Published:Updated:

``மக்கள் உயிரை விட மைனாரிட்டி ஓட்டுப் பெரிதா?'' - முதல்வருக்கு வானதி சீனிவாசன் கேள்வி

வானதி சீனிவாசன்

``எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் உயிரைவிட மைனாரிட்டி ஓட்டு உங்களுக்குப் பெரிதாக இருக்கிறதா?" - வானதி சீனிவாசன்

``மக்கள் உயிரை விட மைனாரிட்டி ஓட்டுப் பெரிதா?'' - முதல்வருக்கு வானதி சீனிவாசன் கேள்வி

``எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் உயிரைவிட மைனாரிட்டி ஓட்டு உங்களுக்குப் பெரிதாக இருக்கிறதா?" - வானதி சீனிவாசன்

Published:Updated:
வானதி சீனிவாசன்

கோவை கார் வெடிப்புச் சம்பவம் நடந்த பகுதி அருகேயுள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலில் பாஜக சார்பில் பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அந்தக் கட்சியின் தேசிய மகளிரணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு, விளக்கேற்றி வழிபாடு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன்,

வானதி சீனிவாசன் வழிபாடு
வானதி சீனிவாசன் வழிபாடு

”சிலிண்டர் வெடித்து பயங்கரவாதத் தாக்குதல் நடந்த முயற்சி இறைவன் அருளால் தடுக்கப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான மக்களைக் கொல்லும் சதி கோயில் வாசலில் முறியடிக்கப்பட்டிருக்கிறது. சூரசம்ஹாரம் நடைபெற்றிருக்கிறது. சாதாரணமாக நடைபெறும் சம்பவங்களுக்கு, செயல்களுக்குக்கூட கருத்து செல்லும் அரசியல்வதிகள் யாரும் கோவைக்கு வரவில்லை.

கோவை மக்களுக்கு, இந்த மாதிரியான செயல்களுக்குத் துணை இருக்க மாட்டோம் என உணர்த்த வந்திருக்க வேண்டாமா... காவல்துறையைத் தனது கட்டிப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர், கோவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் இடத்தைப் பார்க்க வராதது கண்டனத்துக்குரியது. கோவையை இன்னும் பழிவாங்கும் நோக்குடன் முதல்வர் இருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. உளவுத்துறை முற்றிலும் செயலிழந்திருக்கிறது.

கோவை கார் வெடிப்பு
கோவை கார் வெடிப்பு

ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இந்த இடத்தில் வெடிக்கவைக்க முயன்றிருக்கின்றனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் முதல்வர் கௌரவம் பார்க்கக் கூடாது. சர்வதேச அளவில் இவர்களுக்குத் தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும்.

பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பிறகு கட்சித் தலைவருடன் கலந்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  முதல்வர், அமைச்சர் இருக்கும் மேடைகளிலேயே இந்த அரசாங்கம் மைனாரிட்டி போட்டிருக்கும் பிச்சை என வெளிப்படையாகப் பேசுகின்றனர். மைனாரிட்டி மக்கள் ஓட்டுக்காக மற்ற மக்கள் உயிரை பலி கொடுக்கும் முடிவுக்கு முதல்வர் வருகிறாரா?

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

பத்திரிகை அறிக்கைகூட கொடுக்க முடியாத அளவுக்கு மைனாரிட்டி ஓட்டு, முதல்வர் கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறது. எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் உயிரைவிட மைனாரிட்டி ஓட்டு உங்களுக்குப் பெரிதாக இருக்கிறதா?

பொதுமக்களுக்கு  நம்பிக்கை கொடுக்கும்விதமாகக்கூட முதல்வர் பேசவில்லை. திருமாவளவன், சீமான், கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஏன் இதில் அமைதியாக இருக்கின்றனர்?

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

அரசியல்ரீதியாக எதிர்க் கருத்து சொல்லுங்கள். ஆனால் மக்கள் உயிரோடு சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள். மக்கள் உயிரைக் காப்பாற்ற களத்தில் இறங்க வேண்டும்” என்றார். மேலும் கார் வெடிப்பு சம்பவத்தைக் கண்டித்து பாஜக சார்பில் கோவை முழுவதும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.