Published:Updated:

எட்டயபுரம்: `திறக்காத ஆட்டுச்சந்தை; பக்ரீத் விற்பனையும் இல்லை!’ - சோகத்தில் விவசாயிகள்

ஆடுகளுடன் வியாபாரிகள்
ஆடுகளுடன் வியாபாரிகள்

ரம்ஜான், பக்ரீத் பண்டிகை காலத்தில் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் கோடிகளில் விற்பனையாகி வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் இந்தாண்டு ஆட்டுச்சந்தை மூடப்பட்டு களையிழந்து காணப்படுகிறது. ஆடு வியாபாரிகளும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

தென் மாவட்டங்களில் சிறப்பு பெற்ற ஆட்டுச்சந்தைகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் ஆட்டுச்சந்தையும் ஒன்று. இங்கு விரும்பும் இன ஆடுகள் திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமன்றி விற்பனையிலும் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் தூத்துக்குடி மட்டுமல்லாமல் நெல்லை, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆடு வளர்ப்போரும் வியாபாரிகளும் இச்சந்தைக்கு வருகிறார்கள். இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை சந்தை நடைபெறும்.

கடந்த ஆண்டு விற்பனை
கடந்த ஆண்டு விற்பனை

சந்தைநாளில் சராசரியாக 1,500 முதல் 2,000 ஆடுகள் வரை விற்பனையாகிறது. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைக் காலங்களில் வழக்கத்தை விட ஆடுகள் விற்பனை கூடுதலாக இருக்கும். இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா ஊடரங்கினால் ஆட்டுச்சந்தைகள் கடந்த 4 மாதமாக இயங்கவில்லை. இந்நிலையில், பக்ரீத் பண்டிகைக்கும் ஆடுகளை விற்பனை செய்ய முடியாமலும், ஆடுகளை வாங்கிச் செல்ல முடியாமலும் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் மூடிக்கிடக்கும் ஆடு, மாடு சந்தைகளை திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என ஆடு வளர்ப்போர் சங்கத்தினர், விவசாயிகள், வியாபாரிகள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆடுகளுடன் வந்து மனு அளித்தனர். இதுகுறித்து ஆடுவளர்போர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கருப்பசாமியிடம் பேசினோம், “தற்போதைய கொரோனா ஊரடங்கினால் ஆடு, மாடு சந்தைகள் இயங்க அரசு தடை விதித்துள்ளது. ஊரடங்கில் மூன்றாம் கட்டமாக அளிக்கப்பட்ட தளர்வுகளில் ஆடு, மாடு சந்தைகள் இயங்க அரசு அனுமதி அளிக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது.

மனு அளித்த வியாபாரிகள்
மனு அளித்த வியாபாரிகள்

தென் மாவட்டங்களிலேயே எட்டயபுரம் ஆட்டுச்சந்தைதான் புகழ் பெற்றது. வெள்ளாட்டை விட செம்மறி ஆடுகள்தான் இங்கு அதிகளவில் விற்பனையாகும். பக்ரீத் பண்டிகையின்போது குர்பானிக்காக அதிக எண்ணிக்கையில் ஆடுகள் விற்பனையாகும். கடந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையின்போது கன்னி, கொடி, வெம்பூர் பொட்டுப்போர், ராமநாதபுரம் வெள்ளை, செவ்வாடு, அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு, கீழக்கரிசல், மேலக்கரிசல், பட்டிணம், கச்சக்கட்டி, மேச்சேரி, சேலம் கருப்பு, கோயமுத்தூர் குரும்பை என பல இனங்களைச் சேர்ந்த 10,000 ஆடுகள் வரை விற்பனையானது.

மொத்த வருமானம் மட்டும் 5 கோடி ரூபாய். இந்த ஆண்டும் ஆடு விற்பனையைக் கருத்தில் கொண்டே கூடுதல் எண்ணிக்கையில் ஆட்டுக்குட்டிகளை வாங்கி கடந்த 6 மாதமாக பல விவசாயிகள் வளர்த்து வந்தனர். தூத்துக்குடி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதிலும் பல லட்சம் ஆடுகள் விற்பனைக்குத் தயாராக இருந்தன. கொரோனா ஊரடங்கில் போதிய வருமானமின்றி பாதிக்கப்பட்டு வந்த நிலையில், ஆடு விற்பனையால் ஓரளவு வருமானம் பெறலாம் என நினைத்தோம்.

கடந்த ஆண்டு விற்பனை
கடந்த ஆண்டு விற்பனை

ஆனால், ஆட்டுச்சந்தைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆடுகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். ஆடுகள் பண்ணைகளிலும் பட்டிகளிலும், தொழுவங்களிலும் தேக்கம் அடைந்துள்ளன. ஆடு, மாடு சந்தைகளில் வாங்குவோர் விற்பவர் இடையே சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். எனவே, அரசு ஆடு, மாடு சந்தைகள் இயங்கிட அனுமதி அளிக்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு