Published:Updated:

``அமைச்சரோட ஆளையே ஓவர்டேக் பண்ணுவியான்னு அடிச்சாங்க!'' - கதறும் அமரர் ஊர்தி ஓட்டுநர்

உதயகுமார்
உதயகுமார்

``வண்டி சடலத்தோடு அரை மணி நேரமா நிக்குது. ஆனாலும், அவங்க சாவியைத் தரலை. கொஞ்சம்கூட இரக்கமில்லாம அடாவடித்தனமா நடந்துகிட்டாங்க."

அளவுக்கு மீறிய பணமும் அதிகார வர்க்கத்தோடு தொடர்பும் இருந்துவிட்டால்போதும், அவர்களுக்கு எளிய மக்கள் அனைவரும் அடிமையாக இருக்க வேண்டும் என்ற மனோபாவம் தலைவிரித்தாடும் என்பதற்கு உதாரணமாக சமீபத்தில் சென்னையில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. தன்னுடைய காரை ஓவர்டேக் செய்துவிட்டார் என்பதற்காக அமரர் ஊர்தி டிரைவர் ஒருவரை உதைத்துக் கீழே தள்ளியிருக்கிறார் அமைச்சருக்கு நெருக்கமான ஒருவர். `அவர்மீது நடவடிக்கை எடுக்காமல் அவருடன் காரில் பயணித்த அவரின் உதவியாளரை கைது செய்து இந்த வழக்கை முடிக்கப் பார்க்கின்றனர்' என்று புகார் எழுந்துள்ளது.

அமரர் ஊர்திகள்
அமரர் ஊர்திகள்

என்ன நடந்தது? பாதிக்கப்பட்ட அமரர் ஊர்தி ஓட்டுநரான உதயகுமாரிடம் பேசினோம். ``கடந்த 15-ம் தேதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து கார்த்திகேயன் என்பவருடைய சடலத்தை அவரது சொந்த ஊரான செஞ்சிக்கு கொண்டு போனோம். வண்டியில் கார்த்திகேயனின் சொந்தக்காரங்க ரெண்டு பேர் இருந்தாங்க. மாலை 4 மணி இருக்கும். பெருங்களத்தூர்கிட்ட போய்கிட்டிருந்தோம். எனக்கு முன்னாடி போய்கிட்டிருந்த ஒரு இன்னோவா காரை முறையா கையைப் போட்டு ஓவர் டேக் செஞ்சேன். கொஞ்ச நேரத்துக்குள்ள அந்தக் கார் அசுர வேகத்துல எங்க வண்டியை ஒட்டி வந்தது. ரன்னிங்கிலேயே காரிலிருந்தவர், `நான் யார் தெரியுமா... மினிஸ்டரோட ஆள்... என்னோட வண்டியவே ஓவர் டேக் பண்ணுவியா?'னு கடுமையான வார்த்தைகளால் திட்டியபடி காரை குறுக்கே கொண்டுவந்து எங்க வண்டியை மறிச்சார்.

இறந்த உடலை கொண்டுபோறப்போ சண்டை போட்டா நல்லா இருக்காதுங்கிறதால அவங்க கேவலமா திட்டினதைக்கூட நான் பெருசா எடுத்துக்காம...`வண்டியில சடலம் இருக்கு... இப்படி வழிமறிச்சு திட்டுறீங்களே'ன்னு சமாதானப்படுத்தினேன். ஆனா, அவங்க அதையெல்லாம் காதுலயே வாங்கல. டிரைவர் உட்பட காரிலிருந்த மூணு பேரும் இறங்கி வந்தாங்க... அதுல ஒருத்தர் என் வண்டியில் இருந்து சாவியை வலுக்கட்டாயமா பிடுங்கினார். தடுத்த என்னை வெளியே இழுத்து... கீழே தள்ளி வயித்துலேயே எட்டி உதைச்சாங்க. நான் பின்பக்கமாக விழுந்துட்டேன். முதுகுப் பகுதியின் பின்பக்கம் பயங்கர அடி. என்னால எழுந்திருக்கவே முடியல. வண்டி சடலத்தோடு அரை மணி நேரமா நிக்குது. ஆனாலும், அவங்க சாவியைத் தரலை. கொஞ்சம்கூட இரக்கமில்லாம அடாவடித்தனமா நடந்துகிட்டாங்க.

புகாருடன் உதயகுமார்
புகாருடன் உதயகுமார்

டிராஃபிக் அதிமானதால போக்குவரத்து போலீஸார் வந்து வண்டியை எடுக்கச் சொன்னாங்க. அவங்ககிட்ட நடந்ததைச் சொன்னேன். என்னைத் தாக்கினவங்கள எதுவும் சொல்லாம அவங்ககிட்டயிருந்து சாவியை மட்டும் வாங்கினாங்க. வலுக்கட்டாயமாகப் பிடுங்கினதால சாவி நெளிஞ்சிருந்தது அதைக் கல்லால் சரிசெய்து என்கிட்ட கொடுத்து வண்டியை எடுத்துட்டு பீர்க்கன்கரணை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுங்கன்னு அனுப்பினாங்க. அவங்களும் வருவாங்களான்னு கேட்டதுக்கு வருவாங்கன்னு சொல்லி என்னை அனுப்பினாங்க.

உடனே வேறொரு வண்டியை வரவெச்சு சடலத்தை அதுல ஏத்தி அனுப்பிட்டு, நான் பீர்க்கன்கரணை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனேன். அங்க புகார் வாங்கறதுக்கு ரொம்ப நேரம் பண்ணாங்க. என்னைத் தாக்கினவங்களும் அங்க வரலை. எனக்கு மயக்கம் வந்துச்சு. அதனால ஸ்டேஷனுக்கு பக்கத்துல இருக்கிற ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் போனேன்.

அங்கே என்னை செக் பண்ணின டாக்டர், `நீங்க ரொம்ப வீக்காக இருக்கீங்க. நீங்க உடனே குரோம்பேட்டை ஜி.ஹெச் போங்கன்னு எழுதிக்கொடுத்தாங்க. நான் உடனே அங்கிருந்து குரோம்பேட்டை ஜி.ஹெச்'சுக்குப் போனேன். அட்மிஷன் போட்டு சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்ததுல முதுகுல ஃப்ராக்சர் ஆகியிருக்குன்னு தெரிஞ்சது. நாலுநாள் ட்ரீட்மென்ட்டுக்குப் பிறகு, இப்பதான் டிஸ்சார்ஜ் ஆகியிருக்கேன்.

இதுக்கிடையில பீர்க்கன்கரணை போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்துட்டோம். அஞ்சு நாளைக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. தேடிகிட்டிருக்கோம்னே சொல்லி இழுத்தடிச்சாங்க. சம்பவத்தப்போ என்னை தாக்கினவர்கிட்டேயிருந்து விசிட்டிங் கார்டு கீழ விழுந்துச்சு. அதுல மாதேஸ்வரன்ங்கிற பேர் இருந்துச்சு. அதையும் கார் நம்பரையும் கொடுத்தோம். ஆனா, `அவங்களை எங்களால ரீச் பண்ண முடியலை'ன்னு சொல்லியே போலீஸ்காரங்க இழுத்தடிச்சாங்க. ``குற்றவாளிகளுக்கு ஆதரவா ஆளுங்கட்சியின் அரசியல் செல்வாக்கு செயல்படுறதா தெரியுது. காவல்துறையின் அலட்சியம் தொடரும்னா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேரடி போராட்டங்களில் ஈடுபடும்னு எச்சரிக்கிறோம்"னு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டார். அது செய்திகள்ல வந்த பிறகுதான், கண்ணன்ங்கிறவரை அரெஸ்ட் பண்ணியிருக்காங்க. மெயினான ஆளான மாதேஸ்வரன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கலை" என்றார்.

உதயகுமார்
உதயகுமார்

இதுதொடர்பாக பீர்க்கன்கரணை இன்ஸ்பெக்டர் பொன்ராஜிடம் பேசினோம், ``ஒருவரை கைது செய்துவிட்டோம். மற்ற இருவரை தேடிக்கொண்டிருக்கிறோம். விரைவில் பிடித்துவிடுவோம்" என்றார். ``முக்கிய குற்றவாளினு சொல்லப்படற மாதேஸ்வரனை நீங்க இன்னும் கைது செய்யாததற்கு காரணம், அவர் அமைச்சருக்கு நெருக்கமானவர் என்பதுதான்னு சொல்லப்படுதே..." என அடுத்த கேள்வியைக் கேட்க, ``இதில் அரசியல் பின்புலம் எதுவுமில்லை. வண்டி நம்பரை ட்ரேஸ் செய்து பார்த்ததில் நுங்கம்பாக்கம் முகவரி காட்டுது அங்கே போய் பார்த்தால் அது ஓர் அலுவலக முகவரியாக இருந்தது. அவங்க வீட்டைக் கண்டுபிடிக்க முடியலை. விரைவில் பிடிச்சிடுவோம்" என்று சட்டென இணைப்பைத் துண்டித்தார்.

உதயகுமாரை தாக்கியவர்கள் தாங்கள் அமைச்சரின் ஆட்கள் என அழுத்தமாகச் சொல்லியிருக்கின்றனர். ஆனால், காவல்துறையோ இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறது. எனவே, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அந்த முக்கிய நபரைக் கைது செய்தால்தான் இதில் அரசியல் பின்புலம் ஏதும் இருக்கிறதா, அமைச்சரின் செல்வாக்கு இருக்கிறதா என்பதெல்லாம் வெளிச்சத்துக்கு வரும்.

அடுத்த கட்டுரைக்கு