Published:Updated:

`வாகன நெரிசல் இல்லா அண்ணா சாலை; ஓய்வெடுக்கும் மாநகரப் பேருந்துகள்!' - #Lockdown-ல் சென்னை #DroneView

சென்னை
சென்னை

எப்போதும் வாகனங்களின் இரைச்சல்...போக்குவரத்து நெரிசல்...மக்கள் கூட்டம்...நம்மில் பெரும்பாலானோருக்கு சென்னை என்றாலே இந்தப் பிம்பம்தான் நினைவில் எழும். ஆனால், ஊரடங்கு இந்தநிலையை முற்றிலும் மாற்றியிருக்கிறது.

ஊரடங்கில் சென்னை எப்படி இருக்கிறது என்பதை பறவைப் பார்வையில் விகடன் ஒளிப்பதிவாளர்கள் படம் பிடித்திருக்கிறார்கள். வாகனங்கள் நெரிசலால் திணறும் அண்ணா சாலை, கிராமம் ஒன்றைக் கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலை போல் ஆள் அரவமின்றிக் கிடந்தது. வாகனங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கடந்து சென்றன.

சென்னையின் முக்கிய அடையாளமான சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்களைத் தவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸாரும் தூய்மைப் பணியாளர்களுமே இருந்தனர். எழும்பூர் ரயில் நிலையத்திலும் இதேநிலைதான். கத்திப்பாரா, ஜெமினி, கோயம்பேடு, மதுரவாயல் உள்ளிட்ட மேம்பாலங்கள் வெறிச்சோடிக் கிடந்தன.

மெரினா கடற்கரை
மெரினா கடற்கரை

மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் சென்னையின் எக்ஸ்பிரஸ் அவென்யூ, பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி உள்ளிட்ட வணிக வளாகங்கள் நிசப்தமாக பொழுதைக் கழிக்கின்றன.

சென்னை மெரினா கடற்கரை மற்றும் அதனையொட்டிய சாலைகள் பரபரப்பில்லாமல் இருந்ததைப் பார்க்க முடிந்தது. சாலைகளில் கிரீன் சிக்னலுக்காகக் காத்திருக்கும் மக்கள் கூட்டம் இல்லை; பரபரப்பாக இயங்கும் மாநகரப் பேருந்துகள் எல்லாம் பணிமனைகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன. பேசின் பிரிட்ஜ் ரயில்வே பாலத்துக்கு அடியில் ரயில்கள் நிரம்பியிருக்கின்றன. காசிமேடு மீன்பிடித் துறைமுகம் மக்களின் குரல்கள் எதுவுமில்லாமல் அமைதி காக்கிறது. தேனாம்பேட்டை சிக்னலில் அதிகபட்சம் 3 வண்டிகளுக்கு மேல் ஒரே நேரத்தில் பார்க்க முடியாமல் இருந்தது.

சென்னையின் அழகு....பறவைப் பார்வையில்...இதோ அந்தக் காணொலி..

தி.நகர் ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார் என மக்கள் கூட்டம் அதிகமிருக்கும் மார்க்கெட் பகுதிகள் கைவிடப்பட்ட பகுதிகள் போல் காட்சியளித்தன. மொத்தத்தில் இந்த ஊரடங்கு நமக்கு யாருமே கற்பனை கூட பண்ணிப்பார்த்திருக்காத சென்னையின் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு