Published:Updated:

காங்கேயம், கிர், தார்பார்க்கர், சாஹிவால், காங்ரேஜ்.. மாடுகள் பலவிதம் ஒவ்வொன்றும்ஒருவிதம்!

நாட்டு மாடுகளுடன் ஜி.கே.நாகராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
நாட்டு மாடுகளுடன் ஜி.கே.நாகராஜ்

பா.ஜ.க விவசாய அணி தலைவரின் அனுபவம்

வீன விவசாயத்தில் டிராக்டர் பயன்பாடு அதிகமாகியிருக்கிறது. ஆனால், மண் வளத்துக்கு நாட்டு மாடுகள்தான் சிறந்தவை என்கிறார்கள் முன்னோடி விவசாயிகள். ‘மண்ணின் வளத்தைப் பெருக்க 30 ஏக்கர் நிலத்துக்கு ஒரே ஒரு நாட்டு மாடு போதும்’ என்கிறார் இயற்கை வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கர். ‘இயற்கை விவசாயத்துக்குக் கால்நடைகள் அவசியம். டிராக்டர் சாணி போடாது. மாடுதான் சாணி போடும். அது மண்ணுக்கு உரமாகிடும்’ என்று இன்னும் எளிமையாகச் சொல்லியிருக்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சியினரும் நாட்டு மாடு வளர்ப்பில் அதிக ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் பா.ஜ.க விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் ஏராளமான நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறார். கோயம்புத்தூர் விமான நிலையம் அருகில் உள்ள அவரது தோட்டத்தில் சந்தித்தோம்.

தீவனப்புல் வெட்டும் பணியில்
தீவனப்புல் வெட்டும் பணியில்

மாடுகளுக்குப் புல் வெட்டிக்கொண்டே பேசத் தொடங்கினார் ஜி.கே.நாகராஜ். “ஈரோடு மாவட்டம் இரட்டை கரடு எங்க பூர்வீகம். அப்பா, அம்மா எல்லாரும் விவசாயக் குடும்பம். ஊராட்சிக் கோட்டை பக்கத்துல அப்பா 6 ஏக்கர்ல விவசாயம் பண்ணிட்டு இருந்தார். எனக்கு 10 வயசு இருக்கறப்ப, திடீர்னு ஒருநாள் அரசு அதிகாரிங்க வந்தாங்க. ‘இந்த இடத்த செக்டேம் (தடுப்பணை) கட்ட எடுத்துக் கறோம்’னு சொல்லி கையகப்படுத்திட்டாங்க. அப்ப அந்த இடத்தோட மதிப்பு சுமார் 15,000 ரூபாய் இருக்கும். ஆனா அவங்க வெறும் 1,000 ரூபாய்தான் கொடுத்தாங்க. அதனால, விவசாயத்தை விட்டுட்டு பவானி நகரப் பகுதிக்கு குடிபெயர்ந்துட்டோம்.

குஜராத் மாநிலம், அகமதாபாத்ல பொறியியல் படிச்சேன். அத முடிச்சுட்டு அங்கேயே தொழில் ஆரம்பிச்சிருந்தேன். விவசாயத்தை விட்டு விலகினாலும், மீண்டும் அதுக்குள்ள போகணும்ங்கற எண்ணம் மனசுல ஓடிகிட்டே இருந்துச்சு. நாங்க வெவ்வேறு தொழில்ல இருந்தாலும், விவசாயம்தான் எங்க குலத்தொழில். அதனால கோயம்புத்தூர்ல எங்க வீட்டுக்கு பக்கத்துலயே 4 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் பண்ணிகிட்டு இருக்கேன். முருங்கை, பப்பாளி, வாழை, தென்னை, நெல்லி, மாமரம், அகத்திக்கீரை, சூப்பர் நேப்பியர், காய்கறிகள் போட்டிருக்கோம்.

நாட்டு மாடுகளுடன் ஜி.கே.நாகராஜ்
நாட்டு மாடுகளுடன் ஜி.கே.நாகராஜ்

நான் நம்மாழ்வாரை அதிகம் படிச்சுருக்கேன். சுபாஷ் பாலேக்கரோட ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புகள்ல கலந்துருக்கேன். அதனால, முழுக்க முழுக்க இயற்கை விவசாயம்தான் பண்றேன். முக்கியமா, சின்ன வயசுல இருந்தே எனக்கு நாட்டு மாடுகள் மேல ஈடுபாடு அதிகம். இயற்கை விவசாயத்துக்கும், நாட்டு மாடுகளுக்கும் பெரிய தொடர்பு இருக்கு. நாட்டு மாடு களோட சிறுநீர், சாணம் எல்லாமே மண்ணோட நுண்ணுயிர்களை ஊக்குவிக்கற தன்மையைக் கொண்டது. அதனாலதான் பஞ்சகவ்யா மாதிரியான எல்லா இயற்கை உரம் தயாரிக்கறப்பவும் மாட்டுச் சிறுநீர், சாணம் பயன்படுத்தறாங்க.

விவசாயத்தைக் கைவிட்ட இடைப்பட்ட காலத்துலகூட, எங்க வீட்டுல மாடுகள் இருந்துச்சு. இந்த 4 ஏக்கர்ல, ஒரு ஏக்கர் மாடுக மேய்க்க ரெண்டு பகுதியா பிரிச்சுருக்கோம். வறட்சிக் காலத்துல புல் வறண்டு போகாம இருக்க, குழாய் மூலம் தண்ணி கொண்டு வந்து தெளிச்சுகிட்டே இருப்போம். காலைல கன்னுக்குட்டிங்களை எல்லாம் கொண்டு வந்து இங்க விட்ருவோம். மாடுகளை எப்பவும் மேய்ச்சலுக்கு விட்டுகிட்டே இருக்கணும். எந்நேரமும் கட்டிப் போட்டிருந்தா, அதோட குணாதிசயமே மாறிடும்” என்றவர், அவரிடம் உள்ள நாட்டு மாடுகள் குறித்த தகவலை பகிர்ந்துகொண்டார்.

காங்கேயம்
காங்கேயம்

“என்னோட சின்ன வயசுல மாடு, எருமை, ஆடு எல்லாம் வளர்த்துக்கிட்டு இருந்தோம். இப்ப 20 நாட்டு மாடுகள் இருக்கு. காங்கேயம், கிர், தார்பார்க்கர், சாஹிவால், காங்கிரேஜ் மாடுங்க இருக்கு. நம்ம காங்கேயம் மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போடுவோம். ஆனா, கிர் மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போட மாட்டாங்க. எப்பவும் மேய்ஞ்சுகிட்டேதான் இருக்கும். கன்னு போடறப்பதான் கட்டிப் போடுவாங்க.

தினமும் காலைல 6 மணிக்கு தோட்டத் துக்கு வந்துடுவேன். தண்ணி பாய்ச்சி, மாட்டுக்கு புல் வெட்டுவேன். தோட்டத்துல தேவையில்லாத களை எடுப்பேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், மாடுகளைக் குளிப் பாட்டி ‘கோ பூஜை’ பண்ணிடுவோம். வாரத்துக்கு ஒரு நாள் மாடுகளுக்கு அகத்திக் கீரை கொடுப்போம். அதுக்காகவே 5 சென்ட்ல அகத்திக்கீரை போட்டிருக்கோம். நிலத்துல உள்ள மூலிகை செடிகளையும் மாடுங்க மேயும். இதனால, மாடுங்க ஆரோக்கியமா இருக்கு.

கிர்
கிர்மாடுகளுக்குத் தேங்காய்ப் புண்ணாக்கு, கோதுமை தவிடு, கடலைப் புண்ணாக்கு, சூப்பர் நேப்பியர், வைக்கோல் உள்ளிட்ட 9 வகையான தீவனங்களைக் கொடுக்குறோம். காலையில சூப்பர் நேப்பியர் கொடுப்போம். அதை அப்படியே போட மாட்டோம். வெட்டிகிட்டு வந்து, மெசின்ல கொடுத்து பொடிப் பொடியாக்கிதான் போடுவோம். 9 மணிக்கு தண்ணி காட்டி, தீவனம் போடுவோம். பிறகு, 2 மணிக்கும் இதே மாதிரி செய்வோம். இரவு வைக்கோல் கொடுப்போம். இரவுல வைக்கோல் கொடுத்தா, காலையில பால் நல்ல அடர்த்தியா கிடைக்கும்’’ என்றவர் மாடுகளின் குணங்களை விவரித்தார்.

‘‘கிர் மாடு ரொம்ப மூர்க்கமானது. அதே நேரத்துல அறிவான மாடு. தன்னோட கன்னுகுட்டியை அக்கறை எடுத்து பார்த்துக்கும். அதிக பால் கொடுக்கறதும் கிர்தான். ஆளை பார்த்தாலே, துள்ளிக் குதிச்சு ஓடிவரும். காங்கேயம் மாடு கன்னுக் குட்டியை ரொம்ப அக்கறையா பார்த்துக்கும். பயங்கரச் சுறுசுறுப்பா இருக்கும். ரொம்ப உணர்ச்சிமிக்க மாடு. தொட்டாலே சிலிர்க்கும். மாடுகளைச் சில நேரம் வெயில்ல கட்டுவோம். அப்ப பாலோட சுவை அருமையா இருக்கும்.

சாஹிவால்
சாஹிவால்தார்பார்க்கர் மாடு ரொம்ப சாது. ரொம்பப் பாசமாவும் இருக்கும். ஒருமுறை நான் 10 நாளுக்குத் தோட்டத்துக்கு வர முடியல. தார் பார்க்கர் ரொம்ப சோர்ந்துருச்சு. அப்பறம் நான் வந்து தடவி கொடுக்கவே இயல்பு நிலைக்கு வந்துச்சு. இதோட பால் நல்ல சுவையா இருக்கும். சாஹிவால் மாடு, நம்ம காங்கேயம் மாதிரிதான். பயங்கர வேகமா இருக்கும். பால் கம்மியா இருந்தாலும், அடர்த்தியா இருக்கும். நாட்டு மாடுகளோட பால்லயே மாசம் சராசரியா 1 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்குது. அதே மாதிரி மோர், தயிர், வெண்ணெய், நெய், பனீர் எடுத்துக் கொடுக்குறோம்.

நாட்டு மாடுகள் ரொம்பப் பாசமா பழகும். மாடுங்க சிறுநீரைச் சேகரிக்க ஒரு குட்டை உருவாக்கிருக்கோம். கொட்டகையில இருந்து குழாய் மூலம் குட்டைக்கு வந்துடும். அதுல தண்ணி கலந்து, மோட்டர் மூலமா எங்க பூமி முழுசும் பாய்ச்சுவோம்.

நாட்டு மாடுகளுக்கு நோய் தாக்குதல் பெருசா இருக்காது. கோமாரி நோய் மட்டும் வரலாம். கால்நடைத்துறைல இருந்து வந்து தடுப்பூசி போட்டுட்டு போய்டுவாங்க. நாங்க இதை வருமான நோக்கத்துல வளர்க்கல. யாராவது ஆசைப்பட்டுக் கேட்டா, எங்க கன்னுக்குட்டிகள இலவசமா கொடுத்துக்கிட்டு இருக்கோம். ஆனா, பாலுக்குக் கிடைக்கற விலை ரொம்பவும் குறைவு. ஒரு லிட்டர் பாலுக்கு 40 ரூபாய் வரைக்கும் செலவாகும். மாட்டுக்காரங்களுக்கு லிட்டருக்கு 35 ரூபாய் தான் கிடைக்குது. பால் கறக்கறதுக்கும் ஆள் கிடைக்கறது இல்ல. அனுபவமிக்க ஆளுங்க தான் இதைச் சமாளிக்க முடியும். அவங்களால தான் பால் கறக்க முடியும். புதுசா யாராவது போனா, முட்டித் தூக்கிடும். மாடு வளர்க்கற வங்களை, ஊக்குவிக்கற விதமா அரசாங்கம் சலுகைகள் கொடுக்கணும்’’ என்றவர் நிறைவாக,

தார்பார்க்கர்
தார்பார்க்கர்


‘‘முன்னாடி, மாடுகளை நல்லா மேய்ப் பாங்க. அதுக்கு தகுந்த இடங்கள் இருந்துச்சு. இப்ப மூணு வேளையும் வெளியே இருந்து தான் வாங்கிப் போட வேண்டியதா இருக்கு. 100 நாள் வேலை திட்டத்துல விவசாயப் பணிகள் செய்யாம, குளக்கரைகள்ல இருக்கற புல்லை வெட்டி சுத்தப்படுத்தறாங்க. அது எல்லாமே மாடு மேயற இடம். இதனாலயும், மாடுங்க மேய்ச்சலுக்குத் தடையா இருக்கு. அரசாங்கம் இந்தப் பிரச்னையைச் சரி பண்ணிக் கொடுத்தா விவசாயிகளுக்கு உதவியா இருக்கும்.

நாட்டு மாடுகள் இல்லாம, இயற்கை விவசாயம் பண்ண முடியாது. நாட்டு மாடுக இருந்தாலே மண் வளம் சிறப்பா இருக்கும். ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கப்புறம் நாட்டு மாடுகள் வளர்ப்பு ஆர்வம் மக்கள் கிட்ட அதிகரிச்சுருக்கு. நாட்டு மாடு இனம் தான் மண்ணுக்கு வளம்” என்றார் உறுதியான குரலில்.

தொடர்புக்கு, ஜி.கே.நாகராஜ்

செல்போன்: 95240 38555.