Published:Updated:

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை; வழக்கறிஞருக்கு தடை விதித்த பார் கவுன்சில்!

மதுரை உயர் நீதிமன்றம்
News
மதுரை உயர் நீதிமன்றம்

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ``இந்த வழக்கு நீதிமன்ற பெண் ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பானது. பாலியல் தொல்லை அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமென பாதிக்கப்பட்ட பெண் கூறினாலும், நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்காது" என்றார்.

நீதிமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கறிஞர் சங்கத்தலைவர் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் சட்டத் தொழில் செய்ய பார் கவுன்சில் தடை விதித்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவராக இருப்பவர் முனியசாமி. சில மாதங்களுக்கு முன் நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து அப்பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

வழக்கறிஞர் முனியசாமி
வழக்கறிஞர் முனியசாமி

வழக்கறிஞரின் செல்வாக்கால் அந்தப் புகாரில் நடவடிக்கை எடுக்காததால் அப்பெண் ஊழியர் வேறு நீதிமன்றத்துக்குப் பணி மாறுதலாகிச் சென்றார்.

இது சம்பந்தமாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி தாக்கல் செய்த அறிக்கையில், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் வேறு நீதிமன்றத்துக்குப் பணி மாற்றச் சொல்லி கோரிக்கை வைத்ததால் மாறுதல் செய்ததாகவும், புகாருக்குள்ளான வழக்கறிஞர் சங்கத் தலைவர் முனியசாமி மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டதால் புகார் முடித்து வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ``இந்த வழக்கு நீதிமன்ற பெண் ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பானது. பாலியல் தொல்லை அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமென பாதிக்கப்பட்ட பெண் கூறினாலும், நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்காது.

முனியசாமி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி பரிந்துரைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

sexual harassment (representational image)
sexual harassment (representational image)

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில், ஒழுங்கு நடவடிக்கை விசாரணை அறிக்கை வரும் வரை கமுதி வழக்கறிஞர் சங்கத் தலைவர் முனியசாமி எந்த நீதிமன்றத்திலும் தொழில் செய்ய தடை விதிப்பதாக உத்தரவிட்டுள்ளது.

இது பற்றி நாம் விசாரித்தோம். `பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முனியசாமி மீது புகார் கொடுத்தும், தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத வகையில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் என்ற அதிகாரத்தை அவர் பயன்படுத்தி யிருக்கிறார். தொடர்ந்து மிரட்டியதால் அப்பெண் ஊழியரே பணி மாறுதல் கேட்கும் அளவுக்குச் சென்றுள்ளார். பாலியல் தொல்லை செய்தற்கான சிசிடிவி பதிவுகளும் தற்போது காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன' என்றனர் சிலர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து சமூகச் செயற்பாட்டாளர் வழக்கறிஞர் செல்வகோமதியிடம் பேசினோம். ``இதுபோன்ற சம்பவம் அதிர்ச்சியாக உள்ளது. பொதுவாக, பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் ரீதியான அத்துமீறல்கள் சம்பந்தமாக புகார் தெரிவிக்க கமிட்டிகள் உள்ளன. அது நீதிமன்றங்களிலும் உள்ளது. ஆனால், அதைப்பற்றி தகவல்களே பல இடங்களில் இல்லை. நீதிமன்ற ஊழியராக இருந்தும் பாதிக்கப்பட்ட பெண் அச்சம் அடைந்திருக்கிறார்.

எவையெல்லாம் பாலியல் அத்துமீறல், பாலியல் வன்முறை என்பது பற்றி விளக்கும் விழிப்புணர்வுப் பலகைகள் பொதுமக்கள் பார்வையில் படும் இடங்களில் வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், பல இடங்களில் அது இல்லை.

செல்வகோமதி
செல்வகோமதி

பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்ற ஊழியராக இருந்தும் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தியுள்ளார்கள். பெண்கள் யாரும் பாலியல் ரீதியாக எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

பெண்களைப் பாதுகாக்க வேண்டிய சட்டங்களைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய நீதித்துறையிலேயே அவ்வப்போது பாலியல் புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கும் புகார் கடிதங்களை அனுப்பினார்.

அந்தப் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறிய உள்விசாரணைக்குழு, அதைத் தள்ளுபடி செய்வதாகக் கூறி, அவ்வறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.