Published:Updated:

நீலகிரி: பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்த கரடி; பக்கத்து அறையில் பதுங்கிய உரிமையாளர்கள்!

 வீட்டுக்குள் நுழைந்த கரடி
வீட்டுக்குள் நுழைந்த கரடி

கோத்தகிரியில் உணவு தேடி அலைந்த கரடி ஒன்று வீட்டுக்குள் புகுந்ததால், வீட்டின் உரிமையாளர்கள் பக்கத்து அறையில் பதுங்கினர்.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருப்பதால், வாகன போக்குவரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் பல பகுதிகளில் வன விலங்குகள் சுதந்திரமாக உலவுகின்றன.

 வீட்டுக்குள் நுழைந்த கரடி
வீட்டுக்குள் நுழைந்த கரடி

கோத்தகிரி அரவேனு அருகில் உள்ள பனகுடி பகுதியில் கரடி ஒன்று உணவு தேடி அலைந்துள்ளது‌. தேயிலைத் தோட்டத்தின் அருகில் உள்ள ராமன் என்பவரது குடியிருப்புக்கு வந்த அந்தக் கரடி, வீட்டுக்குள் நுழைந்துள்ளது. பட்டப் பகலில் திடீரென வீட்டுக்குள் கரடி நுழைவதைக் கண்ட வீட்டின் உரிமையாளர்கள், பக்கத்து அறைக்குத் தப்பித்துச் சென்று கதவை தாழிட்டுள்ளனர்.

உணவு ஏதாவது கிடைக்குமா என வீட்டின் முன்பகுதியில் சிறிது நேரம் தேடிப்பார்த்த அந்தக் கரடி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் சுதாரித்துக்கொண்டதால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதை அந்த வீட்டின் உரிமையாளர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

 வீட்டுக்குள் நுழைந்த கரடி
வீட்டுக்குள் நுழைந்த கரடி

இது குறித்து பேசிய வனத்துறையினர், ``வீட்டைச் சுற்றிலும் அல்லது வீட்டின் அருகிலும் உணவுக் கழிவுகள், காய்கறி மற்றும் பழங்களின் கழிவுகளைக் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும். இவற்றின் வாசனையைக் கொண்டே கரடி, காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகள் வீடுகளைத் தேடி வருகின்றன. இதனால் ஒரு சில சமயங்களில் மனித - வன விலங்கு எதிர்கொள்ளல்களும் ஏற்படுகின்றன. எனவே, உணவுக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு