Published:Updated:

கோவை: துணைவேந்தர் அறையில் பா.ஜ.க-வில் இணைந்த பதிவாளர்; பாரதியார் பல்கலைக்கழக புதிய சர்ச்சை!

துணைவேந்தர் அறையில்  பா.ஜ.க உறுப்பினர் அட்டை நிகழ்வு
துணைவேந்தர் அறையில் பா.ஜ.க உறுப்பினர் அட்டை நிகழ்வு

பாரதியார் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த முருகன், துணைவேந்தர் அறையில் பா.ஜ.க-வில் இணைந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக முருகன் என்பவர் பதவி வகித்து வந்தார். இவர் விலங்கியல் துறை தலைவராகவும் இருந்தார். கடந்த 30-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்ற முருகன், அன்றைய தினமே பா.ஜ.க-வில் இணைந்ததாகத் தகவல் வெளியானது. பா.ஜ.க மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் ப்ரீத்தி லட்சுமி மற்றும் மாநில ஊடகப் பிரிவு செயலாளர் சபரி கிரீஸ் ஆகியோர் முன்னிலையில் அவர் இணைந்திருந்தார்.

ப்ரீத்தி லட்சுமி பதிவு
ப்ரீத்தி லட்சுமி பதிவு
அ.தி.மு.க கூட்டணியிலிருந்து  விலகுகிறதா பா.ஜ.க?! - பின்னணி என்ன?

அந்த இரண்டு பேரும், முருகனுக்கு பா.ஜ.க உறுப்பினர் அட்டை கொடுக்கும் படமும் வெளியானது. இதுகுறித்து ப்ரீத்தி லட்சுமி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், துணைவேந்தர் அறைக்கான காத்திருப்பு அறையில் வைத்து முருகன் பா.ஜ.க-வில் இணைந்ததாக புகார் எழுந்ததுள்ளது. இந்த சர்ச்சை எழுந்தவுடன் ப்ரீத்தி லட்சுமி அந்த பதிவை நீக்கிவிட்டார். "ஓய்வு பெற்ற அதேநாளில் அவர் அரசியல் கட்சியில் இணைந்தது மிகவும் தவறு. அதுவும் துணைவேந்தர் அறையில் வைத்து அரசியல் நிகழ்ச்சியை நடத்தியிருப்பது சட்டவிரோதம்.

பாரதியார் பல்கலைக்கழகம்
பாரதியார் பல்கலைக்கழகம்

உயர்கல்வித்துறையில் பா.ஜ.க-வின் ஆதிக்கம் உள்ளது என்ற கருத்தை உண்மையாக்கும் விதமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. முருகன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜிடம் விளக்கம் கேட்டபோது, “30-ம் தேதியே அமைச்சர் ஆய்வு கூட்டத்துக்காக நான் சென்னை சென்றுவிட்டேன். பா.ஜ.க-வினர் மரியாதை நிமித்தமாக என்னை சந்திக்க வந்துள்ளனர். நான் இல்லை என தெரிந்தவுடன் பதிவாளரை சந்திக்கக் கேட்டுள்ளனர்.

காளிராஜ்
காளிராஜ்

அதன்பிறகு அவர்களாகவே முருகனை சந்தித்து பேசியுள்ளனர். அது துணைவேந்தரை சந்திப்பதற்காக இருக்கும் காத்திருப்பு அறைதான். கையில் இருந்த கார்டில் ஒரு நம்பர் எழுதி கொடுத்து போட்டோ கொடுத்துவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நான் முருகனிடம் கேட்டபோது, "நான் கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை்த் திரும்ப கொடுத்துவிட்டேன். கட்சியில் இருந்தும் விலகிவிட்டேன்" என சொல்கிறார். அவர் எப்போது கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்தார் எனத் தெரியவில்லை.

பாரதியார் பல்கலைக்கழகம்
பாரதியார் பல்கலைக்கழகம்

இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் தெரியவில்லை. எதேர்ச்சையாக பேசிக் கொண்டிருக்கும்போது நொடி பொழுதில் இது நடந்துவிட்டது. எதிர்காலத்தில் இது போல நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

இதுகுறித்து முருகன் கூறுகையில், “இதை நான் மறுக்கவில்லை. நானாக தான் பா.ஜ .க-வில் சேர விருப்பம் தெரிவித்தேன். ஒரு விபத்து போல துணைவேந்தர் காத்திருப்பு அறையில் வைத்து புகைப்படமும் எடுத்துவிட்டனர். ஆனால், நான் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு கல்விப் பணியில் இருக்க விரும்புகிறேன்.

முருகன்
முருகன்

இதனால், அடுத்த நாளே அந்த உறுப்பினர் அட்டையை திரும்ப கொடுத்துவிட்டேன். பா.ஜ .க தலைமை அலுவலகத்துக்கு மெயிலும் அனுப்பிவிட்டேன்" என்றார்.

பா.ஜ.க ஊடகப்பிரிவு மாநில செயலாளர் சபரி கிரீஸ், “அவராகத்தான் பா.ஜ.க-வில் சேர விருப்பம் தெரிவித்தார். அதனால் மிஸ்டுகால் கொடுக்க கூறினோம். அவர் மிஸ்டுகால் கொடுத்த பிறகு உறுப்பினர் அட்டை கொடுத்தோம். இப்போது அவரே குரூப்பில் போட்டு பிரச்னையாகிவிட்டது. அதனால் கார்டு வேண்டாம் என கொடுத்துவிட்டார்.

சபரி கிரீஸ் முருகன் ப்ரீத்தி லட்சுமி
சபரி கிரீஸ் முருகன் ப்ரீத்தி லட்சுமி

இதுதொடர்பாக அவர் ஒரு கடிதமும் கேட்கிறார். கல்வி பணியில் தொடர வேண்டும் என்பதற்காக கட்சியில் தொடரவில்லை என்கிறார். அவரது வீட்டில் வைத்துதான் உறுப்பினர் அட்டை கொடுத்தோம். பல்கலைக்கழகத்தை போல வீட்டிலும் ஒரு செட்அப் வைத்துள்ளார்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு