Published:Updated:

புதுக்கோட்டையில் வங்கி நகை மதிப்பீட்டாளருக்குக் கொரோனா! -சமூகப் பரவல் அச்சத்தில் வாடிக்கையாளர்கள்

புதுக்கோட்டையில் வங்கி நகை மதிப்பீட்டாளருக்குக் கொரோனா!
புதுக்கோட்டையில் வங்கி நகை மதிப்பீட்டாளருக்குக் கொரோனா!

புதுக்கோட்டையில் வங்கி நகை மதிப்பீட்டாளருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வங்கிக்கு சீல் வைக்கப்பட்டது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், கொரோனா வைரஸ் பரவல் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டுதான் செல்கிறது. கொரோனா வைரஸ் பரவலில் கடைசி இடத்தில் இருந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

ஏப்ரல் 20-ம் தேதி மாவட்டத்தில் முதன்முதலாக அரிமளம் அருகே மிரட்டு நிலையைச் சேர்ந்த 23 வயது இளைஞருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அதன்பின்பு, சென்னை கோயம்பேட்டிலிருந்து சொந்த ஊர் திரும்பிய 5பேர், மாலத்தீவிலிருந்து வந்த ஒருவர், மகாராஷ்டிராவிலிருந்து வந்த தொழிலாளர்கள் 8 பேர் என மொத்தம் 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

 வங்கி நகை மதிப்பீட்டாளருக்குக் கொரோனா
வங்கி நகை மதிப்பீட்டாளருக்குக் கொரோனா

இந்த நிலையில்தான், இன்று(மே 22-ம்தேதி)புனேவில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த அண்டக்குளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அடப்பன் வயலைச் சேர்ந்த கணவன், மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. புதிதாக 3 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், மாவட்டத்தில் பாதிப்பு 18 ஆக உயர்ந்துள்ளது. முதலில் பாதிக்கப்பட்ட வாலிபர் உட்பட 7 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 11பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அடப்பன்வயலைச் சேர்ந்தவர் புதுக்கோட்டை கீழ ராஜவீதியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வெளியே எங்கும் செல்லவில்லை. இவருக்கு வெளியூர் தொடர்பு ஏதும் கிடையாது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், வங்கி நகை மதிப்பீட்டாளரான இவர் பணியும் செய்துள்ளார். இதனால், சமூகப் பரவல் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்குமோ என்ற அச்சத்தில் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் உறைந்துள்ளனர்.

இதற்கிடையே, நகை மதிப்பீட்டாளருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட உடன், நகராட்சி சார்பில் வங்கிக்குச் சீல் வைக்கப்பட்டது. நகராட்சிப் பணியாளர்கள் வங்கி உட்பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வங்கியில் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரும் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதுபற்றி வங்கி வாடிக்கையாளர் ஒருவர் கூறும்போது, "வங்கி நகை மதிப்பீட்டாளரிடமிருந்துதான் அவங்க மனைவிக்கும் கொரோனா பரவி இருப்பதாகச் சொல்றாங்க. நகை மதிப்பீட்டாளருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது எங்களுக்குப் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. சமூகப் பரவலாக மாறியிருக்குமோ என்ற அச்சமும் வந்திருச்சு. எனவே, நகை வாங்க, விற்க வந்த எல்லாரையும் தனிமைப்படுத்தி அவர்களுக்கு முறையான பரிசோதனை நடத்தி சமூகப்பரவலாக மாறாமல் தடுக்க வேண்டும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு