Published:Updated:

மதுரை: வீட்டை சீல் வைத்த வங்கி! - பெண் பிள்ளைகளுடன் வாசலில் தவிக்கும் குடும்பம்

பாதிக்கப்பட்ட குடும்பம்
பாதிக்கப்பட்ட குடும்பம்

``பொருள்களையாவது எடுத்துக்கொள்கிறேன் என்று வங்கி அதிகாரிகளிடமும், போலீஸிடமும் கோரிக்கைவைத்தும் பலனில்லை. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் சதீஷ்குமார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தனியார் வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த முடியாத பால்காரரின் வீட்டை வங்கி நிர்வாகம் ஜப்தி செய்து சீல் வைக்க, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எந்தப் பொருளையும் எடுக்க முடியாமல் வீட்டு வாசலிலேயே ஒரு வாரமாக வசித்துவருவது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்

விருசங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், பள்ளிக்குச் செல்லும் இரு மகள்களும் இருக்கிறார்கள்.

இவர், கடந்த 2018-ம் ஆண்டு, திருமங்கலத்திலுள்ள தனியார் வங்கியில் ரூ 4.5 லட்சம் கடன் பெற்று, அதன் மூலம் ஏழு பசுமாடுகளை வாங்கித் தொழில் செய்துவந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமலும், கொரோனா பேரிடர் காலம் என்பதாலும் அவரால் கடன் தவணையை சரிவரச் செலுத்த முடியவில்லை.

இந்தநிலையில், தனியார் வங்கி ஊழியர்கள் சட்டவிதிகளின்படி கடந்த வாரம் சதீஷ்குமார் வீட்டுக்கு வந்து, எந்தப் பொருளையும் எடுக்கவிடாமல் சீல் வைத்தனர்.

வீட்டிலிருந்து எந்தப் பொருளையும் எடுக்க முடியாமல் இரண்டு பெண் பிள்ளைகளுடன் கடந்த ஒரு வாரமாக வீட்டு வாசலிலயே தவித்துவருகிறது சதீஷ்குமார் குடும்பம்.

பாதிக்கப்பட்ட குடும்பம்
பாதிக்கப்பட்ட குடும்பம்

இந்தநிலையில் தன்னுடைய பொருள்களை எடுத்துக்கொள்ளவாவது அனுமதிக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளிடமும், காவல்துறையினரிடமும் அவர் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ்குமார், ``உடல்நலமில்லை. கொரோனா வந்ததால் வருமானம் இல்லாமல் கடன் தவணையைக் கட்ட முடியவில்லை. இந்தநிலையில் நோட்டீஸ்விட்டவர்கள், நான் இல்லாத சமயம் வந்து வீட்டுக்கு சீல் வைத்துவிட்டார்கள். அரிசி, பருப்பைக்கூட எடுக்க முடியவில்லை. எங்களுடைய ஆடைகளையும் எடுக்கவில்லை. வீட்டு வாசலிலயே இருக்கிறோம். பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பச் சொல்லி பள்ளியிலிருந்து தகவல் சொன்னார்கள்.

அவர்களின் டிரெஸ், பாடப் புத்தகங்களையும் எடுக்க முடியாமல் தெரிந்த வீட்டில் வாங்கிக்கொடுத்து அவர்களை பள்ளிக்கு அனுப்பினோம். நான் என்ன குற்றம் செஞ்சேன். ஏன் இந்தக் கொடுமை?

சதீஷ்குமார்
சதீஷ்குமார்

`பொருள்களையாவது எடுத்துக்கொள்கிறேன்’ என்று வங்கி அதிகாரிகளிடமும், போலீஸிடமும் கோரிக்கைவைத்தும் பலனில்லை. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

பெண் பிள்ளைகளின் நலன் கருதி சதீஷ்குமாரின் வீடு ஜப்தி நடவடிக்கையில் மதுரை கலெக்டரும், இந்தத் தொகுதி எம்.எல்.ஏ-வும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு