கோவை மாநகரத்தில் பெரும்பாலான நெடுஞ்சாலைகளிலும், முக்கியமான சாலைகளிலும் தரமற்ற பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட பார்க்கிங் டிவைடர்களை அதிகாரிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைத்திருந்தனர். இந்த பார்க்கிங் டிவைடர்களால் கோவை சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி நாம் விகடன் வலைதளத்தில் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் எதிரொலியாக தற்போது கோவை மாநகராட்சியினர் கிட்டத்தட்ட அனைத்து சாலைகளிலும் அமைக்கப்பட்டிருந்த தரமற்ற பார்க்கிங் டிவைடர்களை அகற்றி நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இதனால் சாலைகளில் விபத்து அபாயம் குறைந்திருக்கிறது. மேலும், தேவையற்ற பார்க்கிங் டிவைடர்கள் அகற்றப்பட்டதால், சாலை சற்று விசாலமாகியிருப்பதாக பொதுமக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிடுகின்றனர்.

பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தரமற்ற பார்க்கிங் டிவைடர்களால் பாதசாரிகள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவந்தனர். மேலும், இந்த டிவைடர்கள் அமைக்கப்பட்ட சில நாள்களிலேயே வாகனங்கள் மோதி நொறுங்கி, டிவைடர்களின் கூர்மையான முனைகள் சாலைகளில் நடந்து செல்லும் பாதசாரிகளின் கால்களையும் பதம்பார்த்துவந்தன.
இந்த நிலையில், நாம் இது தொடர்பாக செய்தி பதிவிட்டதை அடுத்து, தற்போது அதிகாரிகள் அவற்றை அகற்றி நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றனர். கோவையின் சாலைகளில் மக்களை அச்சுறுத்திக்கொண்டிருந்த டிவைடர்கள் அகற்றப்பட்டிருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.
