Published:Updated:

`உங்களுக்கெல்லாம் என்னடா அவசரம்?'- புதுக்கோட்டையில் நாடோடி இன இளைஞர்களைத் தாக்கிய பார் ஊழியர்கள்

டாஸ்மாக் கடை பார் முற்றுகை
டாஸ்மாக் கடை பார் முற்றுகை

பார்ல வேலை பார்த்த 8 பேர் சேர்ந்து, கதவ சாத்திட்டு, இரும்புக் கம்பியால இரண்டு பேரையும் கட்டிவச்சி, பீர் பாட்டிலால இரண்டு பேரோட தலை, கை, கால், வயிற்றில எல்லாம் சரமாரியா அடிச்சிட்டு ஓடிட்டாங்க.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகன் (21), ரமேஷ்(27). இருவரும் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் பாரில் மது அருந்தச் சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள பாருக்குள் சென்றுள்ளனர். அப்போது, அங்கு பார் ஊழியர்களாகத் துரை, ஆனந்த் ஆகியோர் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களிடம் உணவுப் பொருள்களைக் கொண்டுவருமாறு கூறியுள்ளனர். நீண்ட நேரமாக உணவுப்பொருள் வரவில்லை என்று பார் ஊழியர்களிடம் கேட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள்
பாதிக்கப்பட்ட இளைஞர்கள்

அதற்கு உங்களுக்கெல்லாம் என்னடா அவசரம் என்று அவர்களின் சமுதாயத்தை இழிவுபடுத்திக் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில், இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து, பார் ஊழியர்கள் ஒன்றுசேர்ந்து முருகன், ரமேஷ் இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த நாடோடி இன மக்கள் 50-க்கும் மேற்பட்டோர், டாஸ்மாக் பார் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுபற்றி அச்சமூகத்தைச் சேர்ந்த மக்கள், ``பார்ல வேலை பார்த்த 8 பேர் சேர்ந்து, இரும்புக் கதவ சாத்திட்டு, இரும்புக் கம்பியால இரண்டு பேரையும் கட்டி வச்சி, பீர் பாட்டிலால தலை, கை, கால், வயிற்றில எல்லாம் சரமாரியா அடிச்சிட்டு ஓடிட்டாங்க.

`உங்களுக்கெல்லாம் என்னடா அவசரம்?'- புதுக்கோட்டையில் நாடோடி இன இளைஞர்களைத் தாக்கிய பார் ஊழியர்கள்

நாங்க போய் கதவ தொறந்து இரண்டு பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில சேர்த்திருக்கோம். இரண்டு பேருக்கும் ரத்த வாந்தியே வந்திருச்சு. அந்தளவுக்கு அடிச்சிருக்காங்க. இது மனித உரிமை மீறல். எல்லாரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கணும்" என்றனர்.

இதுபற்றி பார் ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது, ``இருவரும் உடனே சைடிஷ் கொடுக்கவில்லை என்றால், நாங்களே எடுத்துக்கொள்வோம் என்று கூறி அங்கிருந்த உணவுப் பொருள்கள் அனைத்தையும் கைபோட்டு எடுத்துச் சென்றனர். அதனால்தான் ஊழியர்கள் அவர்களைத் தாக்கினார்கள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு