Published:Updated:

`இந்த நேரத்திலும் உதவி செய்யாமல் இருந்தால் எப்படி?' - அரசின் தாமதத்தால் கலங்கும் பதிப்பகங்கள்

பபாசி
பபாசி

பதிப்பகம் மற்றும் அது சார்ந்து இயங்கும் தொழிலாளர்களுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் தமிழக அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பல்வேறு தொழிலாளர்களும் இதனால் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். அந்தவகையில், அச்சுத் துறை சார்ந்து இயங்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பைச் சந்தித்து வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். நலிவடைந்திருக்கும் அச்சுத் துறை இந்த ஊரடங்கால் நொடித்துப் போயிருக்கிறது என்கிறார்கள் பதிப்பகத்தார். இந்தநிலையில், பதிப்பகம் மற்றும் அந்தத் துறை சார்ந்து இயங்கக்கூடிய தொழிலாளர்களின் துயர் துடைக்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

மயிலவேலன்
மயிலவேலன்

இதுதொடர்பாக வனிதா பதிப்பகத்தின் பெ.மயிலவேலனிடம் பேசினோம். ``இந்திய அளவில் தமிழக நூலகத்துறை முதன்மையாக இருக்கிறது. அந்த நூலகங்களுக்குப் பதிப்பகங்களிடமிருந்து நூல்களை அரசு வாங்குகிறது. இதற்காக ஏற்கெனவே நூலகங்களுக்கு வாங்கிய புத்தகங்களுக்கான நிலுவைத் தொகையை அரசு வழங்கி வருகிறது. இதுதொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் துறை அதிகாரிகளைச் சந்தித்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே கோரிக்கை வைத்திருந்தோம். நிச்சயம் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரும் அதிகாரிகளும் உறுதி கொடுத்திருந்தனர். ஊரடங்கால் தொழில் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில் அரசு மீதமுள்ள நிலுவைத் தொகையையும் கொடுத்தால் உதவிகரமாக இருக்கும். டிடிபி, பிரின்டிங், பைண்டிங், நெகடிவ் மேக்கிங் என சுமார் 10 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பதிப்பகங்கள் சார்ந்தே இருக்கிறது’’ என்றார்.

கொரோனா வைரஸ் விலங்கிலிருந்து பரவியதாகச் சொல்கிறார்களே... உண்மையா? 
#DoubtOfCommonman

இதுகுறித்து நம்மிடம் பேசிய தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் சண்முகம், ``அரசு நூலகங்களுக்குக் கடந்தாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் புத்தகங்களை விநியோகித்தோம். அதற்கான தொகை சில நூலகங்களிலிருந்து வந்துவிட்ட நிலையில், பல நூலகங்களுக்கு அனுப்பப்பட்ட புத்தகங்களுக்கான தொகை இதுவரை வரவில்லை. பதிப்பாளர்கள் ஏற்கெனவே வட்டிக்குப் பணம் வாங்கி பேப்பர் உள்ளிட்டவற்றுக்கு முதலீடு செய்து புத்தகத்தைக் கொண்டு வந்திருப்பார்கள்.

பபாசி தலைவர் சண்முகம்
பபாசி தலைவர் சண்முகம்

அப்படி அச்சான புத்தகங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில், அதற்கான தொகை 3 அல்லது 4 மாதங்களில் வந்திருந்தால் சமாளித்து விடுவார்கள். ஆனால், ஒரு வருடம் முடிந்தநிலையிலும் முழுமையாக அது வந்துசேரவில்லை. 400-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் நூலகங்களுக்குப் புத்தகங்களை விநியோகித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு மொத்தத் தொகையில் 25 முதல் 30 சதவிகிதத் தொகைதான் கிடைத்திருக்கிறது. மீதத் தொகையை அரசு வழங்கினால் உதவிகரமாக இருக்கும்.

`தேசிய ஊரடங்கு; 450 கி.மீ தொலைவு!’ - பணிக்காக 20 மணிநேரம் நடந்தே சென்ற கான்ஸ்டபிள் #Corona

இதுதொடர்பாக அரசுக்குப் பலமுறை நினைவுபடுத்திவிட்டோம். வழக்கமாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புத்தக விற்பனையும் பெரிதாக இருக்காது. இப்படிப்பட்டசூழலில் ஊரடங்கும் போடப்பட்டிருக்கிறது. வேலையிழந்து சிரமத்தில் இருக்கும் இந்தச் சூழலில் அரசு அதைக் கருத்தில் கொண்டு உதவ வேண்டும்.

ஊரடங்கு
ஊரடங்கு

2009ல் தொடங்கப்பட்ட பதிப்பாளர் மற்றும் பதிப்புத் தொழிலாளர் நலவாரியத்துக்காக நூலக ஆர்டர்களின்போது அரசு 2.5 சதவிகிதம் பிடித்தம் செய்துகொண்டு மீதத் தொகையையே கொடுக்கும். இந்த நலவாரியத்தில் டிடிபி ஆபரேட்டர், பைண்டிங் தொழிலில் இருப்பவர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. குழந்தைகளுக்கான கல்வி உதவி தொடங்கி ஓய்வூதியம் வரை வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்காக 2009ம் ஆண்டுக்குப் பிறகான எல்லா நூலக ஆர்டர்களிலும் 2.5 சதவிகிதத்தை அரசு பிடித்தம் செய்தது. இந்த இக்கட்டான சூழலில் அந்த நிதியிலிருந்து பதிப்புத் தொழில் சார்ந்தவர்களுக்கு உதவி வழங்க அரசு முன்வர வேண்டும். பதிப்புத் தொழில் சார்ந்தோரிடமிருந்து இந்த இரண்டு கோரிக்கைகளை அரசுக்கு முன்வைக்கிறோம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு