Published:Updated:

சென்னை: `12,000 மக்கள்; 3 நாள்கள்!’- 740 டன் அமோனியம் நைட்ரேட் விவகாரத்தில் புதிய உத்தரவு

அமோனியம் நைட்ரேட் விவகாரத்தில் முக்கிய உத்தரவை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்துள்ளது.

லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் நடைபெற்ற கோர விபத்து, நூற்றுக்கும் அதிகமானோரை பலிவாங்கிவிட்டது. ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக துறைமுகத்தில் கேட்பாரற்று சேமித்து வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் தீ பிடித்ததால்தான், இவ்வளவு பெரிய சேதாரம் ஏற்பட்டதாக லெபனான் அரசு கூறியுள்ளது. இதன் அதிர்ச்சியே இன்னும் அகலாத நிலையில், சென்னை துறைமுகத்தில் இருந்து, 20 கி.மீ தொலைவில், ஐந்து வருடங்களாக 740 டன் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ளது குறித்து வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டாக்டர் ராமதாஸ்
டாக்டர் ராமதாஸ்

பா.ம.க நிறுவனர் ராமதாஸ், இந்த விவகாரத்தை வெளிக் கொண்டுவந்தார். பசுமைத் தாயகம் அமைப்பு மூலமாக இயற்கைச் சூழல், வேளாண் பொருள்கள் பற்றிய ஆய்வுகள், கண்காணிப்புகளை பா.ம.க மேற்கொண்டு வருகிறது. பல ஆண்டுகளாக தனியாருக்குச் சொந்தமான கிடங்கில் அமோனியம் நைட்ரேட் சேமிக்கப்பட்டிருக்கும் தகவல் பசுமைத் தாயகம் அமைப்பு மூலமாக ராமதாஸுக்குக் கொண்டு செல்லப்பட்டதாம். அதிர்ந்துபோன அவர் உடனடியாக இந்த விவகாரத்தை வெளிக் கொண்டுவந்துள்ளார் என்கிறார்கள்.

ஏன்... எப்படி... எதனால் வெடித்தது லெபனான்?   #BeirutBlast

சிவகாசியிலுள்ள பட்டாசு ஆலைகள், தமிழகத்திலுள்ள உரத் தயாரிப்பு கம்பெனிகளுக்காக 2015-ம் ஆண்டு 740 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருளை கரூரைச் சேர்ந்த அம்மன் கெமிக்கல்ஸ் என்கிற நிறுவனம் இறக்குமதி செய்தது. அமோனியம் நைட்ரேட்டை இறக்குமதி செய்ய வேண்டுமானால், மத்திய அரசின் தொழில்துறை கட்டுப்பாட்டில் வரும் வெடிபொருள்கள் தலைமைக் கட்டுப்பாட்டாளரிடம் இருந்து `பி 5’ லைசென்ஸ் பெற வேண்டும். ஆனால், அம்மன் கெமிக்கல் நிறுவனத்திடம் `பி 3’ லைசென்ஸ் மட்டுமே இருந்துள்ளது என்கிறார்கள். அவர்கள் `பி 5’ லைசென்ஸுகாக விண்ணப்பித்திருந்தபோது, ஏற்கெனவே அவர்களால் ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் சென்னை துறைமுகம் வந்துவிட்டது. லைசென்ஸ் இல்லாததால் சுங்கத்துறை அதிகாரிகள் அதைப் பறிமுதல் செய்து, 37 கண்டெய்னர்களில் பத்திரப்படுத்தினர். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த 740 டன் அமோனியம் நைட்ரேட், மணலியிலுள்ள தனியார் கிடங்கான சத்வா ஹைடெக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

File photo
File photo

எளிதில் தீ பிடிக்கக் கூடிய அமோனியம் நைட்ரேட் போன்ற அபாயகரமான வேதிப்பொருள் சென்னையிலும் ஐந்து வருடமாக கேட்பாரற்று வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து தகவல் வெளியானவுடன் தமிழ்நாடு தீயணைப்புத்துறையின் தலைவர் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., உடனடியாக அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள கிடங்குக்கு நேரடி விசிட் அடித்தார். தேவைப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தவர், உடனடியாக இதை அப்புறப்படுத்துமாறு சுங்க அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டார்.

`5 ஆண்டுகள்; 750 டன்!’ - லெபனான் விபத்துக்குக் காரணமான அமோனியம் நைட்ரேட் சென்னையிலும் சேமிப்பு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக பா.ம.க வழக்கறிஞர் பாலுவிடம் பேசினோம். ``இவ்வளவு ஆண்டுகள் ஒரு பெரிய ஆபத்து சென்னைக்குள்ளேயே இருந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. உடனடியாக இதை அப்புறப்படுத்தி, நலிவடைந்த உரத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும்” என்றார்.

 பாமக  வழக்கறிஞர் பாலு
பாமக வழக்கறிஞர் பாலு

அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த மணலி கிடங்கில் நேரில் விசாரணை நடத்திய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், கிடங்கைச் சுற்றிலும் சுமார் 12,000 மக்கள் வசிப்பதைப் பார்த்து மிரண்டுவிட்டனர். எதன் அடிப்படையில் கிடங்கைச் சுற்றி இரண்டு கி.மீ தூரத்துக்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை என சுங்கத்துறை விளக்கமளித்தது என யாருக்கும் புரியவில்லை. மூன்று நாள்களில் 740 டன் அமோனியம் நைட்ரேட்டும் ஏலத்தில் விடப்பட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிடப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு