Published:Updated:

பாரதியின் உயிர்காக்க தேவை ₹2.7 கோடி; மகளுக்காகப் பாசப்போராட்டம் நடத்தும் பெற்றோர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உயிருக்குப் போராடும் குழந்தை பாரதி
உயிருக்குப் போராடும் குழந்தை பாரதி ( படம்: ம.அரவிந்த் )

80 நாளில் ரூ.13.3 கோடி பணம் கிடைத்துள்ளது பாரதியின் பெற்றோருக்கு. நவம்பர் 20-ம் தேதிக்குள் ஊசி போட வேண்டிய நிலையில், இன்னும் 2.7 கோடி வசூல் ஆக வேண்டியிருக்கிறது. பாரதியின் பெற்றோர் கிட்டத்தட்ட தங்கள் போராட்ட முயற்சியின் இறுதி நிலையை எட்டியிருக்கின்றனர்.

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் பெண் குழந்தையின் உயிரைக் காப்பாற்றப் போராடி வருகின்றனர் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ் - எழிலரசி தம்பதியினர். ரூ.16 கோடி மதிப்புடைய ஊசி மருந்துக்காகப் பொதுமக்களிடம் உதவி கேட்டுப் பணம் வசூல் செய்து வரும் அவர்களுக்கு இதுவரை ரூ.13.3 கோடி கிடைத்திருக்கிறது. இன்னும் 2.7 கோடி தேவைப்படுகிறது எனப் பரிதவிப்புடன் தெரிவிக்கின்றனர். `பாரதியின் உயிரைக் காக்க உதவுங்க' என்று அவர்கள் பாசப் போராட்டம் நடத்தி வருவது மனதை உருக்கும் விதமாக உள்ளது.

பாரதியுடன் பெற்றோர்
பாரதியுடன் பெற்றோர்

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை சிராஜ்பூர் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஸ் (32). ரெப்கோ வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி எழிலரசி (32), ரெப்கோ வங்கியில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர்களது ஒரே செல்ல மகள் பாரதி. குழந்தைக்கு 6-ம் தேதியுடன் இரண்டு வயது நிறைவடைகிறது. ஓட்டமும் நடையுமாகத் துறுதுறுவென இருக்க வேண்டிய இந்த வயதில் பாரதி தரையில் தவழ்ந்துகொண்டிருக்கிறார். முதுகுத் தண்டுவட தசைநார் சிதைவு (Spinal muscular atrophy - SMA) என்ற அரிய வகை நோயால் பாரதி பாதிக்கப்பட்டிருப்பதே, குழந்தை எழுந்து நிற்க முடியாத இந்த நிலைக்குக் காரணம்.

ஒரே ஒரு ஊசி போட்டால் பாரதி உடலில் இருக்கும் பிரச்னை சரியாகிடும், மெல்ல மெல்ல எல்லா குழந்தைகளைப் போல் மாறிடுவாள். ஆனால், அந்த ஊசியின் விலை ரூ.16 கோடி. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பாரதியின் பெற்றோரான ஜெகதீஸ், எழிலரசி தம்பதி அவ்வளவு பெரிய தொகைக்கு வழி தெரியாது துவண்டனர். கண் முன்னே மகள் படும் துயரத்தைத் தாங்க முடியாமல் தவித்தனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மித்ரா என்ற சிறுமி இதே வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததும், அவரின் பெற்றோர் பொதுமக்கள் மூலம் ரூ.16 கோடி நிதி திரட்டி குறிப்பிட்ட அந்த ஊசியை மித்ராவுக்குச் செலுத்தியதையும் அறிந்தனர். மித்ரா குணமான செய்தி பாரதியின் பெற்றோருக்குப் புது நம்பிக்கை தந்தது.

பணம் வசூல் செய்து கொடுத்த 
திருநங்கைகள்
பணம் வசூல் செய்து கொடுத்த திருநங்கைகள்
`3 லட்சம் நல் உள்ளங்களால் ₹16 கோடி கிடைச்சிருச்சு; இனி அரசு இதை மட்டும் செய்யணும்!' - மித்ரா தந்தை

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதியிலிருந்து, `பொதுமக்கள் ஒவ்வொருவரும் ரூ.100 கொடுத்தால்கூட பாரதி உயிர் காக்கப்படும்' எனக் கூறி பொதுமக்களிடம் நிதி திரட்டத் தொடங்கினர். பாரதிக்காகப் பலரும் களத்தில் இறங்கியது அவர்களை நெகிழ வைத்தது. இதுகுறித்து, ` `மித்ரா போலவே பாரதியும் காப்பாற்றப்படுவாரா?' - மகள் உயிரைக் காக்க உதவியை நாடும் பெற்றோர்' என்ற தலைப்பில் விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், 80 நாளில் 13.3 கோடி ரூபாய் கிடைத்துள்ளது பாரதியின் பெற்றோருக்கு. நவம்பர் 20-ம் தேதிக்குள் ஊசி போட வேண்டிய நிலையில், இன்னும் 2.7 கோடி வசூல் ஆக வேண்டியிருக்கிறது. பாரதியின் பெற்றோர் கிட்டத்தட்ட தங்கள் போராட்ட முயற்சியின் இறுதி நிலையை எட்டியிருக்கின்றனர். தங்கள் மகள் காப்பாற்றப்படுவாள் என்கிற நம்பிக்கையில், தவிப்புடன் காத்திருக்கின்றனர். இதுவரை பாரதிக்காக உதவி செய்தவர்களை எண்ணி நெகிழ்ந்து வருவதுடன், `இன்னும் மிச்ச பணத்துக்கும் மக்கள் உதவுவாங்கனு நம்பிக்கை இருக்கு' என்று மனித நேயத்தின் மீது நம்பிக்கை வைத்துப் பிரார்த்தனையுடன் ஒவ்வொரு நாளையும் சந்தித்து வருகின்றனர்.

நிதி திரட்டும் முகாம்கள்
நிதி திரட்டும் முகாம்கள்

பாரதியின் அம்மா எழிலரசியிடம் பேசினோம். ``எந்தப் பெற்றோருக்கும் இப்படி ஒரு துயரம் வரக்கூடாது. எங்க பாப்பா பாரதி முதுகுத் தண்டுவட தசை நார் சிதைவு என்கிற, மரபணு குறைபாட்டால் ஏற்படுற அரிய வகை நோயினால பாதிக்கப்பட்டிருக்கிறானு தெரிஞ்ச நாள்ல இருந்து பாதி உசுரோடதான் இருக்கோம். அவளால இன்னும் எழுந்த நடக்க முடியலையே, தவழ்ந்துகிட்டே இருக்காளேனு அழுத எங்ககிட்ட, அவ அபாயகட்டமான இரண்டாம் வகையில இருப்பதாவும் டாக்டர்கள் சொன்னப்போ உடைஞ்சே போயிட்டோம்.

இந்த நோயை, ஜோல்கென்ஸ்மோ (ZOLGENSMA) என்ற ஊசி மருந்தை ஒருமுறை செலுத்தினா குணப்படுத்த முடியும்னு டாக்டர்கள் சொல்லித் தேற்றினப்போ, மனசுக்கு நம்பிக்கை வந்தது. ஆனா, அதோட விலை ரூ.16 கோடி, அதை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யணும்னு டாக்டர்கள் சொல்ல, எங்க குழந்தையைக் காப்பாற்றிடலாம் என்ற கனவு கரையத் தொடங்கிடுச்சு. அப்போதான், இதே நோயால பாதிக்கப்பட்ட மித்ராவின் உயிரை பொதுமக்கள் உதவி செய்து காப்பாற்றின செய்தியை அறிந்தோம். அது, என்ன ஆனாலும் சரி கடைசிவரை போராடிப் பார்த்துடலாம்ங்கிற தெம்பைக் கொடுத்தது.

பாரதிக்காக கேட்கப்பட்ட உதவி
பாரதிக்காக கேட்கப்பட்ட உதவி

அடுத்த நாளே, `பாரதியின் உயிரைக் காப்பாற்றுங்கள்'னு பொதுமக்கள்கிட்ட உதவி கேட்க ஆரம்பிச்சோம். ஒவ்வொருத்தரும் 100 ரூபாய் கொடுத்தாலே போதும், 16 கோடி கிடைச்சிடும்னு கைக்கூப்பினோம். எங்க பிள்ளைக்காக முகம் தெரியாத பலர் உதவி செஞ்சாங்க. சினிமா நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள்னு பலர்கிட்ட உதவி கேட்டோம். பிரபலங்கள்கிட்ட, அவங்க பாரதிக்காக உதவி கேட்டுப் பேசும் வீடியோ ரெக்வஸ்ட் பண்ணி வாங்கி சமூக வலைதளங்கள்ல பதிவிட்டோம். நடிகர் விஜய் சேதுபதி, `குழந்தையைக் காப்பாத்திடலாம், கவலைப்படாதீங்க'னு நம்பிக்கை கொடுத்து 20 லட்சம் ரூபாய் கொடுத்து நெகிழ வைத்தார்'' என்றவர், ஒவ்வொரு நாளும் பாரதி சிகிச்சைக்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.

``தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் தெருமுனைப் பிரசாரக் கூட்டங்கள் நடத்திப் பணம் வசூல் செய்தோம். திருநங்கைகள், பாரதிக்காக உண்டியல் ஏந்தி வசூல் செய்து கொடுத்தாங்க. பள்ளி, கல்லூரி நிர்வாகம், மாணவ, மாணவியர்னு பலர் உதவிக்கரம் நீட்ட, பணம் வசூலாவது வேகமெடுத்தது. முகம் தெரியாத பலர் கொடுத்த ரூ.100, கோடிகளா மாறியிருக்கு. எங்க மக உயிரைக் காக்க பலர் ரெண்டு மாசத்துக்கும் மேல் களத்துல கஷ்டப்பட்டுக்கிட்டு வர்றதை நினைக்கும்போதே, இத்தனை பேரோட அன்பு கிடைச்சிருக்குற பாரதி கொடுத்துவெச்சவன்னு நினைச்சுக் கலங்கிப்போறோம்.

குழந்தை பாரதி
குழந்தை பாரதி

இந்நிலையில, இப்போ வரை 13 கோடியே 30 லட்சம் கிடைச்சிருக்கு. இன்னும் 2 கோடியே 70 லட்சம் தேவைப்படுது. வரும் 6-ம் தேதி பாரதிக்கு ரெண்டாவது பிறந்த நாள். இரண்டு வயசுக்குள்ள குறிப்பிட்ட அந்த ஊசியைப் போடணும், 20 நாள் கூடுதலானாலும் பரவாயில்ல, ஆனா ஊசி போட்டா மட்டுமே பாரதி உயிர் பிழைப்பானு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க. எங்க உசுரு, எங்க பாப்பா உசுருனு மூணு உசுரையும் கையில பிடிச்சுட்டுக் காத்திருக்கோம். மிச்சம் இருக்கும் பணமும் கிடைச்சுட்டா, உதவுன உள்ளங்களை எல்லாம் தினம் தினம் நினைச்சுக் கும்பிடுவோம். ஊசியை வரவைக்கிறதுக்கான பார்மாலிட்டிகளுக்கு 15 நாள்கள் ஆகும்ங்கிறது பதைபதைப்பை அதிகப்படுத்துது.

பாரதிக்கு உதவி செய்வதற்கான விவரங்கள்
பாரதிக்கு உதவி செய்வதற்கான விவரங்கள்

ஒவ்வொரு நாளும், பாரதியை எப்படியும் காப்பாத்திடலாம்னு எங்களுக்கு நாங்களே சொல்லிட்டு இருக்கோம். இந்தப் போராட்டத்தோட இறுதிக்கட்டத்துல, உங்க எல்லாரையும்தான் நம்பி, உங்க எல்லார்கிட்டயும் கைக்கூப்பி நிக்கிறோம். எங்க மகளைக் காப்பாத்துங்க'' - கண்கள் கலங்கச் சொல்கிறார் பாரதியின் அம்மா எழிலரசி. நெஞ்சுக்குழி அடைக்க, குழந்தையை அணைத்துக்கொள்கிறார் அப்பா ஜெகதீஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு