Published:Updated:

`வங்கி கொஞ்சம் கருணை காட்டியிருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார்!' -உயிரிழந்த விவசாயி; கதறும் உறவினர்

வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்
வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்

பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், கனகராஜின் உடல்நிலையை எடுத்துச் சொல்லியும் கொஞ்சம்கூட வங்கி மேலாளர் இறங்கி வராமல் இருந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா குள்ளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கனகராஜ் (53). சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர். மாதம் ஒருமுறை சிகிச்சைகளுக்காக மருத்துவமனை சென்று வர வேண்டிய சூழல். இப்படியான உடல்நலப் பிரச்னையுடன் தனக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தில் கனகராஜ் விவசாயம் பார்த்து வந்திருக்கிறார். ஜூன் மாத தொடக்கத்தில், மருத்துவ சிகிச்சைக்குச் செல்ல வேண்டியிருந்ததால், பணம் எடுப்பதற்காக அவர் கணக்கு வைத்திருந்த கேத்தனூர் ஸ்டேட் பேங்குக்குச் சென்றுள்ளார். அப்போது, ``உங்களோட சேவிங்ஸ் அக்கவுண்ட்டை முடக்கி வச்சிருக்காங்க. அதனால, பணத்தை எடுக்க முடியாது" என வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர்.

உயிரிழந்த விவசாயி கனகராஜ்
உயிரிழந்த விவசாயி கனகராஜ்

2017-ல் கனகராஜுடைய தந்தை ரெங்கசாமி, இதே வங்கியில் ரூ.75,000 பயிர்க்கடன் வாங்கியிருக்கிறார். பயிர்க்கடன் வாங்கிய சில மாதங்களிலேயே ரெங்கராஜ் உடல்நலக்குறைவால் இறந்து போக, சாட்சிக் கையெழுத்து போட்ட கனகராஜ்தான் அந்தக் கடனைக் கட்ட வேண்டுமென வங்கித் தரப்பில் சொல்லியிருக்கின்றனர். கனகராஜும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதற்கிடையே கனகராஜுக்கு உடல்நலப் பிரச்னை, விவசாயத்தில் நஷ்டம் போன்ற காரணங்களால் உரிய நேரத்தில் தந்தை வாங்கியிருந்த ரூ.75,000 கடனைக் கட்ட முடியாமல் போயிருக்கிறது. அந்தக் கடனுக்கான அசல் மற்றும் வட்டிக்காகத்தான் எந்தத் தகவலையும் சொல்லாமல் தற்போது கனகராஜுனுடைய வங்கிக் கணக்கை முடக்கியிருக்கின்றனர்.

``மருத்துவச் செலவுகளுக்காக சேர்த்து வைத்த தொகையை முடக்கியிருப்பதில் துளியும் நியாயமில்லை" என கனகராஜ் வங்கி மேலாளரிடம் சொல்லிக் கலங்கியிருக்கிறார். தொடர்ச்சியாக 15 நாள்கள் மேலாளரைச் சந்தித்து பணத்தை விடுவிக்குமாறு கெஞ்சிக் கதறியுள்ளார் கனகராஜ். இருந்தும் வங்கி மேலாளரிடமிருந்து துளி கருணையும் கிடைத்தபாடில்லை.

இந்த மன உளைச்சலிலேயே உடைந்துபோயிருந்த கனகராஜுக்கு திடீரென உடல்நிலை மோசமாகியுள்ளது. உறவினர்களிடம் கடன் வாங்கி கனகராஜை மருத்துவமனையில் சேர்த்து குடும்பத்தினர் சிகிச்சை கொடுத்துள்ளனர். இருந்தும் சிகிச்சைப் பலனின்றி ஜூன் 25-ம் தேதி கனகராஜ் உயிரிழந்தார். `சரியான நேரத்தில் சிகிச்சைக்கு வந்திருந்தால் கனகராஜை காப்பாற்றியிருக்கலாம்' என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். ``பேங்க் மேனேஜர் கருணை காட்டியிருந்தால் அவரை இழந்திருக்கவே மாட்டோமே" எனத் தலையில் அடித்துக்கொண்டு கனகராஜின் மனைவி கவிதாவும், அவருடைய இரண்டு பெண் குழந்தைகளும் கதறியுள்ளனர்.

இந்த விவகாரம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடம் பெரும் கொதிப்பை உண்டாக்க, உயிரிழந்த குடும்பத்துக்கு நீதி வேண்டுமென சம்பந்தப்பட்ட கேத்தனூர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அதையடுத்து அரசுத் தரப்பில் உரிய இழப்பீடு வழங்கப்படுமென உத்தரவாதம் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

உயிரிழந்த விவசாயி கனகராஜின் சகோதரர் சண்முகம்
உயிரிழந்த விவசாயி கனகராஜின் சகோதரர் சண்முகம்

என்ன நடந்தது என உயிரிழந்த விவசாயி கனகராஜின் சகோதரர் சண்முகத்திடம் பேசினோம். ``எங்க அப்பா வாங்குன கடனை நான் தவணை முறையில கட்டிடுறேன். ஆஸ்பத்திரிச் செலவுக்கு எனக்கு அவசரமா பணம் தேவைப்படுது. தயவுசெஞ்சு என் அக்கவுன்ட்ல இருந்து பணத்தை எடுத்துக் குடுங்க"ன்னு பேங்க் மேனேஜர்கிட்ட கனகராஜ் எவ்வளவோ கெஞ்சியிருக்காரு. விவசாய சங்க நிர்வாகிகளோட நானும் 2 தடவை பேங்க் மேனேஜரைச் சந்திச்சு வேண்டுகோள் வச்சேன். `பயிர்க்கடனை செட்டில் செய்யாம, முடக்கப்பட்ட அக்கவுன்ட்டை விடுவிக்க முடியாது’ன்னு பேங்க் மேனேஜர் சுந்தரமூர்த்தி கறாராக நடந்துக்கிட்டாரு. இதனால மனதளவில் பாதிக்கப்பட்ட கனகராஜுக்கு, திடீரென உடம்பு சரியில்லாமப் போக, ஆஸ்பிட்டல்ல அட்மிட் செஞ்சோம். உறவினர்கள், விவசாயிகள் என பலர்கிட்ட இருந்தும் ரூ.3 லட்சம் கடன் வாங்கி கனகராஜுக்கு வைத்தியம் பார்த்தோம். இருந்தும் அவரை எங்களால காப்பாத்த முடியலை” எனக் கலங்கினார்.

தொடர்ந்து பேசியவர், ``என்ன சொன்னாலும், மிரட்டுனாலும் கேட்டுக்குவாங்க. எதையும் தட்டிக்கேட்காத ஒரு வாயில்லாத பூச்சின்னு விவசாயிங்களை நினைக்குறாங்க. பொதுவாவே, ஒரு விவசாயி பேங்குக்கு போனா எந்த மரியாதையும் கொடுக்குறதில்லை. காலையில 10 மணிக்கு போனா மதியம் 2 மணி வரைக்கும் உட்கார வச்சி, `நாளைக்கு வாங்க’ன்னு சொல்லி விரட்டி விடுவாங்க. விவசாயிங்களை மனுஷனாவே பேங்க்ல மதிக்கிறதில்லை. அதேமாதிரி பல ஆயிரம் கோடியை ஏமாத்திட்டு போறவங்க எல்லாம் பேங்குக்கு சுமையா தெரியாது. ஒரு விவசாயி ரூ.75,000 விவசாயிக்கடன் கட்டலைன்னா அதுதான் அவங்களுக்கு சுமையா தெரியும். இந்த கொரோனா காலத்துலயும் கடனைக் கட்டச் சொல்லி இப்படியா கடுமையா நடந்துக்குறது. விவசாயிங்க, ஏழைங்ககிட்ட கொஞ்ச மனிதாபிமானத்தோட நடந்துகிட்டா போதும். இறந்துபோன கனகராஜுக்கு வயதுக்கு வராத 2 பெண் குழந்தைங்க இருக்காங்க. அவங்களோட எதிர்காலத்துக்கு அரசாங்கம் ஏதாவது உதவி செய்யணும்” என்றார்.

வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்
வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்
ரூ.1 லட்சம் கடனுக்கு ரூ.6 லட்சம் வட்டி; பறிபோன நிலம்; கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை!

இந்த விவகாரம் சம்பந்தமாக விவசாயிகள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் ஊழியர் குணசுந்தரி ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சொல்லியிருப்பதோடு, வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தியை பணிமாற்றம் செய்திருக்கின்றனர். மேலும், கனகராஜ் கட்ட வேண்டுமென சொல்லப்பட்டிருந்த பயிர்க்கடனை வங்கித் தரப்பிலிருந்து முழுமையாகத் தள்ளுபடி செய்துள்ளனர். மேலும், கனகராஜின் குழந்தைகள் கல்விக்கு அரசு சார்பில் உதவி செய்யப்படுமெனவும், கனகராஜின் இழப்புக்கு உரிய இழப்பீடு கிடைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்.

வங்கிகளின் கறார்தன்மை இன்னும் எத்தனை விவசாயிகளை காவு வாங்கப் போகிறதோ..!

அடுத்த கட்டுரைக்கு