Published:Updated:

`திமுக ஆட்சியில் அணில்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா?’ செந்தில் பாலாஜியை விமர்சிக்கும் அண்ணாமலை

பேட்டியளிக்கும் அண்ணாமலை
பேட்டியளிக்கும் அண்ணாமலை

`அணில்களால் மின்தடை என்று கூறாமல், அறிவியல்பூர்வமாக அமைச்சர் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அடிக்கடி ஏற்படும் மின்தடை தமிழகத்துக்கு முன்னோட்டம். இன்னும் ஐந்து ஆண்டுகள் எப்படி இருக்குமோ?’ - அண்ணாமலை

கரூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பா.ஜ.க சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி, கரூர் மாவட்டத் தலைவர் சிவசாமி தலைமையில், கரூர் வெங்கமேட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

பேட்டியளிக்கும் அண்ணாமலை
பேட்டியளிக்கும் அண்ணாமலை

``தமிழகத்தில் தற்போது பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியுள்ளது. தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் `பெட்ரோல் விலையை 5 ரூபாய் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துவிட்டு, தற்போது ஏன் குறைக்கவில்லை என்று தமிழக நிதியமைச்சரிடம் கேட்டால், `எப்போது குறைப்போம் என நேரம் தெரிவிக்கவில்லை’ எனக் கூறுவது ஏற்புடையதாக இல்லை. பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசு வருவாயை 37 ரூபாய் முதல் 39 ரூபாய் வரை ஒவ்வொரு மாநிலத்துக்கும் உயர்த்தியுள்ளது மத்திய அரசு. விலை உயர்வைக் கணக்கில்கொண்டு மற்ற மாநிலங்கள் விலையைக் குறைத்துள்ளபோது, ஏன் தமிழக அரசு வரியைக் குறைக்க முன்வரவில்லை? மக்களுடைய எண்ணங்களை தமிழக அரசு அவமதித்துவருகிறது. தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்துவருவதால், மத்திய அரசு புதிய இடங்களில் பெட்ரோல் இறக்குமதி மேற்கொள்ள, ஒப்பந்தங்களை மேற்கொள்ளப் பரிசீலித்துவருகிறது. மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையை அரசியல் ஆக்காமல் மக்களின் சிரமங்களை உணர்ந்து வரியைக் குறைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கும், பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கும் வித்தியாசம் உண்டு. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கச்சா எண்ணெய் விலையை ஈடுகட்ட மன்மோகன் சிங் அவர்களால் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் ஆயில் மார்க்கெட்டிங் பாண்ட் முறையில் பத்திரங்கள் வெளியிடப்பட்டு நிதி திரட்டப்பட்டது. அப்போது திரட்டப்பட்ட பத்திரங்களுக்கான அசல் மற்றும் வட்டித் தொகையை மத்திய அரசு இன்றைய நாள் வரை செலுத்திவருகிறது. தற்போதுகூட அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 1.1 கோடி ரூபாய் மத்திய அரசு மக்கள் வரிப்பணத்தை செலுத்துகிறது. எனவே, மத்திய அரசு வரியைக் குறைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி, ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் சரி கட்சி நிலைப்பாட்டில் கொள்கையில் உறுதியாக உள்ளது.

பேட்டியளிக்கும் அண்ணாமலை
பேட்டியளிக்கும் அண்ணாமலை

நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கை வேண்டும்; இந்தி மொழியைக் கட்டாயமாக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதுபோல மாற்றி மாற்றிப் பேசுவது பா.ஜ.க-வுக்குப் பழக்கமில்லை. நீட் தேர்வு தமிழகத்தில் வேண்டுமென்பதில் தெளிவாக இருக்கிறோம். ஏழைக் குழந்தைகளுக்கு நீட் தேர்வு ஒரு வரப்பிரசாதம். குறிப்பாக, தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க-வின் ஆட்சி எப்படி உள்ளது எனக் கேட்கிறீர்கள். கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க ஆட்சியில் மின்சாரம் மிகையாக இருந்தது. ஆனால், தற்போது தி.மு.க ஆட்சி அமைந்த மூன்று மாதங்களில் அணில்கள் மின்கம்பியில் சிக்குவதால், மின்தடை ஏற்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுவது, தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அணில்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுவிட்டதா... திடீர் மின்தடையால் பொதுமக்கள் மட்டுமல்லாமல், தொழில்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. எனவே, அமைச்சர் இதிலுள்ள உண்மையை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். அணில்களால் மின்தடை என்று கூறாமல், அறிவியல்பூர்வமாக அமைச்சர் ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஆட்சிப் பொறுப்பேற்ற குறைந்த நாள்களில் அடிக்கடி ஏற்படும் மின்தடை தமிழகத்துக்கு முன்னோட்டம். இன்னும் ஐந்து ஆண்டுகள் எப்படி இருக்குமோ?" என்று கேள்வி எழுப்பினார்.

அடுத்த கட்டுரைக்கு