Published:Updated:

`பயோமெட்ரிக் முறை மூலம் மட்டுமே ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க முடியும்!'- உணவு ஆணைய தலைவர்

 உணவு ஆணையத் தலைவர் வாசுகி
உணவு ஆணையத் தலைவர் வாசுகி

``ஏழை, எளிய மக்கள் யாருக்கும் உணவுப் பொருள்கள் கிடைக்கவில்லை என்ற நிலை இருக்கக்கூடாது என்பதை நோக்கி அரசு தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது." - உணவு ஆணைய தலைவர்

நீலகிரி மாவட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி வழங்குவது குறித்த கூட்டுறவு மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் வாசுகி தலைமையில் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நேற்று நடைபெற்றது.

ஆய்வு கூட்டம்
ஆய்வு கூட்டம்

இந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மாநில உணவு ஆணைத் தலைவர் வாசுகி, ``தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அனைத்து மக்களுக்கும் உணவுப் பொருள்கள் சென்று சேர வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் மட்டுமன்றி நடுத்தர மக்களுக்கும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஏழை, எளிய மக்கள் யாருக்கும் உணவுப் பொருள்கள் கிடைக்கவில்லை என்ற நிலை இருக்கக்கூடாது என்பதை நோக்கி அரசு தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்துவரும் பழங்குடியின மக்களுக்குத் தங்கு தடையின்றி உணவுப் பொருள்கள் கிடைத்து வருகிறது.

அதேபோல் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், திருநர் சமூகத்தினர் என எவரும் விடுபடாமல் முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் ஆதார் அட்டை இல்லாத சில பழங்குடியின மக்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்படாத சூழ்நிலை இருந்தது. தற்போது ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அதன் மூலம் குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 உணவு ஆணைய தலைவர் வாசுகி
உணவு ஆணைய தலைவர் வாசுகி

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே அரிசிக் கடத்தலை தடுக்க முடியும். இந்த முறையில் உள்ள ஒரு சில குறைபாடுகள் விரைவில் களையப்படும். குடும்பத் தலைவரே வந்து உணவுப் பொருள்கள் வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. குடும்பத்தில் யாரேனும் ஒருவர் வந்து அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுச் செல்லலாம். வயதானவர்கள், முதியோர்கள், நடக்க இயலாதவர்கள் போன்றவர்கள் குடும்பத்தில் உள்ள மாற்று நபர்கள் மூலம் அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு