Published:Updated:

'முதல்வரை டேக் செய்து ட்விட்டர் பதிவு; 4 மணி நேரத்தில் மீண்டும் கிடைத்த பணம்' - நடந்தது என்ன?!

ட்விட்டர் பதிவால் திரும்பக் கிடைத்த பணம்
ட்விட்டர் பதிவால் திரும்பக் கிடைத்த பணம்

மகனுக்கு மருந்து வாங்குவதற்காக வைத்திருந்த 500 ரூபாய் ஒற்றைத்தாளை போலீஸாரிடம் அளித்துவிட்டு பாலாஜி வீடு திரும்பியிருக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துவருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை என பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் உச்சம் தொட்டுவருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும், மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளைப் பின்பற்றாமல் அலட்சியமாகச் செயல்பட்டுவருவதால், தமிழகத்தில் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன. மேலும், தமிழக காவல்துறையினரும் அலட்சியமாக ஊரடங்கு நேரத்தில் வெளியில் சுற்றுபவர்கள் மீதான அணுகுமுறையையும் நேற்று முதல் கடுமையாக்கியிருக்கின்றனர். போலீஸார் அத்தியாவசிய தேவையைத் தவிர்த்து வெளியில் சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து வாகனங்களைப் பறிமுதல் செய்வது, அபராதம் வசூலிப்பது என சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

லாக்டௌன்
லாக்டௌன்

அந்தவகையில், திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் தன் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு மருந்து, மாத்திரைகள் வாங்குவதற்காக நேற்று தனது வீட்டிலிருந்து வெளியேறி மருந்தகத்துக்குச் சென்றிருக்கிறார். அப்போது திருவள்ளூர்- காக்களூர் சாலையில் திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய போலீஸார் கண்காணிப்புப் பணியில் குவிக்கப்பட்டிருந்தனர். மருந்து வாங்குவதற்காக மருந்தகம் சென்றுகொண்டிருந்த பாலாஜியைத் தடுத்து நிறுத்தி போலீஸார் விசாரித்திருக்கின்றனர்.

பாலாஜி தன் மகன் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும், மருந்துகள் தீர்ந்துவிட்டதால் மருந்தகத்துக்குச் சென்றுகொண்டிருப்பதாகவும் விளக்கமளித்திருக்கிறார். ஆனால், பாலாஜியின் வாதத்தை ஏற்க மறுத்த போலீஸார் அபராதம் செலுத்திவிட்டுச் செல்லுமாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மகனுக்கு மருந்து வாங்குவதற்கு மட்டும்தான் தன்னிடம் பணம் உள்ளதென்றும் பாலாஜி போலீஸாரிடம் கூறியிருக்கிறார். ஆனால் போலீஸார் வெளியில் வந்தால் அபராதம் செலுத்தித்தான் ஆக வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டு ரூ.500-க்கான அபராத ரசீதை பாலாஜி கையில் கொடுத்திருக்கின்றனர்.

எவ்வளவு கூறியும் தன் தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாததால் மகனுக்கு மருந்து வாங்குவதற்காக வைத்திருந்த 500 ரூபாய் ஒற்றைத்தாளை போலீஸாரிடம் அளித்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். முழு ஊரடங்கு அமலிலிருந்தாலும் அவசர தேவைகளுக்காக மருந்து வாங்குவதற்குக் கூடவா போலீஸார் இவ்வளவு கடுமையாக நடந்துகொள்வார்கள் என்று மனமுடைந்துபோன பாலாஜி வேதனையுடன் தனக்குத் தெரிந்த பத்திரிகையாளர் ஒருவரிடம் கூறியிருக்கிறார்.

 'முதல்வரை டேக் செய்து ட்விட்டர் பதிவு; 4 மணி நேரத்தில் மீண்டும் கிடைத்த பணம்' - நடந்தது என்ன?!

இந்தநிலையில், பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை, "எந்த ஆட்சி வந்தாலும் போலீஸ் குணம் மாறாது. வேலை வெட்டி இல்லாத இந்த நாளுல குடும்பம் நடத்துவது எவ்ளோ கஷ்டம். மனநலம் பாதிக்கப்பட்ட பையனுக்கு மருந்து வாங்க 500 ரூபாயோட அலைஞ்சிகிட்டு இருந்தா இவங்க அதையும் பிடிங்கிட்டுஅனுப்புறாங்க. பையன் சாகட்டும் என்று விட்டுவிட்டேன்" என்று மனவேதனையுடன் அந்த பத்திரிகையாளரை டேக் செய்து பதிவிட்டிருந்தார். பாலாஜியின் பதிவு பத்திரிகையாளர்கள் சிலரின் கவனத்துக்குச் செல்லவே, அவர்கள் அதைத் தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளை டேக் செய்து ரீ-ட்வீட் செய்தனர். பத்திரிகையாளர்களின் பதிவுகள் மூலமாக காவல்துறையினர் கவனத்துக்குச் சென்றுள்ளது. அதையடுத்து, பாலாஜி ட்விட்டரில் கருத்து பதிவிட்ட 4 மணி நேரத்தில் போலீஸார் அவரிடம் அபராதமாக வசூலித்த 500 ரூபாயை வீடு தேடி வந்து திரும்ப அளித்துள்ளனர்.

காவல்துறை உயரதிகாரிகள் திருவள்ளூர் தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்தைத் தொடர்புகொண்டு உடனடியாக பாலாஜியிடம் அபராத தொகையைத் திரும்ப ஒப்படைக்குமாறு வலியுறுத்தியிருக்கின்றனர். உடனடியாக காக்களூரிலுள்ள பாலாஜி வீட்டுக்கு விரைந்த ஆய்வாளர் ரஜினிகாந்த் பாலாஜியை நேரில் சந்தித்து காவலர்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து, அவரிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகை 500 ரூபாயையும் திருப்பி ஒப்படைத்தார்.

 'முதல்வரை டேக் செய்து ட்விட்டர் பதிவு; 4 மணி நேரத்தில் மீண்டும் கிடைத்த பணம்' - நடந்தது என்ன?!

போலீஸார் அபராத தொகையைத் திருப்பி ஒப்படைத்ததை அடுத்து பாலாஜி மீண்டும் ட்விட்டரில் தனக்கு உதவிய பத்திரிகையாளரை டேக் செய்து தமிழக காவல்துறையினருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

அடித்தட்டு மக்களின் அபயக்குரல்கள் மேல்மட்டத்தில் இருக்கும் அரசு அதிகாரிகளால் சமீபமாக உற்று கவனிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவது ஜனநாயகத்தின் மீதான சாமான்ய மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.

அடுத்த கட்டுரைக்கு