Published:Updated:

`தொழிலாளர்கள் மோதல்; தீவைத்து எரிக்கப்பட்ட டூ வீலர்கள்!' - கலவரபூமியான காட்டுப்பள்ளி

தொழிலாளர்கள் மோதல்
தொழிலாளர்கள் மோதல்

திருவள்ளூர் அருகே வடமாநிலத் தொழிலாளர்களுக்கும், இறால் பண்ணை ஊழியர்களுக்குமிடையே நடந்த மோதலில் பத்துக்கும் அதிகமான டூ வீலர்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகிலுள்ள காட்டுப்பள்ளிப் பகுதியில் கப்பல் கட்டுமான நிறுவனம் செயல்பட்டுவருகிறது. அங்கு, 3,000-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் ஒப்பந்த ஊழியர்களாகப் பணியாற்றிவருகின்றனர். காட்டுப்பள்ளிப் பகுதியிலுள்ள இரண்டு தங்கும் குடியிருப்பு முகாம்களில் இந்த ஊழியர்கள் தங்கி, பணிபுரிந்துவருகின்றனர் .

குடியிருப்பு முகாம்
குடியிருப்பு முகாம்

இந்தநிலையில், இங்கு பணிபுரியும் சில வடமாநிலத் தொழிலாளர்கள் நேற்று இரவு இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு, அந்தப் பகுதியில் இயங்கிவரும் ஓர் இறால் பண்ணை அருகில் சென்றதாகக் கூறப்படுகிறது. இதைக்கண்ட இறால் பண்ணை ஊழியர்களுக்கும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் முற்றியநிலையில் இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வடமாநிலத் தொழிலாளர்களும் கற்களைக் கொண்டு இறால் பண்ணை ஊழியர்களைத் தாக்கியதாகத் தெரிகிறது.

கன்னியாகுமரி: கஞ்சா விவகாரத்தில் மோதல்! - நண்பரைக் கொன்று குளத்தில் வீசிய 2 பேர்

அதன் பின்னர் வடமாநிலத் தொழிலாலாளர்கள், தங்கள் முகாம்களுக்குத் திரும்பியிருக்கிறார்கள். அவர்களைத் தேடிச் சென்ற இறால் பண்ணை ஊழியர்கள், குடியிருப்புப் பகுதிகளை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். இதனால், ஆத்திரமடைந்த வடமாநிலத் தொழிலாளர்கள் கூட்டமாக இறால் பண்ணைக்குள் புகுந்து மூன்று ஊழியர்களைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அதோடு, அங்கிருந்த பத்துக்கும் அதிகமான டூ வீலர்களும், ஒரு கண்டெய்னரும் தீவைத்து எரிக்கப்பட்டன.

எரிக்கப்பட்ட வாகனங்கள்
எரிக்கப்பட்ட வாகனங்கள்

நிலைமை மோசமடையவே வடமாநிலத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த, அங்கிருந்த பாதுகாப்பு அலுவலகர் உள்ளே சென்றிருக்கிறார். அவரையும், பேச்சுவார்த்தைக்குச் சென்ற காவலர்களையும் அந்தத் தொழிலாளர்கள் தாக்கியிருக்கிறார்கள். இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் நிலவவே காவலர்கள் குவிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இறால் பண்ணை ஊழியர்கள் மூன்று பேரைக் காவல்துறையினர் கைதுசெய்திருக்கிறார்கள். அதோடு, அரசுத் தரப்பு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் வடமாநிலத் தொழிலாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இந்த மோதல் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு