Published:Updated:

`கழுதையில் அனுப்பப்பட்ட அத்தியாவசியப் பொருள்கள்!’- போடி மலைகிராம மக்களின் நிலை என்ன?

கழுதையில் கொண்டு செல்லப்படும் அத்யாவசியப் பொருள்கள்
கழுதையில் கொண்டு செல்லப்படும் அத்யாவசியப் பொருள்கள்

`ரேஷன் பொருள்கள் எல்லாம் வந்து சேர்ந்துவிட்டன. சிலர், ரேஷன் அட்டை இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் சாப்பாட்டிற்கு ரொம்பவும் சிரமப்பட்டனர்’

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றுள்ளோர்களில் பெரும்பாலானோர் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடியைச் சேர்ந்தவர்கள். அதனால், போடி நகர் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, ஊரடங்கு மிகவும் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், போடி தொகுதியில் உள்ள மலை கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் என்ன என்பது பற்றி விசாரித்தோம்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்
`ஒரே நாளில் 12 பெண்கள் உட்பட 16 பேருக்குக் கொரோனா பாசிடிவ்!’ அதிர்ச்சியளிக்கும் தேனி நிலவரம்

போடி அருகே உள்ளது கொட்டக்குடி ஊராட்சி. இதன் கட்டுப்பாட்டில், குரங்கணி, சென்ட்ரல் ஸ்டேஷன், முதுவாகுடி ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. இதில், முதுவாகுடி என்ற பழங்குடியின மலை கிராம மக்களின் நிலை குறித்து அங்குள்ள ஒருவரிடம் கேட்டோம். ``ரேஷன் பொருள்கள் எல்லாம் வந்து சேர்ந்துவிட்டன. சிலர், ரேஷன் அட்டை இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் சாப்பாட்டிற்கு ரொம்பவும் சிரமப்பட்டனர்.

மேலும், பருப்பு மற்றும் மளிகைப் பொருள்களுக்கு சிரமமாக இருந்தது. ஒரு வாரத்திற்கு மேலாக, வெறும் சாப்பாட்டை சாப்பிட வேண்டிய நிலை. அதைப் பற்றி தகவல் அறிந்த, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது உதவியாளர் ராஜாஅழகன் மற்றும், அம்மா பேரவை குறிஞ்சிமணி ஆகியோர் மூலமாக அரிசி, பருப்பு ஆகியவற்றை கழுதையில் ஏற்றி அனுப்பினார்கள். இதனால், எங்கள் மலை கிராமத்தில் உணவிற்குப் பிரச்னை ஏதும் இல்லை” என்றார்.

மலை கிராமங்களுக்கு அனுப்பப்பட்ட அத்யாவசியப் பொருள்கள்.
மலை கிராமங்களுக்கு அனுப்பப்பட்ட அத்யாவசியப் பொருள்கள்.

இது ஒருபுறம் என்றால், போடி தொகுதிக்கு உட்பட்ட சிறைக்காடு மற்றும் சோலையூர் மலை கிராம மக்களிடம் பேசினோம். ``ரேஷன் பொருள்கள் கிடைத்திருக்கிறது. ஆனால், மளிகை, காய்கறிகள் வாங்க 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள போடிக்குச் செல்ல முடியவில்லை. முன்னரெல்லாம் இப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு வரும் சரக்கு வண்டிகளில் ஏறி போடிக்குச் சென்று பொருள்கள் வாங்கிவருவோம்.

ஆனால், இந்த ஊரடங்கிற்குப் பின்னர், சரக்கு வண்டிகள் ஏதும் இப்பகுதிக்கு வருவதில்லை. இதனால், வெறும் சோற்றைச் சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். ரொம்பவும் கஷ்டமாக உள்ளது” என்றனர். இதுதொடர்பாக அம்மா பேரவை பொருளாளர் குறிஞ்சிமணி கூறும்போது, ``துணைமுதல்வர் உத்தரவுப்படி, போடி தொகுதியில் உள்ள ஒவ்வொரு மலைகிராமப் பகுதியாக அத்தியாவசியப் பொருள்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

`தேனி நகரில் 2 பேருக்குக் கொரோனா தொற்று!’ - ட்ரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்ட தேனி போலீஸார்

சிறைக்காடு கிராமத்திற்கு முதல்கட்டமாக நடமாடும் காய்கறி வண்டி அனுப்பப்பட உள்ளது. சிலர் ரேஷன் அட்டை இல்லாமல் இருப்பர். அவர்களுக்கு விரைவில் ரேஷன் அட்டை மற்றும் பொருள்கள் கொடுக்கவும் அதிகாரிகளுடன் துணைமுதல்வர் அவர்கள் பேசியுள்ளார்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு