Published:Updated:

`உழவுப் பணியில் இருந்த டிராக்டரைப் பறிமுதல் செய்த வங்கி ஊழியர்கள்!’ - தற்கொலைக்கு முயன்ற விவசாயி

எம்.திலீபன்

தவணைத்தொகையைக் கட்டாததால். உழவுப் பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதனால் மனமுடைந்த தேவேந்திரன் வயலில் வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

விவசாயி தேவேந்திரன்
விவசாயி தேவேந்திரன்

இரண்டு மாதமாகத் தவணைத் தொகையைக் கட்டாததால் வங்கி அதிகாரிகள் டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். மனமுடைந்த விவசாயி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷம் குடித்த விவசாயி
விஷம் குடித்த விவசாயி

அரியலூர் மாவட்டம் கீழ வண்ணம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தேவேந்திரன். இவர் விவசாய வேலைக்காக அரியலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ) டிராக்டர் வாங்குவதற்காகக் கடந்த 2017-ம் ஆண்டு 9 லட்சத்து 10,000 கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில், ஒரு வருடத்துக்கான தவணைத் தொகையான 2 லட்சத்தைக் கட்டவில்லையென்றால் டிராக்டர் பறிமுதல் செய்யப்படும் எனக் கடந்த 30-ம் தேதி வங்கியின் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளனர். 2 நாள்கள் விடுமுறை என்பதால், கடிதம் நேற்றுதான் விவசாயி கையில் கிடைத்துள்ளது.

கடிதத்தின்படி தவணைத் தொகையைக் கட்ட 6-ம் தேதி வரை கால அவகாசம் இருந்தும் வங்கியின் சார்பில் வந்த அதிகாரிகள் உழவுப் பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

விவசாயி தேவேந்திரன்
விவசாயி தேவேந்திரன்

இதனால் மனமுடைந்த தேவேந்திரன் வயலில் வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட தேவேந்திரனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.

இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில். ``கட்ட வேண்டிய தவணைத் தொகையை கட்ட வேண்டும் எனப் பலமுறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தேவேந்திரன்
தேவேந்திரன்

ஆனால், இதுவரை அவர் கட்ட வேண்டிய தவணைத் தொகையை கட்டத் தவறியதால் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினர். இந்த நிலையில், தேவேந்திரனின் வங்கிக் கணக்கில் கடனுக்கான வைப்புத்தொகையாக இரண்டரை லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.