதையும் வேண்டுமென்று நாங்கள் செய்யவில்லை. சுகப்பிரசவத்துக்கான வாய்ப்பு இல்லாதபோது, இரண்டு உயிர்களையும் காப்பாற்றும் நோக்கத்திலேயே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு