Published:Updated:

`பா.ஜ.க-தான் எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறது!' - கோவையில் வேலூர் இப்ராஹிம் பேச்சு

வேலூர் இப்ராஹிம்
வேலூர் இப்ராஹிம்

பா.ஜ.க சிறுபான்மை அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பா.ஜ.க சிறுபான்மை அணியின் தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம், கோவை பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழகத்தில் தாமரை மலர்வதை நினைத்துப் பார்க்க முடியாது. இது வடநாட்டு கட்சி என்று கூறினர். ஆனால், ஈ.வெ.ரா பூமியிலேயே தாமரை மலர்ந்துள்ளது. நாங்கள் போட்டியிட்ட ஐந்து தொகுதிகளில் ஒன்றில் வென்றுள்ளோம்.

வேலூர் இப்ராஹிம்
வேலூர் இப்ராஹிம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: `நாங்க என்ன சொல்றோம்னா..?’ - காங்கிரஸ், தி.மு.க Vs பா.ஜ.க

இது எங்கள் வளர்ச்சியின் முதல்படி. தி.மு.க-வுக்கு எதிர்க்கட்சியாக, பா.ஜ.க-தான் செயல்படுகிறது. தி.மு.க மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடும்போது, அவர்களை எதிர்த்து களம் காணக்கூடிய கட்சியாக பா.ஜ.க இருக்கிறது. இதை மக்களும் புரிந்துள்ளனர். அதனால், வரக்கூடிய காலங்களில் தாமரை பல இடங்களில் வெற்றிபெறும்.

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் விலைவாசி உயர்ந்துள்ளது. அதையெல்லாம் மறைக்க வேறு விஷயத்தைச் சொல்லி திசை திருப்புவார்கள். அதற்காகத்தான் ஒன்றிய அரசு என்பதைக் கையில் எடுத்துள்ளனர். இதனால், தி.மு.க பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை. தங்களுடைய பின்னடைவைக் காப்பாற்றத்தான் இப்படிச் சொல்கின்றனர். தி.மு.க மக்கள் விரோத அரசு என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

வேலூர் இப்ராஹிம்
வேலூர் இப்ராஹிம்

தமிழக அரசு, கொரோனாவை தவறான முறையில் கையாண்டுள்ளது. இதில் அரசு தோல்வி கண்டுள்ளது. மது ஒழிப்பே முதல் கையெழுத்து என்று தி.மு.க அரசு கூறியது. இன்று மதுக்கடையைத் திறந்து விற்பனையை ஊக்குவிப்பது மக்களுக்குச் செய்யும் துரோகம்.

கர்நாடகா, புதுச்சேரி போன்ற பல இடங்களில் மதுக்கடைகள் திறந்துள்ளனர். ஆனால், தேர்தல் நேரத்தில் அங்கு மதுக்கடைகளை மூடுவோம் என்று வாக்குறுதி கொடுத்தாக யாரும் நிரூபிக்கவில்லை. தமிழகத்தில் நாங்கள் ஆட்சியமைத்தால் மதுவிலக்கைக் கொண்டு வருவோம் என்று தி.மு.க வாக்குறுதியளித்தது. கடந்த ஆட்சியில், மதுக்கடைகள் திறந்ததற்குக் கையில் பதாகைகளை ஏந்திப் போராடினர்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

எதற்காக மக்களுக்குப் பொய் வாக்குறுதி கொடுக்க வேண்டும்? அதைத்தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம். பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகம்தான். விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் கூறியுள்ளார்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு