Published:Updated:

சீர்காழி: மழைநீர் புகுந்ததால் விசைப்படகுகளின் இன்ஜின்கள் பழுது! - கவலையில் மீனவர்கள்

விசைப்படகுகளின் இன்ஜின்கள் பழுது
விசைப்படகுகளின் இன்ஜின்கள் பழுது

பேரிடர் காலங்களில் மீனவர்கள் தங்களது படகுகளை அருகிலுள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் நிறுத்துகின்றனர். இவ்வாறு நிறுத்தப்படும் படகுகளை மீனவர்கள் குழு அமைத்துப் பாதுகாக்கின்றனர்.

சீர்காழி அருகே பழையாறு மீனவ கிராமத்தில் புரேவி புயல் மற்றும் கனமழையிலிருந்து விசைப்படகுகளைப் பாதுகாக்க பக்கிங்ஹாம் கால்வாயில் நிறுத்தியிருந்தனர் உரிமையாளர்கள். இந்தநிலையில், விசைப்படகுகளில் மழைநீர் புகுந்ததால் படகுகளின் இன்ஜின் மற்றும் டைனமோக்கள் பழுதடைந்தன. இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை எண்ணி மீனவர்கள் பெரிதும் கவலையடைந்திருக்கிறார்கள்.

விசைப்படகுகளின் இன்ஜின்கள் பழுது
விசைப்படகுகளின் இன்ஜின்கள் பழுது

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பழையாறு மீனவ  கிராமத்தில் அமைந்திருக்கும் மீன்பிடித் துறைமுகத்தில், சுமார் 350 விசைப்படகுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்துவருகின்றனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும். தற்போது அதிகரித்துள்ள படகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப துறைமுகத்தில் இட வசதி இல்லை.

சாலைகள், ஏலக் கூடங்கள், படகு கட்டும் தளம் ஆகியவை பழுதடைந்திருக்கின்றன. ஐஸ் பிளான்ட் பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. கழிவுநீர்க் கால்வாய்கள் இல்லை. படகுகள் அனைத்துக்கும் ஒரே பங்க்கில் டீசல் வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் பேரிடர் காலங்களில் மீனவர்கள் தங்களது படகுகளை அருகிலுள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் நிறுத்துகின்றனர். இவ்வாறு நிறுத்தப்படும் படகுகளை மீனவர்கள் குழு அமைத்துப் பாதுகாக்கின்றனர். சமீபத்தில் வந்த புரேவி புயல் மற்றும் கனமழையிலிருந்து பாதுகாக்க மீனவர்கள் தங்கள் படகுகளை பக்கிங்ஹாம் கால்வாயில் நெருக்கமாக நிறுத்தியிருக்கிறார்கள். தொடர்ந்து பெய்த அதீத கனமழையால் படகுகளில் மழைநீர் புகுந்து இன்ஜின் மற்றும் டைனமோக்கள் பழுதடைந்ததுடன், ஒன்றுடன் ஒன்று மோதி சிறு சிறு சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

இது பற்றி பழையாறு மீனவர்கள் சிலரிடம் பேசினோம். ``சேதமான படகுகளில் தலா ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நஷ்டத்தால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். தொடர்ந்து படகுகளிலிருந்து தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றிவருகிறோம்.

விசைப்படகுகளின் இன்ஜின்கள் பழுது
விசைப்படகுகளின் இன்ஜின்கள் பழுது

எங்கள் படகுகளைப் பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு வசதியாக பக்கிங்ஹாம் கால்வாயின் இரு கரைகளிலும் வார்ப்புகள் அமைத்துத் தர வேண்டும், துறைமுகச் சாலைகள், படகு கட்டும் தளம் ஆகியவற்றைச் சீர்செய்து, புதிய ஏலக்கூடம், ஐஸ் பிளான்ட் அமைத்துத் தர வேண்டும். அனைத்து படகுகளுக்கும் டீசல் பிடிக்க வசதியாக மேலும் ஒரு டீசல் பங்க் அமைத்துத் தர வேண்டும். பல நாள்களாக ஏற்பட்டிருக்கும் தொழில் பாதிப்புக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு