Published:Updated:

எல்.முருகன்: `செருப்பு தைக்கும் குடும்பத்திலிருந்து வந்தவன் நான்!' - மத்திய அமைச்சர் கண்ணீர்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எல்.முருகன் மக்கள் ஆசி யாத்திரையை கோவை மாவட்டத்தில் தொடங்கியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், சமீபத்தில் மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்றார். இதையடுத்து, மக்கள் ஆசி யாத்திரை என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களைச் சந்திக்க முடிவு செய்தார். இந்த நிகழ்ச்சி கோவையில் இன்று தொடங்கியது. இதற்காக கோவை முழுவதும் பா.ஜ.க சார்பில் முருகனை வரவேற்று பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டன.

பா.ஜ .க பேனர்
பா.ஜ .க பேனர்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் ஜெயித்தது பா.ஜ.க அரசா, எதிர்க்கட்சிகளா?

விமான நிலைய வரவேற்பு முடிந்தவுடன் முருகன், கோனியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பிறகு யாத்திரை தொடக்க நிகழ்ச்சிக்காக காமராஜபுரம் பகுதிக்கு வந்தார்.

ஆர்.எஸ்.புரம் கிராஸ்கட் சாலை சிக்னல் முதல் புரூக் பாண்ட் சாலை வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுவிட்டது. முருகனுக்கு ஜமாப் இசை, சாடிவயல் பழங்குடிகளின் பாரம்பர்ய இசை மற்றும் சிவப்பு கம்பளத்தில் பூக்கள் தூவி பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டது.

முருகனுக்கு வரவேற்பு
முருகனுக்கு வரவேற்பு

முருகன் வருவதற்கு முன்பே தமிழ்நாடு பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், சுதாகர் ரெட்டி, ஏ.பி.முருகனாந்தம், வினோஜ் செல்வம், கே.டி.ராகவன் உள்ளிட்ட நிர்வாகிகள் வந்துவிட்டனர். முருகனுடன், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, குஷ்பு, முன்னாள் அமைச்சர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் வந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவை மாவட்டத்தில் கொரோனா மூன்றாவது அலை பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று எச்சரித்தும், பெரிய கூட்டத்தை கூட்டினர். பெரும்பாலான நிர்வாகிகள், தொண்டர்கள் தனிமனித இடைவெளி இல்லாமல் இருந்தார்கள்; முகக்கவசமும் அணியவில்லை.

அங்கிருந்த மூதாட்டிகளின் காலில் விழுந்து முருகன் ஆசி வாங்கினார். மேடையில் பேசிய எல்.முருகன், ``சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறோம். சுதந்திர வரலாற்றில் காங்கிரஸ் – தி.மு.க தொடர்ந்து கூட்டணியில் இருந்தன.

ஆனால், ஏழை அருந்ததியர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை யாரும் மத்திய அமைச்சராக்கியதில்லை. 75 ஆண்டுகளில் முதன்முறையாக, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, என்னை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராக்கினார். எந்தக் கட்சியும் செய்யாததை பா.ஜ.க செய்தது. செருப்பு தைக்கும் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை மாநிலத் தலைவராக்கியது பா.ஜ.க.

மேடை
மேடை

மக்களவை, மாநிலங்களவைகளில் உறுப்பினர் அல்லாத ஒருவரை அமைச்சராக்கி மோடி அழகு பார்த்திருக்கிறார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த 12 பேர், மலைவாழ் மக்கள் எட்டுப் பேர், ஓ.பி.சி-யில் 28 பேரை மத்திய அமைச்சர்களாகியுள்ளனர்.

இவர்களையெல்லாம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துவைக்க வேண்டும். நான் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவன். செருப்பு தைக்கும் குடும்பத்திலிருந்து வந்தவன் (கண்ணீர் மல்கத் தெரிவித்தார்). ஆனால் என்னை தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எம்.பி-க்கள் எங்களை அறிமுகம் செய்துவைக்கக் கூடாது என்று கங்ணம் கட்டித் தடை செய்தனர். சமூகநீதியைப் போற்றிக் காக்கும் காவலன் மோடிதான்.

2014-க்கு முன்பு விவசாயிகள் தற்கொலை அன்றாட நிகழ்வாக இருந்தது. 2014-க்கு பிறகு ஒரு விவசாயிகூட தற்கொலை செய்துகொள்ளவில்லை. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 ஊக்கத்தொகை அவர்களின் வங்கிக் கணக்குக்கே செலுத்தப்படுகிறது” என்று பேசினார்.

பிரதமர் மோடி - தமிழக பாஜக எம்.எல்.ஏ-க்கள் சந்திப்பில் பேசப்பட்டது என்ன?! - விளக்கிய எல்.முருகன்

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முருகன், ``தி.மு.க 100 நாள் ஆட்சியில் சொன்னதைச் செய்யவில்லை. குடும்பப் பெண்களுக்கு1,000 ரூபாய் கொடுப்பதாகச் சொன்ன அறிவிப்பை நிறைவேற்றவில்லை. கல்விக் கடன் குறித்த அறிவிப்பு இல்லை. சாத்தியம் இல்லாதவற்றைச் சொல்லி மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்கின்றனர்.

சமூகநீதியைப் போற்றுவதில் பா.ஜ.க-வுக்கு ஈடு இணை கிடையாது. நாடாளுமன்ற மாண்பை எதிர்க்கட்சிகள் குலைத்துவிட்டன.

கொங்கு நாடு வேண்டும் என்றோ, வேண்டாம் என்றோ நாங்கள் சொல்லவில்லை. மக்கள் நிலைப்பாட்டைப் பொறுத்து எங்கள் முடிவு இருக்கும். பெகாசஸ் என்று இல்லாத ஒன்றை பெரிதாக்குகின்றனர். முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் நடந்த சோதனையை அவர்கள் சட்டப்படி எதிர்கொள்வார்கள்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவது புதிதல்ல. பல கோயில்களில் இது நடைமுறையில் இருக்கிறது. நான் இதை ஏற்கெனவே பட்டியல் போட்டுக் கூறியிருக்கிறேன்” என்றார்.

``கொங்கு மண்டலத்துக்கே மீண்டும் பதவியா?” - கொந்தளித்த பன்னீர்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு